
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக நட்சத்திர இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த வாரம் அறிவித்தார். 2010 முதல் இந்திய அணிக்காக விளையாடிய அவர் இரண்டாவது அதிகபட்ச விக்கெட்டுகள் எடுத்து சாதனை படைத்துள்ளார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் முத்தையா முரளிதரனுக்கு நிகராக அதிக தொடர்நாயகன் விருதுகளையும் வென்று அஸ்வின் உலக சாதனை படைத்துள்ளார்.
அத்துடன் 2011 உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் ட்ராபி வெற்றியாளரான அவர் 2012 – 2024 வரை சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் கூட இந்தியா தோற்காமல் இருக்க முக்கிய பங்காற்றினார். அது போக ஐசிசி தரவரிசையில் அஸ்வின் உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் பவுலராகவும் கடந்த வருடம் ஜொலித்தார். அப்படியிருந்தும் அவருக்கு வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி தொடர்ந்து வாய்ப்பளிக்காமல் இருந்தது.
அதனால் 38 வயதாகும் அவர் வருங்காலத்தைக் கருத்தில் கொண்டு ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் வெளிநாடுகளில் வாய்ப்பை மறுத்து, தகுதியிருந்தும் கேப்டன்ஷிப், துணை கேப்டன்ஷிப் கொடுக்காமல், ஃபேர்வல் போட்டியும் கொடுக்காமல் இந்திய அணி ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு 4 அவமானங்களை செய்து ஓய்வு பெற வைத்துள்ளதாக சுனில் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் மிட்-டே பத்திரிகையில் பேசியது பின்வருமாறு.
“பேட்ஸ்மேன்களின் விளையாட்டாக இருக்கும் கிரிக்கெட்டில் அஸ்வின் அதிக தொடர்நாயகன் விருதை வென்றுள்ளார் என்பது பாராட்டுக்குரியது. ஆனால் ஒவ்வொரு முறையும் அவரை பிளேயிங் லெவனிலிருந்து வெளியே வைப்பதற்கு 5% சாக்கு இருந்தாலும் அது அணியின் சமநிலைக்காக பிடிக்கப்பட்டது. சொந்த மண்ணில் அவரை கழற்றி விடுவதற்கு எந்த வழியுமில்லை. ஏனெனில் சொந்த மண்ணில் நம்மால் ஒரு போட்டியை கூட அஸ்வின் இல்லாமல் வெல்ல முடியாது என்பது இந்திய அணிக்கு தெரியும்”
“ஒருவேளை ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் பவுலராக இருப்பவரை கழற்றி விட பிட்ச் மற்றும் சூழ்நிலை காரணமாக இருந்தால் அதே காரணிகளை வைத்து ஏன் ஐசிசி தரவரிசையில் டாப் இடங்களில் இல்லாத பேட்ஸ்மேன்களை கழற்றி விடவில்லை? அவர்களும் அந்த சூழ்நிலைகளில் சுமாராக விளையாடினார்கள். தன்னுடைய அனுபவத்தால் அஸ்வின் இந்தியாவுக்கு நல்ல கேப்டனாக உருவாகியிருப்பார்”
இதையும் படிங்க: ஸ்டோக்ஸ் விலகல்.. ரூட் கம்பேக்.. இந்தியாவுக்கு எதிரான தொடருக்காக 2 அணிகளை அறிவித்த இங்கிலாந்து.. அட்டவணை
“பின்னர் இந்தியாவின் துணை கேப்டனாகும் கௌரவம் அவருக்கு மறுக்கப்பட்டது. அதன் பின் ஒரு சாதாரண இருதரப்பு தொடரில் ஃபேர்வல் போட்டியுடன் விடைபெறும் கௌரவத்தையும் அவர் இழந்துள்ளார். அதனாலேயே 100வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் இந்திய அணியை முன்னோக்கி அழைத்துச் செல்லும் கௌரவத்தை ரோகித் வழங்கியதை பார்த்தது நன்றாக இருந்தது” என்று கூறினார்.