இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது ஆண்டுதோறும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வரும் வேளையில் இந்த 2026-ஆம் ஆண்டிற்கான 19-வது ஐபிஎல் சீசனுக்கான ஏற்பாடுகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்த மார்ச் மாதம் 28-ஆம் தேதி துவங்க இருக்கும் இந்த ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது சன்ரைசர்ஸ் அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது.
தோனி நீக்க யாருக்கும் தைரியம் இருக்காது : சுப்ரமணியம் பத்ரிநாத்
இந்த தொடரில் பங்கேற்று விளையாட இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது தற்போது தங்களது வீரர்களை ஒன்றிணைத்து சென்னையில் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. இந்த தொடரில் 44 வயதான சி.எஸ்.கே அணியின் முன்னாள் கேப்டனான தோனி அனைத்து போட்டிகளிலும் விளையாடுவாரா? மாட்டாரா? என்பதே பலரது கேள்வியாகவும் இருந்து வருகிறது.
ஏனெனில் கடந்த சில ஆண்டுகளாகவே முழங்கால் பாதிப்பு காரணமாக அவர் நிறையவே அவதிப்பட்டு வருகிறார். இதன் காரணமாக இந்த தொடரோடு அவர் ஓய்வு பெறுவார் என்றும் இந்த தொடரிலும் அவர் இம்பேக்ட் பிளேயராக விளையாடவே அதிக வாய்ப்புள்ளதாக பலராலும் பேசப்பட்டு வருகிறது. ஏனெனில் சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் அணியில் இருந்து சிஎஸ்கே அணிக்கு வந்துள்ள வேளையில் அவர்தான் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாடுவார் என்று கூறப்படுகிறது.
அதோடு தோனி தேவைப்படும்போது இம்பேக்ட் பிளேயராக மட்டுமே விளையாடுவார்கள் என்றும் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த 2026 ஐ.பி.எல் சீசனில் இம்பேக்ட் பிளேயராக விளையாட வாய்ப்பே இல்லை என்றும் அவரை சிஎஸ்கே அணியில் இருந்து நீக்க யாருக்கும் தைரியம் கிடையாது என முன்னாள் சிஎஸ்கே அணியின் வீரரான சுப்பிரமணியம் பத்ரிநாத் சில கருத்துகளை பகிர்ந்துள்ளார்.
அந்த வகையில் அவர் கூறியதாவது : சி.எஸ்.கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தோனியிடம் சென்று இந்த போட்டியில் நீங்கள் விளையாட வேண்டாம். நாங்கள் உங்களை நீக்குகிறோம் என்று சொல்வாரா? என கேட்டால் அதற்கு சற்றும் வாய்ப்பு இல்லை. அணியின் நிர்வாகத்தாலும் அவரை நீக்க முடியாது என்று நான் உணர்கிறேன். ஏனெனில் தோனியிடம் சென்று இம்பேக்ட் பிளேயராக விளையாடுங்கள் என்றோ, நீங்கள் இந்த போட்டியில் விளையாட வேண்டாம் என்றோ யாராலும் கூற முடியாது.
இதையும் படிங்க : டி20 உலககோப்பை மட்டுமின்றி 2026 ஐ.பி.எல் தொடரில் இருந்தும் விலகிய ஹர்ஷித் ராணா – என்ன காரணம்?
நிச்சயம் அதற்கு வாய்ப்பே கிடையாது. எனவே தோனி நிச்சயம் இந்த தொடரின் அனைத்து போட்டிகளிலும் விளையாடுவார் என்பதை உறுதியாக எடுத்துக் கொள்ளலாம். அதேவேளையில் சஞ்சு சாம்சன் முழுநேர பேட்ஸ்மேனாக விளையாட வாய்ப்புள்ளது என்றும் சுப்ரமணியம் பத்ரிநாத் கூறியது குறிப்பிடத்தக்கது.



