இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் ஆஷஸ் 2023 டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று தங்களை உலக சாம்பியன் என்பதை நிரூபித்தது. மறுபுறம் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 என்ற ஆட்டத்தை பின்பற்றி அதிரடியாக விளையாடுகிறோம் என்ற பெயரில் கையில் வைத்திருந்த வெற்றிகளை கோட்டை விட்ட இங்கிலாந்து சொந்த மண்ணில் தலை குனிந்து கடுமையான விமர்சனத்திற்குள்ளானது. குறிப்பாக அதிரடியை அணுகுமுறையை மூட்டை கட்டிவிட்டு வழக்கமாக விளையாடி 22 வருடங்களாக சொந்த மண்ணில் ஆஷஸ் தொடரில் தோற்காமல் இருந்து வரும் கௌரவத்தை காப்பாற்றுமாறு நாசர் உசேன் விமர்சித்தார்.
அந்த நிலைமையில் ஹெண்டிங்க்லே நகரில் நடைபெற்ற 3வது போட்டியில் இங்கிலாந்து 3 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்று கோப்பையை வெல்லும் வாய்ப்பை தக்க வைத்துக்கொண்டது. அதைத்தொடர்ந்து மான்செஸ்டர் நகரில் ஜூலை 19ஆம் தேதி துவங்கிய இத்தொடரின் 4வது போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு கடந்த போட்டிகளில் சவாலை கொடுத்த உஸ்மான் கவாஜாவை 3 ரன்களில் ஸ்டுவர்ட் ப்ராட் அவுட்டாக்கினார்.
ஸ்டுவர்ட் ப்ராட் சாதனை:
இருப்பினும் மறுபுறம் நிதானமாக விளையாட முயற்சித்த டேவிட் வார்னர் 32 ரன்களில் அவுட்டானாலும் அடுத்ததாக ஜோடி சேர்ந்து 3வது விக்கெட்டுக்கு 59 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சவாலை கொடுத்த நம்பிக்கை நட்சத்திரம் ஸ்டீவ் ஸ்மித் 41 ரன்களில் அவுட்டாகி சென்றார். அந்த நிலைமையில் மறுபுறம் தனது தரத்தை காட்டிய மார்னஸ் லபுஸ்ஷேன் 51 ரன்கள் குவித்து அவுட்டாக அவருடன் 4வது விக்கெட்டுக்கு 63 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சவாலை கொடுத்த டிராவிஸ் ஹெட் 48 ரன்களில் ஸ்டுவர்ட் ப்ராட் வீசிய ஷார்ட் பிட்ச் வலையில் சிக்கினார்.
அதைத்தொடர்ந்து வந்த மிட்சேல் மார்ஷ் அதிரடியாக விளையாடிய போதிலும் 51 (60) ரன்களில் கிறிஸ் ஓக்ஸ் பந்தில் அவுட்டாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேமரூன் கிரீன் 16, அலெக்ஸ் கேரி 20 என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்து. அதனால் முதல் நாள் முடிவில் 299/8 ரன்கள் எடுத்து தடுமாற்றத்துடன் செயல்பட்டு வரும் ஆஸ்திரேலியாவுக்கு களத்தில் மிட்சேல் ஸ்டார்க் 23* பட் கமின்ஸ் 1* ரன்னுடன் உள்ளனர். இங்கிலாந்து சார்பில் இதுவரை கிறிஸ் ஓக்ஸ் 4 விக்கெட்டுகளும் ஸ்டுவர்ட் ப்ராட் 2 விக்கெட்டுகளையும் சாய்த்துள்ளனர்.
அத்துடன் இப்போட்டியில் இதுவரை எடுத்த 2 விக்கெட்டுகளையும் சேர்த்து டெஸ்ட் போட்டிகளில் 600 விக்கெட்டுகளை எடுத்த 5வது வீரர் என்ற மகத்தான சாதனை படைத்த ஸ்டுவர்ட் ப்ராட் 2வது வேகப்பந்து வீச்சாளர் என்ற வரலாற்றுச் சாதனையும் படைத்தார். அந்த பட்டியல்:
1. முத்தையா முரளிதரன் : 800
2. ஷேன் வார்னே : 709
3. ஜேம்ஸ் ஆண்டர்சன் : 688
4. அனில் கும்ப்ளே : 619
5. ஸ்டுவர்ட் ப்ராட் : 600*
அதை விட டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் சவாலான அணியாக கருதப்படும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வரலாற்றில் அதிக விக்கெட்களை எடுத்த பவுலர் என்ற இங்கிலாந்து ஜாம்பவான் இயன் போத்தம் சாதனையை உடைத்த அவர் புதிய உலக சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ஸ்டுவர்ட் ப்ராட் : 149*
2. இயன் போத்தம் : 148
3. கோர்ட்னி வால்ஷ் : 135
4. ரிச்சர்ட் ஹாட்லி : 130
5. கர்ட்லி ஆம்ப்ரோஸ்/பாப் வில்ஸ் : தலா 128
6. ஜேம்ஸ் ஆண்டர்சன் : 115
7. ரவிச்சந்திரன் அஸ்வின் : 114
7. அனில் கும்ப்ளே : 111
இதையும் படிங்க:வீடியோ : அடுத்தடுத்த சிக்ஸர்களுடன் சதம், மாஸ் ஃபினிஷிங் செய்த சாய் சுதர்சன் – இந்தியாவுக்காக உதயமான தமிழகத்தின் நாயகன்
கடந்த 2006ஆம் ஆண்டு சர்வதேச அரங்கில் அறிமுகமாகி ஆரம்ப காலங்களில் 3 வகையான அணியிலும் அசத்திய அவர் 2007 டி20 உலக கோப்பையில் யுவ்ராஜ் சிங்கிடம் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் கொடுத்ததுடன் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் ஒதுக்கப்பட்டார். இருப்பினும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து அனுபவத்தால் 600 விக்கெட்களை எடுத்துள்ள அவர் ஜாம்பவானுக்கு நிகராக போற்றும் அளவுக்கு அசத்தி வருவது குறிப்பிடத்தக்கது.