அவங்க 2 பேரும் இனிமே இந்திய அணிக்கு செலக்ட் ஆகுறது ரொம்ப கஷ்டம் – சுனில் கவாஸ்கர் ஓபன்டாக்

Gavaskar
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. இதனை தொடர்ந்து இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி இந்திய அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. பிப்ரவரி 24-ஆம் தேதி துவங்கும் இந்த டி20 தொடரானது ஒருவார காலகட்டத்திற்குள் முடிவடைகிறது.

indvswi

- Advertisement -

அதனைத் தொடர்ந்து மார்ச் மாத தொடக்கத்தில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரானது நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான இரு அணிகளையும் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் ஏற்கனவே அறிவித்திருந்த வேளையில் அந்த டெஸ்ட் அணியில் அதிரடியாக பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அதன்படி இந்திய அணியில் இருந்து 4 முக்கிய வீரர்கள் இந்த இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

குறிப்பாக இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களும், அனுபவம் வாய்ந்த வீரர்களுமான புஜாரா மற்றும் ரஹானே ஆகியோர் இலங்கை அணிக்கெதிராக அதிரடியாக அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். கடந்த சில ஆண்டுகளாகவே ரன் குவிக்க தடுமாறி வரும் புஜாரா மற்றும் ரஹானே ஆகியோர் தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று வந்தாலும் தங்களது நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறியதால் அவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

pujara 1

புஜாரா கடைசியாக விளையாடிய 16 டெஸ்டுகளில் 7 அரை சதம் மட்டுமே அடித்துள்ளார். அதேபோன்று ரஹானே கடைசியாக விளையாடிய 15 ஆட்டத்தில் மூன்று அரை சதங்கள் மட்டுமே அடித்துள்ளார். இதன் காரணமாகவே புஜாரா மற்றும் ரஹானே ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் மீண்டும் இந்திய அணியில் இணைவது கடினமான ஒன்று என இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ரஹானே மற்றும் புஜாரா ஆகியோர் நீக்கப்படுவார்கள் என்பது நான் எதிர்பார்த்த ஒன்றுதான். ஏனெனில் அவர்கள் இருவருமே தென் ஆப்பிரிக்க தொடரில் தங்களுக்கு கிடைத்த கடைசி வாய்ப்பில் ஓரளவுக்காவது ரன்களை குவித்து இருக்கவேண்டும். ஆனால் அவர்கள் அந்த வாய்ப்பையும் தவற விட்டதால் இந்திய அணியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் இருவரையும் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் ரஞ்சிப் போட்டியில் விளையாடுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

pujara

என்னதான் அவர்கள் ரஞ்சிப் போட்டியில் சிறப்பாக விளையாடினாலும் நிச்சயம் அவர்கள் மீண்டும் இந்திய அணியில் இணைவது என்னைப் பொருத்தவரை கடினமான ஒன்றுதான். ஏனெனில் இலங்கை தொடருக்கு பின்னர் இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாட உள்ளது. அதனை தொடர்ந்து டி20 உலகக் கோப்பை வருவதால் இந்த ஆண்டு அதிலேயே சென்று விடும். அப்படி பார்த்தால் அடுத்த ஆண்டு இருவருக்குமே 35 வயது ஆகிவிடும்.

இதையும் படிங்க : ஹார்டிக் பாண்டியா இனி வேணாம். இனி இவரையே ஆல்ரவுண்டராக விளையாட வையுங்க – வாசிம்ஜாபர் கருத்து

இதன் காரணமாக நிச்சயம் இந்திய நிர்வாகம் அனுபவ வீரர்களாக இருந்தாலும் சரி அவர்களை அணியில் இருந்து நீக்கிவிட்டு இளம் வீரர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்க வேண்டும் என்று மட்டுமே யோசிக்கும் என்பதனால் புஜாரா மற்றும் ரஹானே ஆகியோர் இந்திய அணிக்கு மீண்டும் திரும்புவது மிகவும் கடினம் என்று வெளிப்படையாக தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதுவரை இந்திய அணிக்காக 95 போட்டிகளில் விளையாடியுள்ள புஜாரா 6713 ரன்களும், 82 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரஹானே 4931 ரன்களும் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement