மகத்தான யுவி – தோனி பார்ட்னர்கள் மாதிரி வருவாங்க, பண்ட் – பாண்டியாவை பாராட்டும் ஜாம்பவான், முழுவிவரம்

MS DHoni Yuvraj Singh Hardik Pandya Rishabh Pant
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்று வந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அபாரமாக செயல்பட்ட இந்தியா 2 – 1 என்ற கணக்கில் தொடரை வென்று கோப்பையை முத்தமிட்டது. இத்தொடரின் முதல் 3 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றதால் வெற்றியாளர்களை தீர்மானிப்பதற்காக மான்செஸ்டரில் நடைபெற்ற கடைசி போட்டியில் முதலில் பேட்டிங் செய்தது இங்கிலாந்து மீண்டும் இந்திய பவுலர்களின் தரமான பந்துவீச்சில் 45.5 ஓவர்களில் 259 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜானி பேர்ஸ்டோ ஜோ ரூட் ஆகியோர் அடுத்தடுத்து டக் அவுட்டாகி ஏமாற்றிய அந்த அணிக்கு அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 60 ரன்களும் ஜேசன் ராய் 41 ரன்களும் எடுத்தனர்.

இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 4 விக்கெட்டுகளும் சஹால் 3 விக்கெட்டுகளும் எடுத்தனர். அதைத் தொடர்ந்து 260 என்ற இலக்கை துரத்திய இந்தியாவுக்கு ஷிகர் தவான் 1, ரோகித் சர்மா 17, விராட் கோலி 17, சூர்யகுமார் யாதவ் 16 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இங்கிலாந்தின் தரமான பந்துவீச்சில் சொற்ப ரன்களில் நடையைக் கட்டியதால் 72/4 என ஆரம்பத்திலேயே தடுமாறியது. அதனால் 2-வது போட்டியில் 100 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது போல் படுதோல்வி உறுதியென இந்திய ரசிகர்கள் கவலையடைந்த போது ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட் மற்றும் ஹர்டிக் பாண்டி ஆகியோர் மேற்கொண்டு விக்கெட்டை விடாமல் நிதானமாகவும் நங்கூரமாக பேட்டிங் செய்தனர்.

- Advertisement -

வெற்றி பார்ட்னர்ஷிப்:
17-வது ஓவரில் ஜோடி சேர்ந்த இவர்கள் ஆரம்பத்தில் மெதுவாக ரன்களை சேர்த்து நேரம் செல்ல செல்ல அதிரடியாக பவுண்டரிகளை விளாசி 36-வது ஓவர்கள் வரை அற்புதமாக பேட்டிங் செய்து 133 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து போட்டியை தலைகீழாக இந்தியாவின் பக்கம் கொண்டு வந்தனர். இதில் 10 பவுண்டரியுடன் 71 (55) ரன்களில் வெற்றி உறுதி செய்து பாண்டியா ஆட்டமிழக்க மறுபுறம் அட்டகாசமாக பேட்டிங் செய்த ரிஷப் பண்ட் 16 பவுண்டரி 2 சிக்சருடன் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை அடித்து 125* (113) ரன்கள் விளாசி இந்தியாவிற்கு பினிஷிங் கொடுத்தார்.

குறிப்பாக கடைசியில் 25 ரன்கள் தேவைப்பட்ட போது 4, 4, 4, 4, 4, 1, 4 என அடுத்தடுத்த பவுண்டரிகளை தெறிக்கவிட்ட ரிசப் பண்ட் பினிஷிங் மாஸ் கொடுத்ததால் 261/5 (42.1) ரன்களை எடுத்த இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 2014க்குப்பின் வலுவான இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் மண்ணைக் கவ்வ வைத்து கோப்பையை வென்றது. இந்த வெற்றிக்கு சதமடித்த முக்கிய பங்காற்றிய பண்ட் ஆட்ட நாயகனாகவும் தொடர் முழுவதும் கலக்கிய பாண்டியா தொடர் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டனர்.

- Advertisement -

யுவி – தோனி மாதிரியே:
இப்போட்டியில் இவர்கள் மட்டும் பார்ட்னர்ஷிப் அமைக்காமல் போயிருந்தால் நிச்சயம் இந்தியா தோல்வி அடைந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அந்த அளவுக்கு அபாரமாக பேட்டிங் செய்த அவர்களை பார்த்த போது வரலாற்றில் இதே போல் நிறைய பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றிகளை பெற்றுக்கொடுத்த நட்சத்திரங்கள் எம்எஸ் தோனி – யுவராஜ் சிங் நியாபகம் வருவதாக இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் பாராட்டியுள்ளார். அத்துடன் தற்போது இளம் வீரர்களாக இருக்கும் இவர் வருங்காலத்தில் அவர்களின் இடத்தை இந்திய வெள்ளைப் பந்து அணியில் நிரப்புவார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்து இது பற்றி பேசியது பின்வருமாறு.

“அது நிச்சயமாக நடைபெறும். யுவராஜ் சிங் மற்றும் தோனி ஆகியோரை போல இந்தியா தடுமாறியபோது நிலைத்து நின்று பெரிய சிக்சர்களை அடித்து நங்கூரமாக நின்ற ஹர்திக் பாண்டியா – ரிஷப் பண்ட் ஆகியோர் சிங்கிள், டபுள் ரன்களையும் சிறப்பாக ஓடி எடுத்தார்கள். அந்த வகையில் இந்த ஜோடி அந்த ஜோடியை போலவே இந்தியாவுக்கு அமைய துவங்கியுள்ளது. தோனி மற்றும் யுவராஜ் சிக்ஸர்கள் அடித்தது போலவே பண்ட் மற்றும் பாண்டியா ஆகியோர் இந்திய ரசிகர்களின் இதயங்களை வெல்வார்கள் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.

இந்திய வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் இந்தியா தடுமாறிய பல போட்டிகளில் மிடில் ஆர்டரில் வலது – இடது கை ஜோடியாக சேர்ந்த எம்எஸ் தோனி மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் நிறைய வரலாற்று வெற்றிகளை பெற்றுக் கொடுத்த மகத்தான பார்ட்னர்களாக ரசிகர்களின் மனதில் இன்றும் நிற்கிறார்கள்.

சொல்லப்போனால் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் 67 போட்டிகளில் 51.75 என்ற அபாரமான சராசரியில் ரன்களை குவித்த இவர்கள் கடந்த 2017இல் இங்கிலாந்துக்கு எதிராக 25/3 என தடுமாறிய போது 256 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவுக்கு பெற்றுக் கொடுத்த வெற்றியை ரசிகர்கள் மறக்க முடியாது. அதேபோல் 2011 உலகக் கோப்பை பைனல் உட்பட நிறைய வரலாற்று பார்ட்னர்ஷிப் அமைத்த அந்த ஜோடியை போலவே வருங்காலத்தில் பண்ட் – பாண்டியாவும் நல்ல பார்ட்னர்களாக உருவெடுப்பார்கள் என்று கவாஸ்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Advertisement