- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இங்கயே இப்படின்னா அங்க நினச்சு பாருங்க.. பும்ரா மாதிரி அர்ஷ்தீப்புக்கு சான்ஸ் கொடுங்க.. கவாஸ்கர் ஆதரவு

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய கிரிக்கெட் அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த வருடம் முதல் போட்டியில் அயர்லாந்தை வீழ்த்திய இந்தியா 2வது போட்டியில் பாகிஸ்தானை 6 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அதே வேகத்தில் அமெரிக்காவையும் தோற்கடித்த இந்திய அணி தன்னுடைய கடைசி போட்டியில் கனடாவை சந்திக்கிறது.

இந்த வெற்றிக்கு நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்ப்ரித் பும்ரா 2 போட்டிகளில் ஆட்டநாயகன் விருது வென்று முக்கிய பங்காற்றினார். அதே போல அமெரிக்காவுக்கு எதிரான 3வது போட்டியில் அரஷ்தீப் சிங் வெறும் 9 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகளை எடுத்து ஆட்டநாயகன் விருதை வென்றார். அதன் வாயிலாக டி20 உலகக் கோப்பை வரலாற்றில் சிறந்த பவுலிங்கை பதிவு செய்த இந்திய வீரர் என்ற சாதனையும் அவர் படைத்தார்.

- Advertisement -

கவாஸ்கர் பாராட்டு:
இந்நிலையில் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டிலேயே அர்ஷ்தீப் சிங் பந்தை அற்புதமாக ஸ்விங் செய்வதாக ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். அப்படியானால் அதிகமாக ஸ்விங் ஆகக்கூடிய சிவப்பு நிற பந்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் எந்தளவுக்கு ஸ்விங் செய்வார் என்பதை நினைத்துப் பார்க்குமாறு கவாஸ்கர் கூறியுள்ளார். எனவே பும்ரா போல பெஸ்ட் கிரிக்கெட்டிலும் அசத்தும் திறமை அவரிடம் இருப்பதாக கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

அதனால் விரைவில் அர்ஷ்தீப் சிங்கிற்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் வாய்ப்பை இந்திய தேர்வுக் குழு வழங்க வேண்டுமென பரிந்துரைக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “கடினமான லென்த்தில் வீச முயற்சித்த அவர் பந்தை வலது கை பேட்ஸ்மேன் பக்கம் திருப்ப முயற்சித்தார். இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக பந்தை வெளியே இழுக்க முயற்சித்தார். அதுவே அவருடைய லென்த்”

- Advertisement -

“அந்த 2 பந்துகளையும் அவர் வீசுவது சிறப்பானது. இருப்பினும் அவர் அதிகப்படியான யார்கர் பந்துகளை வீச முயற்சிக்கவில்லை. மாறாக தொடர்ந்து கடினமான லென்த் பந்துகளை வீச பார்க்கிறார். இந்த நேரத்தில் பும்ரா போல டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அவர் மிகவும் சிறந்த பவுலராக வருவார் என்று நான் நம்புகிறேன். ஏனெனில் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டிலேயே அவர் இந்தளவுக்கு பந்தை ஸ்விங் செய்கிறார்”

இதையும் படிங்க: ஏற்கனவே பெய்த மழையில் இது வேறயா.. ஃபிளைட் நம்பர் ஈகே 601 போங்க.. பாகிஸ்தானை சாடிய வாசிம் அக்ரம்

“அப்படியானால் சிவப்பு நிற பந்தில் அவரால் எவ்வளவு ஸ்விங் செய்ய முடியும் என்பதை கற்பனை செய்து பாருங்கள். எனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரையும் இந்திய தேர்வுக்குழு ஒரு தேர்வாக பார்க்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்” எனக் கூறினார். மொத்தத்தில் 2022 முதல் இந்திய அணிக்காக வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் விளையாடி வரும் அவருக்கு வருங்காலங்களில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பும் கிடைக்கும் என்று நம்பலாம்.

- Advertisement -