ஐபிஎல் ப்ரிமியர் லீக் 2025 கிரிக்கெட் தொடரில் மார்ச் 23ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் தங்களது முதல் போட்டியில் பரம எதிரி மும்பையை சந்திக்கிறது. சேப்பாக்கத்தில் நடைபெறும் அந்தப் போட்டியில் சென்னை அணிக்காக எம்எஸ் தோனி அன்கேப்ட் வீரராக விளையாட உள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக 3 விதமான வெள்ளைப்பந்து ஐசிசி உலகக் கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக தோனி சாதனை படைத்தவர்.
அப்படிப்பட்ட தனித்துவமான கேப்டன்ஷிப் திறமை கொண்ட அவர் ஐபிஎல் தொடரிலும் 5 கோப்பைகளை வென்றுள்ளார். இது போக 2 சாம்பியன்ஸ் லீக் கோப்பைகளையும் வென்றுள்ள தோனி வரலாற்றின் வெற்றிகரமான கேப்டனாக சாதனை படைத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் 2019 உலகக் கோப்பையுடன் ஓய்வு பெற்ற அவர் ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார்.
ஓய்வு எப்போது:
அதனால் 2020 முதலே தோனி எப்போது ஓய்வு பெறுவார் என்பது பலரது கேள்வியாக இருக்கிறது. ஆனால் அவர்களுக்கெல்லாம் ஆச்சரியத்தைக் கொடுக்கும் வகையில் தனது ஃபிட்னஸை பயன்படுத்தி தோனி சிறப்பாகவே விளையாடி வருகிறார். குறிப்பாக வருங்காலத்தை கருத்தில் கொண்டு கடந்த வருடம் சிஎஸ்கே கேப்டன்ஷிப் பொறுப்பை ருதுராஜ் கையில் ஒப்படைத்த அவர் சாதாரண கீப்பராக மட்டும் விளையாடுகிறார்.
மேலும் 2022 முதலே முழங்கால் வலியால் பேட்டிங்கில் கடைசிக்கட்ட ஓவர்களில் மட்டுமே விளையாடும் தோனி பௌண்டரிகளையும் சிக்சர்களையும் அடித்து ரசிகர்களை மகிழ்வித்து வயதானாலும் தமது ஸ்டைல் மாறாது என்பதை நிரூபித்து வருகிறார். அப்படிப்பட்ட அவர் தம்முடைய சிஎஸ்கே அணிக்காக விரும்பும் வரை விளையாட உள்ளதாக தற்போது அறிவித்துள்ளார். ஆனால் 43 வயதில் வீட்டில் உட்காராமல் இதெல்லாம் தேவையா? என்று எதிரணி ரசிகர்கள் கிண்டலடிக்கிறார்கள்.
கவாஸ்கர் சாடல்:
அத்துடன் தோனி எப்போது ஓய்வு பெறுவார்? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்நிலையில் 43 வயதிலும் இளம் வீரர்களுக்கு நிகராக சிக்சர்களை பறக்க விடும் தோனியை ஏன் ஓய்வு பெறுமாறு கேட்க வேண்டுமென சுனில் கவாஸ்கர் சாடியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அவரது ஓய்வு பற்றி ஏன் நாம் கேள்வி கேட்க வேண்டும்? ஏன் அவர் மீது நாம் அழுத்தத்தைப் போட வேண்டும்?”
இதையும் படிங்க: மோசமான ஷாட்.. ரசிகர்களும் ரிங்கு சிங் இப்படி அவுட் ஆவதை தான் விரும்புகிறார்கள் – சேவாக் விளாசல்
“ஒவ்வொரு முறையும் மக்கள் தோனியை பற்றி கேள்வி எழுப்பும் போது அவர் அவர்களை தவறு என்று நிரூபித்து வருகிறார். அவருடைய திறமையை சந்தேகப்படாதீர்கள். இந்த வயதிலும் அவர் வெறும் பவுண்டரியை மட்டும் தொடாமல் பெரிய சிக்ஸர்களை பறக்க விடுகிறார். எனவே தோனிக்கு வயது என்பது வெறும் நம்பர் மட்டுமே” என்று கூறினார்.



