
இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் கேப்டனாக ரோஹித் சர்மா நீக்கப்பட்டு சுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவரது தலைமையில் 2023 உலகக் கோப்பையில் 11 தொடர்ச்சியான வெற்றிகளுடன் இறுதிப் போட்டிக்கு சென்ற இந்தியா 2024 டி20 உலகக் கோப்பையை வென்றது. மேலும் 2025 சாம்பியன்ஸ் ட்ராபியையும் கேப்டனாக வென்ற ரோஹித் சர்மா 2027 உலகக்கோப்பை வரை இந்தியாவை தலைமைத் தாங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அப்போது 40 வயதில் அவரால் அசத்த முடியுமா என்று சந்தேகிக்கும் தேர்வுக்குழு இப்போதே சுப்மன் கில்லை புதிய கேப்டனாக தேர்ந்தெடுத்துள்ளது. இருப்பினும் அந்த முடிவு பெரும்பாலான இந்திய ரசிகர்களிடம் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது என்றே சொல்லலாம். இந்நிலையில் இந்திய அணியின் நலன் மற்றும் வருங்காலத்தைக் கருத்தில் கொண்டு இம்முடிவை ரோஹித் சர்மாவே வரவேற்பார் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மேலும் டெஸ்ட், டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற ரோஹித் சர்மா 2027 உலக கோப்பையில் விளையாடுவது கடினம் என்றும் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். அதனால் 2027 உலகக் கோப்பைக்கு முன் ரோஹித் சர்மா ஓய்வு பெறும் சோகச் செய்தியை கேட்க ரசிகர்கள் தயாராக இருக்குமாறு அவர் கூறியுள்ளார். இது பற்றி கவாஸ்கர் பேசியது பின்வருமாறு. “ரோஹித் சர்மா 2027 உலகக் கோப்பைக்கு தயாராக இருப்பாரா என்பது நமக்குத் தெரியாது”
“தற்போது அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாட உள்ளார். மறுபுறம் இந்திய அணி ஒரு வருடத்தில் மிகவும் குறைந்த ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடுகிறது. பெரும்பாலும் டெஸ்ட் மற்றும் டி20 தொடர்கள் மட்டுமே நடைபெறுகின்றன. ஒரு வருடத்தில் 5 – 7 ஒருநாள் போட்டிகளில் விளையாடினால் உலகக் கோப்பை போன்ற பெரியத் தொடருக்கு தயாராக போதுமானதாக இருக்காது”
“அப்படி அணியில் ரோஹித் நிலையாக இருப்பாரா என்பது தெரியாததாலேயே கில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தனிப்பட்ட முறையில் ரோஹித் இந்திய அணிக்காக சாம்பியன்ஸ் ட்ராபி, டி20 உலகக்கோப்பையை வென்று நிறைய செய்துள்ளார். இருப்பினும் ரோஹித் சர்மா இம்முடிவை ஏற்றுக்கொள்வார். ஏனெனில் நீங்கள் 2 வருடத்தை முன்னோக்கி பார்க்கையில் முழுமையாக தயாராவதற்கு இளம் கேப்டன் தேவை. அதையே தேர்வுக்குழுவினர் செய்துள்ளனர்”
இதையும் படிங்க: இந்தியாவின் முடிவு சரியே.. ஆனா விராட், ரோஹித் வந்தாலும் ஆஸி தான் ஜெய்க்கும்.. பின்ச் கணிப்பு
“நீங்கள் உலகக் கோப்பையில் விளையாட உறுதியாக இல்லாத போது அடுத்த 2 வருடங்களில் எதையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை வரும். எனவே இன்னும் சோகமான செய்திகளுக்கு தயாராகுங்கள். இனிமேல் ஒருநாள் போட்டிகள் அரிதாகவே இருக்கும். அதற்கு தயாராக நீங்கள் விஜய் ஹசாரே உள்ளூர் கோப்பையில் தொடரில் விளையாடி பயிற்சி எடுக்க வேண்டும்” என்று கூறினார்.