
நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் ஒய்ட்வாஷ் தோல்வியை சந்தித்து மோசமான சாதனை படைத்தது. இதை தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாட உள்ளது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு தகுதி பெற இந்தியா அத்தொடரில் 4 போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
முன்னதாக நியூசிலாந்து தொடரில் இந்தியாவின் தோல்விக்கு சீனியர்கள் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி சுமாராக விளையாடியது முக்கிய காரணமானது. அதனால் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் தொடரில் அவர்கள் சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்கள். ஒருவேளை அத்தொடரிலும் சிறப்பாக செயல்படவில்லையெனில் ரோகித் சர்மா ஓய்வு பெறுவார் என்று முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய தொடரில் அசத்தாவிட்டால் அதுவே விராட் கோலி, ரோஹித் சர்மாவுக்கு கடைசி டெஸ்ட் தொடராக இருக்கும் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். அதனால் 2025 ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெறும் டெஸ்ட் தொடரில் அவர்கள் கழற்றி விடப்படலாம் என்று தெரிவிக்கும் கவாஸ்கர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “அவர்கள் மட்டுமின்றி அனைத்து வீரர்களுக்குமே நெருக்கடி ஏற்பட்டுள்ளது”
“அவர்கள் 30க்கும் மேற்பட்ட வயதில் இருப்பதால் கூடுதல் நெருக்கடியை சந்திக்கிறார்கள். நவீன கிரிக்கெட்டில் நீங்கள் எவ்வளவு அதிகமாக விளையாடுகிறீர்களோ அவ்வளவு அதிகமாக சிறப்பாக செயல்பட வேண்டும் என்று நான் சொல்வேன். ரோகித், விராட் கோலி மீது தற்போது அழுத்தம் ஏற்பட்டுள்ளதை புரிந்து கொள்ள முடிகிறது. அரிதாக அவர்கள் இருவரும் சொந்த மண்ணில் நடைபெற்ற ஒரு தொடரில் ரன்கள் அடிக்கவில்லை”
“இந்த நேரத்தில் பெங்களூருவில் இரண்டாவது இன்னிங்ஸில் விராட் கோலி 70 ரன்கள் அடித்தார் என்பதை மறக்க வேண்டாம். அந்த 2 நட்சத்திரங்களும் இத்தொடரில் அரிதாக வெற்றியில் பங்காற்ற முடியாமல் போனார்கள். ஆனால் இது போன்ற மோசமான காலங்கள் அனைவருக்குமே வரும். அதிலிருந்து நீங்கள் எப்படி மீண்டு வருகிறீர்கள் என்பதே ஒரு விளையாட்டு வீரராக உங்களுடைய குணத்தைப் பற்றியதாகும்”
இதையும் படிங்க: கே.கே.ஆர் அணி இப்படி செஞ்சதால உண்மையிலே அழுதுட்டேன்.. மனம்திறந்த – வெங்கடேஷ் ஐயர்
“அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் நாம் பார்க்க இருப்பது சுவாரசியமாக இருக்கும். இந்திய அணியின் வருங்காலம் ஆஸ்திரேலியாவில் தீர்மானிக்கப்படுவதை நாம் பார்க்க முடியும். ஆம் ஒருவேளை ரோஹித், விராட் கோலி ஆஸ்திரேலியாவில் ரன்கள் அடிக்கவில்லையெனில் புதிய இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செல்லலாம்” என்று கூறினார். அந்த வகையில் விராட் கோலி, ரோஹித் சர்மா தொடர்ந்து சிறப்பாக விளையாட வேண்டும் என்பதே பலரது விருப்பமாக இருக்கிறது.