- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்தக் காரணத்தால் சாம்பியன்ஸ் ட்ராபியில் கோலி அசத்துவாரு.. இந்தியா ஜெயிச்சா டான்ஸ் காத்திருக்கு.. கவாஸ்கர்

ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி துவங்குகிறது. அதில் இந்திய அணி தங்களுடைய போட்டிகளை துபாயில் விளையாட உள்ளது. அந்தத் தொடருக்கு முன்பாக இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறும் ஒருநாள் தொடரின் 2வது போட்டியில் சதத்தை அடித்த கேப்டன் ரோஹித் சர்மா ஃபார்முக்கு திரும்பியது இந்திய அணிக்கு பலமாக பார்க்கப்படுகிறது.

இருப்பினும் பேட்டிங் துறையின் முதுகெலும்பாக கருதப்படும் விராட் கோலி இன்னும் பெரிய ரன்கள் அடிக்காதது பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் விராட் கோலி நிச்சயம் சிறப்பாக விளையாடுவார் என்று ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ஏனெனில் அழுத்தமான பெரியப் போட்டிகளில் அசத்தும் திறமை விராட் கோலியிடம் இயற்கையாகவே இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

கவாஸ்கர் நம்பிக்கை:

மேலும் இம்முறை இந்தியா சாம்பியன்ஸ் கோப்பை வென்றால் 2013 கங்னம் ஸ்டைல் நடனமாடியது போல இம்முறையும் விராட் கோலி ஏதேனும் தனித்துவமான நடனம் ஆடக்கூடும் என்று கவாஸ்கர் கலகலப்பாக தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “விராட் கோலி பெரியப் போட்டிகளுக்கான பிளேயர். சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவுக்காக ரன்கள் அடிக்க வேண்டும் என்ற விஷயத்தை விட வேறு எதுவும் அவருக்கு அதிக உத்வேகத்தை கொடுக்க முடியாது”

“2013 சாம்பியன்ஸ் ட்ராபியை கடைசியாக வென்ற பின் விராட் கோலி கங்னம் ஸ்டைல் நடனத்தை ஆடிக் கொண்டாடினார். அதே போல இம்முறையும் இந்தியா வென்றால் அவரிடம் நாம் மற்றும் ஒரு தனித்துவமான கொண்டாட்டத்தைப் பார்க்க முடியும். திறமை மட்டுமின்றி இந்திய அணியில் நல்ல ஒற்றுமை இருப்பதால் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை மீண்டும் வெல்லக்கூடிய ஒரு அணியாக அவர்கள் இருக்கிறார்கள்”

- Advertisement -

ஒற்றுமையான இந்தியா:

“இந்திய அணியில் ஒற்றுமை நன்றாக இருக்கிறது. சமீபத்திய பிசிசிஐ விருதுகள் வழங்கும் விழாவில் ஒரு வீரர் விருதை வென்ற போது சக வீரர்கள் அதை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள். அந்த வகையில் ஒருவருக்கொருவர் சிரித்து மகிழ்ச்சியுடன் இருக்கும் அணி ஒற்றுமை மிகுந்த அணியாகும். அவர்கள் களத்திலும் ஒருவரை ஒருவர் சார்ந்து நாட்டுக்காக விளையாடுவார்கள்” எனக் கூறினார்.

இதையும் படிங்க: சிராஜை விட கொல்கத்தா கோட்டா ராணா பெருசா? 5 பேர் எதுக்கு? கம்பீரின் தேர்வை விளாசும் ரசிகர்கள்

முன்னதாக 2017 சாம்பியன்ஸ் டிராபியில் விராட் கோலி தலைமையில் ஃபைனலில் இந்திய அணி பாகிஸ்தானிடம் தோல்வியை சந்தித்தது. இம்முறை ரோகித் சர்மா தலைமையில் களமிறங்கும் இந்தியா தங்களது முதல் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. அடுத்ததாக பிப்ரவரி 23ஆம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -