
இந்திய கிரிக்கெட் அணி சர்வதேச அரங்கில் டாப் அணிகளில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது. அப்படிப்பட்ட இந்திய அணியில் விளையாடும் வீரர்கள் சர்வதேச அணிகளுக்கு சவாலைக் கொடுத்து அசத்துவதற்காக சிறந்த ஃபிட்னஸை கடைபிடிப்பது அவசியமாகிறது. அதற்காக ஏற்கனவே யோயோ டெஸ்ட் எனும் சோதனையை பிசிசிஐ நடைமுறையில் வைத்துள்ளது. இந்திய அணிக்கு விளையாட தேர்வாக வேண்டுமெனில் அந்த சோதனையில் தேர்ச்சியடைவது அளவுகோலாகவும் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணிக்கு பிரான்கோ எனும் புதிய ஃபிட்னஸ் சோதனையை பிசிசிஐ அறிமுகப்படுத்தியுள்ளது. 20, 40, 60 மீட்டர் என 5 வெவ்வேறு படிநிலைகளைக் கொண்ட அந்த சோதனையில் வீரர்கள் மொத்தம் 1100 மீட்டர்களை குறிப்பிட்ட நேரத்திற்குள் ஓட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த சோதனை மிகவும் மோசமானது என்று ரவிச்சந்திரன் அஸ்வின், ஏபி டீ வில்லியர்ஸ் போன்ற ஜாம்பவான்கள் எச்சரித்தனர்.
இந்நிலையில் இந்திய அணியில் பிசிசிஐ அறிமுகப்படுத்தியுள்ள பிரான்கோ ஃபிட்னெஸ் சோதனை தேவையற்றது என்று ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார். ஏனெனில் கீப்பர், பேட்ஸ்மேன், பவுலர்கள் என கிரிக்கெட்டில் விளையாடும் வீரர்களுக்கு வெவ்வேறு ஃபிட்னெஸ் தேவைப்படுவதாக அவர் கூறியுள்ளார். இது பற்றி கவாஸ்கர் பேசியது பின்வருமாறு.
“ஒரு வீரர் தங்கள் உடலை வலுப்படுத்த வேண்டிய இடத்தைப் பற்றிய பொதுவான யோசனைகளைப் பெற இந்த சோதனைகள் (ப்ரான்கோ) நல்லது என்றாலும், தேசிய அணிக்கான தேர்வை அவர்களே முடிவு செய்வது மிகவும் அதிகம். இங்கே ஒவ்வொரு மனிதரின் உடல் வித்தியாசமானது. எனவே ஒருவர் போலவே அனைவரும் உயர்தரமாக இருப்பார்கள் என்று கணிப்பது அசாத்தியமானது”
“வீரரின் சிறப்பம்சம் மற்றும் வேலை ஆகியவை கருத்தில் கொள்ளப்பட வேண்டும். எடுத்துக்காட்டாக ஒரு விக்கெட் கீப்பர் நாள் முழுவதும் நகர்ந்து கொண்டே இருப்பார். எனவே அவருக்கு மற்ற வீரர்களைக் காட்டிலும் வித்தியாசமான ஃபிட்னஸ் லெவல் தேவைப்படும். வேகப்பந்து வீச்சாளர்கள் ஸ்பின்னர்களை விட வித்தியாசமானவர்கள். பேட்ஸ்மேன்களுக்கு வித்தியாசமான ஃபிட்னஸ் தேவைப்படும். இதிலேயே ஒரே வடிவம் அனைவருக்கும் பொருந்தாது என்பதை உங்களால் பார்க்க முடிகிறது”
இதையும் படிங்க: இந்தியாவுக்கு உண்மையான போட்டியில்ல.. பேசாம அவங்களை சேத்து ஆஃப்ரோ கோப்பையை நடந்துங்க.. அஸ்வின் பேட்டி
“புதிய சோதனையின் கடுமையான அளவுறுக்கள் கடுமையாக பின்பற்றப்படாவிட்டால் நன்றாக இருக்கும். உங்களுடைய நாட்டுக்காக மிக உயர்ந்த மட்டத்தில் விளையாடுவதற்கான முக்கியமான சோதனையை எதுவும் அளவிட முடியாது. அது உங்களுடைய 2 காதுகளுக்கு இடையில் இருக்கிறது. என்னைப் பொறுத்த வரை இந்தியாவுக்காக விளையாடுபவர்களின் இதயத்தை திறக்கும் போது “இந்திய கிரிக்கெட்” என்ற 2 வார்த்தைகள் தவிர வேறு எதுவும் இருக்கக்கூடாது என்பதே முக்கியம்” எனக் கூறினார்.