
இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பையை 2 – 2 என்ற கணக்கில் இளம் இந்திய அணி போராடி பகிர்ந்து கொண்டது. அத்தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜஸ்ப்ரித் பும்ரா 3 போட்டிகளில் மட்டுமே விளையாடினார். ஆனால் அந்த 3 போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற தவறியதால் அவரை பலரும் விமர்சித்து வருகிறார்கள்.
இத்தனைக்கும் கடந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடரில் 5 போட்டிகளிலும் விளையாடிய பும்ரா 32 விக்கெட்டுகள் எடுத்து இந்தியாவின் வெற்றிக்கு தனி ஒருவனாக போராடினார். அத்தொடரின் இறுதியில் சந்தித்த காயத்தால் முதுகில் அறுவை சிகிச்சை செய்த அவர் இங்கிலாந்தில் 5 போட்டிகளில் விளையாட முடியாது என்பதை ஆரம்பத்திலேயே தெரிவித்து விட்டார். இருப்பினும் நாட்டுக்காக முழுமையாக விளையாடாத அவரை பலரும் விமர்சிக்கிறார்கள்.
இந்நிலையில் கிரிக்கெட்டில் யாருமே இன்றியமையாதவர் கிடையாது என்று ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். எனவே ஜஸ்ப்ரித் பும்ரா முழுமையாக விளையாடத் தவறினால், டெஸ்ட் கிரிக்கெட் அவரை விட்டு நகர்ந்து விடும் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இது பற்றி கவாஸ்கர் கூறியுள்ளது பின்வருமாறு. “இங்கே யாரும் இன்றியமையாதவர் கிடையாது”
“அதனாலேயே ஜஸ்ப்ரித் பும்ரா எப்போது விளையாட வேண்டும் என்பதை இப்போது தேர்வுக்குழுவினர் முடிவெடுப்பது அவசியமாகிறது. சமீபத்திய இங்கிலாந்து தொடரில் அவருடைய தோற்றங்கள் குறித்து ஏற்கனவே நிறைய விவாதங்கள் உள்ளன. நியாயமான முறையில் அவர் ஆரம்பத்திலேயே ஐந்தில் 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுவேன் என்று தேர்வாளர்களிடம் சொல்லி விட்டார்”
“அதையும் தாண்டி 5வது போட்டியில் நிச்சயம் வென்றாக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால் அவரைப் பற்றி மீண்டும் அதிகப்படியான விவாதங்கள் எழுந்தன. நிச்சயமாக ஏதேனும் ஒரு கட்டத்தில் பும்ரா ஃபிட்டாக இருக்கும் போது இந்திய கிரிக்கெட்டின் நலனுக்காக அவர் விளையாட வேண்டும். ஆனால் கடைசிப் போட்டியில் பெற்ற வெற்றி கிரிக்கெட்டில் யாருமே இன்றியமையாதவர் கிடையாது என்பதைக் காட்டியுள்ளது. இந்த விளையாட்டு யார் இல்லாவிட்டாலும் தொடர்ந்து நகர்ந்து கொண்டிருக்கிறது”
இதையும் படிங்க: சுப்மன் கில்லால் டி20யில் முடியாதுன்னு நினைக்காதீங்க.. கோலி மாதிரி இந்த 2யும் செய்வாரு.. ஹர்பஜன் ஆதரவு
“இந்தியா அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு செல்ல வேண்டுமெனில் 2 மாத ஓய்வுக்கு பின் அக்டோபர், நவம்பரில் நடைபெறும் 4 போட்டிகளிலும் (2 வெஸ்ட் இண்டீஸ், 2 தென்னாப்பிரிக்கா) விளையாட வேண்டும். ஆனால் சமீபத்தில் நிறைவு பெற்ற தொடர் விஷயங்கள் வேறு மாதிரியாக நடக்கும் என்று காட்டுகிறது. அணியை தேர்ந்தெடுப்பதில் தேர்வுக்குழுவினர் முக்கிய பங்காற்றுகிறார்கள். ஆனால் பிளேயிங் லெவனை தேர்ந்தெடுப்பது அணி நிர்வாகத்தின் கையில் இருக்கிறது” என்று கூறினார்.