
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆனது தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. அதுமட்டுமின்றி எஞ்சியுள்ள மூன்று போட்டிகளிலும் இந்திய அணியே வெற்றி பெறும் என்று சொல்லும் அளவுக்கு தங்களது ஆதிக்கத்தை இங்கிலாந்தில் தற்போது இந்திய அணி நிலை நிறுத்தியுள்ளது.
ஏனெனில் இந்திய அணியில் உள்ள பந்துவீச்சாளர்கள் அனைவரும் பிரமாதமாக பந்துவீசி வருகிறார்கள். சரியான நேரத்தில் பேட்ஸ்மேன்களும் கைகொடுக்க இந்திய அணி பலமாக உள்ளது. அதே வேளையில் இங்கிலாந்து அணியை பொறுத்தவரை குறிப்பிட்ட மூன்று பேர்கள் மட்டுமே சிறப்பாக செயல்படுவதால் அவர்கள் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் இந்த தொடரில் இந்திய அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி எழுச்சி பெற வேண்டுமெனில் இதனை செய்தே ஆக வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்தியாவின் ஆட்டம் இங்கிலாந்து வீரர்களின் மத்தியில் மனதளவில் தாக்கத்தை கொடுத்திருக்கும். அவர்கள் அதிலிருந்து மீண்டுவர நிச்சயம் சூப்பர்மேன் போன்ற ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே இந்த தொடரில் கம்பேக் கொடுக்க முடியும்.
கிரிக்கெட் என்பது எப்போதும் அதிசயங்கள் நிகழக்கூடிய ஒரு இடம். லார்ட்ஸ் போட்டியில் கூட ஒரு கட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெறும் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் கடைசி நாளின் போது அப்படியே தலைகீழாக மாறி இந்திய அணி வெற்றி பெற்றது. இதனால் எப்போதும் என்ன வேண்டுமானாலும் கிரிக்கெட் களத்தில் நடக்கும். இங்கிலாந்து அணியை பொருத்தமட்டில் பென் ஸ்டோக்ஸ் போன்று ஒரு திறன் படைத்த வீரரை அந்த அணி மிஸ் செய்கிறது.
மேலும் பேட்டிங் யூனிட் மொத்தமும் ஜோ ரூட்டை மட்டுமே நம்பி உள்ளதால் அவர்களுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது என கவாஸ்கர் கூறியுள்ளார். இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் 25-ஆம் தேதி லீட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.