கவாஸ்கர், சச்சின், கோலி ஆகிய 3 இந்திய கிங்ஸ்’களை 40 வருடங்களில் இணைத்த குயின்ஸ் பார்க் மைதானம் – ஆச்சர்ய புள்ளிவிவரம் இதோ

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்தியா 2025 பெஸ்ட் சாம்பியன்ஷிப் பயணத்தை வெற்றியுடன் துவங்கியது. அதைத் தொடர்ந்து ஜூலை 20ஆம் தேதி ட்ரினிடாட் நகரில் துவங்கிய இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 2வது போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா சிறப்பாக செயல்பட்டு 438 ரன்கள் எடுத்து அசத்தியது. அதிகபட்சமாக நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி தன்னுடைய 500வது போட்டியில் சதமடித்த முதல் வீரராக உலக சாதனை படைத்து 121 ரன்கள் குவித்தார்.

அவருடன் கேப்டன் ரோஹித் சர்மா 80, யசஸ்வி ஜெய்ஸ்வால் 57, ரவீந்திர ஜடேஜா 61, ரவிச்சந்திரன் அஸ்வின் 56 என முக்கிய வீரர்கள் பெரிய ரன்களை எடுத்து இந்தியாவை வலுப்படுத்திய நிலையில் வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக கிமர் ரோச் மற்றும் ஜோமேல் வேரிக்கன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதை தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 2வது நாள் முடிவில் 86/1 ரன்கள் எடுத்து இந்தியாவை விட இன்னும் 352 ரன்கள் பின்தங்கியுள்ளது. அந்த அணிக்கு சந்தர்பால் போராடி 33 ரன்களில் ஜடேஜா சுழலில் அவுட்டாக களத்தில் கேப்டன் கிரைக் ப்ரத்வெய்ட் 37* ரன்களும் கிர்க் மெக்கென்சி 14* ரன்களும் எடுத்து விளையாடி வருகின்றனர்.

- Advertisement -

ராசியான குயின்ஸ் பார்க்:
முன்னதாக ட்ரினிடாட் நகரில் இருக்கும் குயின்ஸ் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டி இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் வரலாற்றில் 100வது டெஸ்ட் போட்டியாக அமைந்ததால் அதை நினைவுபடுத்தும் வகையில் இந்திய கேப்டன் ரோகித் சர்மாவுக்கு ஜாம்பவான் பிரையன் லாரா நினைவு பரிசை வழங்கினார். மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் 500 போட்டிகளில் விளையாடிய 4வது இந்திய வீரர் என்ற சாதனையை இந்த மைதானத்தில் படைத்த விராட் கோலி தன்னுடைய 29வது டெஸ்ட் சதத்தை அடித்து ஜாம்பவான் டான் ப்ராட்மேன் சதங்களை சமன் செய்தார்.

ஆச்சரியப்படும் வகையில் இதே மைதானத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும் தன்னுடைய 29வது டெஸ்ட் சதத்தை அடித்தார். அந்த போட்டியில் சச்சின் கிட்டத்தட்ட பவுண்டரி அடிக்க முயற்சித்து 2 ரன்களை எடுத்து தம்முடைய 29வது டெஸ்ட் சதத்தை அடித்த நிலையில் விராட் கோலி இப்போட்டியில் பவுண்டரி அடித்து தன்னுடைய 29வது சதத்தை பதிவு செய்தது மட்டுமே வித்தியாசமாகும்.

- Advertisement -

அதை விட கடந்த 1983ஆம் ஆண்டு இதே குயின்ஸ் பார்க் மைதானத்தில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஜாம்பவான் சுனில் கவாஸ்கரும் தன்னுடைய 29வது சதத்தை விளாசி அசத்தினார். அப்படி இந்திய கிரிக்கெட்டை ஆட்சி செய்த முதல் மாஸ்டர் பேட்ஸ்மேனன் சுனில் கவாஸ்கர் முன்னாள் லிட்டில் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் தற்போதைய மாஸ்டர் க்ளாஸ் பேட்ஸ்மேன் விராட் கோலி ஆகிய மூவருமே தங்களுடைய 29வது சதத்தை இந்த குயின்ஸ் பார்க் மைதானத்தில் அடித்துள்ளார்கள் என்பது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் ஒன்றாக அமைகிறது.

அது போக கடந்த 1983இல் இந்த மைதானத்தில் நடைபெற்ற போட்டி இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய வரலாற்றின் 50வது டெஸ்ட் போட்டியாக நடந்தது. அதில் 121 ரன்கள் குவித்ததும் சுனில் கவாஸ்கர் அவுட்டானது போலவே இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய இந்த வரலாற்றின் 100வது டெஸ்ட் போட்டியில் 121 ரன்கள் விளாசி விராட் கோலியும் அவுட்டாகியுள்ளார் என்பது மற்றொரு வியப்பை ஏற்படுத்தும் ஆச்சரியமாக அமைகிறது.

இதையும் படிங்க:தோனி தொடர்ந்து தீபக் சாஹரை சீண்டி வருவது ஏன்? அப்படி தோனி அவர் மீது காண்டாக என்ன காரணம் – அம்பத்தி ராயுடு பதில்

மொத்தத்தில் இந்திய கிரிக்கெட்டின் 3 தலைமுறை மகத்தான கிங் பேட்ஸ்மேன்கள் தங்களுடைய 29வது சதத்தையும் இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் மோதிய 50, 100வது டெஸ்ட் போட்டியையும் கண்ட குயின்ஸ் பார்க் மைதானம் இந்தியாவுக்கு மிகவும் ராசியாக இருந்து வருகிறது என்றால் மிகையாகாது.

Advertisement