
இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடி வந்த தமிழகத்தைச் சேர்ந்த நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 38 வயதில் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2010 முதல் 3 வகையான கிரிக்கெட்டிலும் இந்தியாவுக்காக விளையாடி வந்த அவர் 765 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். அதன் வாயிலாக இந்தியாவுக்காக இரண்டாவது அதிக சர்வதேச விக்கெட்டுகளை எடுத்த வீரராகவும் அஸ்வின் சாதனை படைத்துள்ளார்.
மேலும் 2012 – 2024 வரை சொந்த மண்ணில் இந்திய அணி ஒரு டெஸ்ட் தொடரில் கூட தோற்காமல் வெற்றி நடை போட அஸ்வின் முக்கிய பங்காற்றினார். அது போக முத்தையா முரளிதரனுக்கு நிகராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக தொடர்நாயகன் விருதுகளையும் வென்று அஸ்வின் உலக சாதனை படைத்துள்ளார். ஆனாலும் வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் அவருக்கு இந்திய அணி தொடர்ச்சியாக வாய்ப்பு வழங்குவதில்லை.
அதனால் தற்போது நடைபெறும் ஆஸ்திரேலிய தொடரின் பாதியிலேயே அஸ்வின் 38 வயதில் வருங்கால வீரர்களுக்கு வழிவிட்டு ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் தமிழக வீரர் என்பதால் அஸ்வினை ஒதுக்குவதற்கு இந்திய அணியில் பல வருடங்களாகவே சூழ்ச்சிகள் நடைபெற்றதாக சுப்ரமணியம் பத்ரிநாத் கூறியுள்ளார். ஆனாலும் அதை தாண்டி ஃபீனிக்ஸ் பறவை போல் அஸ்வின் தம்முடைய திறமையால் சாதித்துள்ளதாக அவர் பாராட்டியுள்ளார்.
இது பற்றி பத்ரிநாத் தனது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “இந்த அறிவிப்பு எனக்கு மிகப்பெரிய ஆச்சர்யம். உண்மையில் அஸ்வின் நன்றாக நடத்தப்படவில்லை என்று நான் நினைக்கிறேன். ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற முதல் போட்டியுடன் அஸ்வின் விடை பெற விரும்பியதாக ரோகித் சர்மா சொன்னார். தமக்கு முன்பாக வாஷிங்டன் சுந்தர் விளையாடிய போது அஸ்வின் விடை பெற விரும்பினார்”
“அது அவர் மகிழ்ச்சியாக உணரவில்லை என்பதை சொல்கிறது. உண்மையில் தமிழ்நாட்டில் கிரிக்கெட்டராக இருப்பது பெரிய விஷயம் என்று சொல்வேன். அதற்கு நிறைய காரணம் உள்ளது. ஏனெனில் மற்ற மாநிலங்களில் உள்ள வீரர்களுக்கு அதிக வாய்ப்பு கிடைக்கிறது. அதையும் தாண்டி அஸ்வின் 500 விக்கெட்டுகள் எடுத்து ஜாம்பவானாக வந்துள்ளார்”
“அவர் எவ்வளவு கடினத்தை சந்தித்திருப்பார் என்று நினைத்து பாருங்கள். பல்வேறு தருணங்களில் அவரை ஒதுக்க முயற்சிகள் நடைபெற்றது. ஆனால் ஒவ்வொரு முறையும் அவர் ஃபீனிக்ஸ் பறவை போல கம்பேக் கொடுத்தார். அஸ்வின் ஒருநாள் விடைபெறுவார். ஆனால் அவர் இப்படி விடைபெறக்கூடாது. அது புகழ்பெற்றதாக இருக்க வேண்டும். அவர் அதற்கு தகுதியானவர்”
இதையும் படிங்க: ஹெட்டை முடித்த கோலியின் மாஸ்டர் பிளான்.. வேடிக்கை பார்த்த ரோஹித்.. பேசாம இவரே கேப்டனா இருக்கலாம்
“இப்படி ஓய்வு பெற்றது நியாயமற்றது. அவர் நன்றாக நடத்தப்படவில்லை. தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதால் அவர் இந்த நிலைமைக்கு ஆளாகியுள்ளார். இதுவே மற்ற மாநிலத்தையும் சேர்ந்த வீரருக்கு இப்படி நடந்திருக்காது என்று நான் சொல்வேன். அஸ்வினுக்காக வருந்துகிறேன். அவருடைய ஓய்வு எப்படி இருந்திருக்கக் கூடாது” என்று கூறினார்.