
ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி மார்ச் நான்காம் தேதி துபாயில் நடைபெறுகிறது. அதில் லீக் மற்றும் செமி ஃபைனல் சுற்றில் வெற்றி பெற்ற இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இத்தொடரில் துபாயில் இதுவரை விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் வென்ற இந்தியா ஃபைனல் போட்டியிலும் நியூசிலாந்தை தோற்கடித்து கோப்பையை வெல்லும் என்று ரசிகர்கள் நம்புகிறார்கள்.
பேட்டிங்கில் விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ராகுல், அக்சர் பட்டேல் ஆகியோர் ஓரளவு தொடர்ச்சியாக நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார்கள். பவுலிங் துறையில் ஸ்பின்னர்கள் துபாய் மைதானத்தில் நன்றாக விளையாடி எதிரணியை மடக்கிப் பிடிக்கிறார்கள். எனவே துபாயில் மீண்டும் நியூசிலாந்தை வீழ்த்த இந்தியா 100% தயாராக இருக்கிறது என்று சொல்லலாம்.
ஆனால் ஃபைனலில் நியூசிலாந்தை எதிர்கொள்ள இந்திய அணி 100% முழுமையாக இல்லை என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். அதற்கான காரணம் பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்திய அணி 100% முழுமையாக இல்லை. ஏனெனில் துவக்க வீரர்களை பார்க்கும் போது இந்தியா நம்பிக் கொண்டிருக்கும் நல்ல துவக்கத்தை கில் – ரோஹித் இதுவரை கொடுக்கவில்லை”
“எனவே அந்த விஷயத்தில் நம்மிடம் திருப்திகரமான செயல்பாடு இல்லை. அதே போல புதிய பந்தில் ஆரம்பகட்ட ஓவர்களில் நீங்கள் தாக்கத்தை ஏற்படுத்த விரும்புவீர்கள். குறிப்பாக முதல் 10 ஓவர்களில் நீங்கள் 2 – 3 விக்கெட்டுகள் எடுப்பதை விரும்புவீர்கள். அதுவும் இந்தத் தொடரில் அதிகமாக நடைபெறவில்லை
“அதே போல மிடில் ஓவர்களில் நிறைய ரன்கள் கொடுக்கவில்லை என்றாலும் நமக்கு விக்கெட்டுகள் கிடைக்கவில்லை. எனவே நீங்கள் இந்த இடங்களில் முன்னேற வேண்டும். ஃபைனல் செல்வதற்கு முன் அவற்றில் முன்னேறினால் நாம் கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். அதே சமயம் ஃபைனலுக்கு நாம் 4 சுழல் பந்து வீச்சாளர்களுடன் செல்ல வேண்டும்”
இதையும் படிங்க: விராட் கோலியின் அற்புத கேரியருக்கு அந்த வெற்றி நல்ல ஃபினிஷிங்கா இருக்கும்.. நிறைவேறாத ஆசை பற்றி ஏபிடி
“அதை ஏன் நாம் மாற்ற வேண்டும்? குல்தீப், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் அணிக்குள் சேர்க்கப்பட்டுள்ளது எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைப் பார்த்தோம். எந்த ஃபார்மெட்டாக இருந்தாலும் விக்கெட் எடுக்கும் பந்துகளே சிறந்த டாட் பந்துகளாகும். இந்த விஷயங்களில் நமது அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எனவே அதை மாற்ற வேண்டியது இல்லை” என்று கூறினார். மொத்தத்தில் ஓரிரு குறைகளையும் சரி செய்து இறுதிப்போட்டியில் இந்தியா கோப்பையை வெல்ல தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.