18 பந்தில் 50 ரன்ஸ்.. 6 ஓவருக்குள் குஜராத்தை தெறிக்கவிட்ட டு பிளேஸிஸ்.. லெஜெண்ட் கெயிலை முந்தி 2 மாஸ் சாதனை

- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மே 4ஆம் தேதி நடைபெற்ற 52வது லீக் போட்டியில் குஜராத்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு தோற்கடித்தது. பெங்களூருவில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் வெறும் 148 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக சாருக்கான் 37, ராகுல் திவாட்டியா, 35 டேவிட் மில்லர் 30 ரன்கள் எடுத்தனர்.

பெங்களூரு சார்பில் அதிகபட்சமாக யாஷ் தயாள், சிராஜ், விஜயகுமார் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். பின்னர் சேசிங் செய்த பெங்களூரு அணிக்கு கேப்டன் பஃப் டு பிளேஸிஸ் 64 (23), விராட் கோலி 42 (27) ரன்கள் எடுத்தனர். அதைத்தொடர்ந்து வந்த வில் ஜேக்ஸ், கிளன் மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன் குறைந்த ரன்களில் அவுட்டானாலும் கடைசியில் தினேஷ் கார்த்திக் 21*, ஸ்வப்னில் சிங் 15* ரன்கள் அடித்து 13.4 ஓவரில் வெற்றி பெற வைத்தனர்.

- Advertisement -

மிரட்டல் சாதனை:
அதன் காரணமாக அதிகபட்சமாக ஜோஸ்வா லிட்டில் 4 விக்கெட்டுகள் எடுத்தும் குஜராத் தோல்வியை சந்தித்தது. அதனால் 4வது வெற்றியை பதிவு செய்த பெங்களூரு பிளே ஆஃப் செல்வதற்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. முன்னதாக பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்துக்கொள்ள கூடுதல் ரன் ரேட்டை பெற வேண்டும் என்பதற்காக இப்போட்டியில் 148 ரன்களை துரத்திய பெங்களூரு அணிக்கு கேப்டன் டு பிளேஸிஸ் சரவெடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.

அதே வேகத்தில் வெறும் 18 பந்துகளில் 50 ரன்கள் தொட்ட அவர் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக அதிவேகமாக அரை சதமடித்த கேப்டன் என்ற சாதனையைப் படைத்தார். அத்துடன் பெங்களூரு அணிக்காக அதிவேகமாக அரை சதமடித்த 2வது வீரர் என்ற பெருமையும் அவர் பெற்றார். அந்த பட்டியல் (பந்துகள்):
1. கிறிஸ் கெயில் : 17
2. பஃப் டு பிளேஸிஸ் : 18*
3. ராபின் உத்தப்பா : 19
3. ரஜத் படிடார் : 19

- Advertisement -

அத்துடன் 10 பவுண்டரி 4 சிக்சரை பறக்க விட்ட அவர் 6 ஓவர்களுக்குள் 64 (23) ரன்கள் அடித்தார். இதன் வாயிலாக ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக ஒரு போட்டியில் பவர்பிளேவில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற கிறிஸ் கெயில் சாதனையையும் உடைத்துள்ள பஃப் டு பிளேஸிஸ் புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் 2012இல் புனே, 2013இல் புனே, 2015இல் பஞ்சாப்புக்கு எதிராக கிறிஸ் கெயில் 3 முறை பவர்பிளேவில் 50 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும்.

இதையும் படிங்க: கொஞ்ச நேரத்துல 4 விக்கெட் விட்டதும் கொஞ்சம் பதட்டமாயிடுச்சி.. குஜராத் அணிக்கெதிரான வெற்றி குறித்து – டூபிளெஸ்ஸிஸ் பேட்டி

மொத்தத்தில் அடுத்தடுத்த தோல்விகளால் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் தவித்த பெங்களூரு அணி தற்போது ஹாட்ரிக் வெற்றிகளால் 7வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதனால் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று முதல் கோப்பையை வெல்வோமோ கனவுடன் ஆர்சிபி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Advertisement