36 வயசுன்னா செலக்டட்.. பேசாம சென்னை வந்துருங்க.. ரோஹித் சர்மாவுக்கு முன்னாள் சிஎஸ்கே வீரர் அழைப்பு

Rohit Sharma CSK
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடர் முதல் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா செயல்படுவார் என்று அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை குஜராத் அணியின் கேப்டனாக இருந்த பாண்டியாவை மும்பை நிர்வாகம் டிரேடிங் முறையில் வலுக்கட்டாயமாக வாங்கிய போதே இதற்கான சந்தேகங்கள் எழுந்தன.

தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள மும்பை அணியை ஏராளமான ரசிகர்கள் விமர்சிப்பதுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின் தொடர்வதையும் நிரூபித்து வருகின்றனர். ஏனெனில் சச்சின் தலைமையில் ஒரு கோப்பையை வெல்வதற்கே திண்டாடி வந்த மும்பைக்கு 2013ஆம் ஆண்டு கேப்டனாக பொறுப்பேற்ற முதல் வருடத்திலேயே ரோகித் சர்மா சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தார்.

- Advertisement -

சென்னைக்கு வாங்க:
அதே வருடத்தில் சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பையும் வென்று கொடுத்த அவர் 2015, 2017, 2019, 2020 ஆகிய வருடங்களில் மொத்தம் 5 ஐபிஎல் கோப்பைகளை வென்று மும்பையை வெற்றிகரமான அணியாக சாதனை படைக்க வைத்தார். அதன் காரணமாக இந்தியாவின் கேப்டனாகவும் முன்னேறிய அவர் 2023 உலகக் கோப்பையில் ஃபைனல் வரை செல்வதற்கு முக்கிய பங்காற்றி நன்றாகவே செயல்பட்டார்.

அந்த வகையில் என்ன தான் கோடிகளை கொடுத்தாலும் 5 கோப்பைகளை வென்று கொடுத்த நன்றி மற்றும் விஸ்வாசம் இல்லாமல் ரோஹித்தை கழற்றி விட்டது பெரும்பாலான மும்பை ரசிகர்களிடமே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழ்நிலையில் ரோகித் சர்மா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஜெர்ஸியை அணிந்திருப்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டுள்ள முன்னாள் வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத் “இது நடந்தால் எப்படி இருக்கும்” என்று ட்விட்டரில் கூறியுள்ளது வைரலாகி வருகிறது.

- Advertisement -

அதாவது மதிக்காத மும்பையிலிருந்து வெளியேறி ரோஹித் சென்னை அணிக்கு விளையாடினால் நன்றாக இருக்கும் என்ற வகையில் சுப்பிரமணியம் பத்ரிநாத் மறைமுகமாக கூறியுள்ளார். அவர் கூறுவது போல 42 வயதாகும் தோனி விரைவில் ஓய்வு பெறுவார் என்பதால் அதன் பின் சென்னையை வழிநடத்துவதற்கு அனுபவம் மிகுந்த ரோகித் சர்மா மிகவும் சரியானவராக இருப்பார் என்றே சொல்லலாம்.

இதையும் படிங்க: இந்தியா – தெ.ஆ முதல் ஒன்டே நடைபெறும் ஜோஹன்ஸ்பர்க் மைதானம் எப்படி? வரலாற்று புள்ளிவிவரம்.. பிட்ச் ரிப்போர்ட்

அத்துடன் பொதுவாகவே சென்னை அணியில் 30 வயதை கடந்த வீரர்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கப்பட்டு வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. அதனால் 36 வயதாகும் நீங்கள் எங்களுடைய அணியில் விளையாட தகுதியானவர் என்று சில சென்னை ரசிகர்களும் தெரிவிக்கின்றனர். மேலும் எங்கள் அணிக்கு விளையாட வந்தால் தோனிக்கு பின் ஓய்வு பெறும் வரை கேப்டனாக செயல்படலாம் என்றும் கணிசமான சென்னை ரசிகர்கள் ரோகித் சர்மாவுக்கு அழைப்பு விடுப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement