இலங்கையில் நடைபெற்று வரும் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர்களுக்கான ஆசிய கோப்பை 2023 தொடரில் 2022 அண்டர்-19 உலக கோப்பையை வென்ற கேப்டன் யாஷ் துள் தலைமையில் விளையாடி வரும் இந்தியா ஏ அணி தம்முடைய லீக் சுற்றில் பங்கேற்ற 4 போட்டிகளிலும் ஹாட்ரிக் வெற்றிகளை பதிவு செய்து குரூப் பி பிரிவில் புள்ளி பட்டியலில் 6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த தொடரில் தமிழகத்திலிருந்து இளம் வீரர் சாய் சுதர்சன் விளையாடுவதற்காக முதல் முறையாக தேர்வானார். குறிப்பாக ஐபிஎல் 2023 ஃபைனலில் தோனி தலைமையிலான சென்னையை பந்தாடிய அவர் 96 ரன்கள் விளாசி ஜாம்பவான் சச்சின் போன்ற பலரது பாராட்டுகளைப் பெற்றார்.
அதே வேகத்தில் 2023 டிஎன்பிஎல் தொடரில் நடப்புச் சாம்பியன் கோவை அணிக்காக அபாரமாக செயல்பட்ட காரணத்தால் இந்த தொடரில் தேர்வான அவர் அமீரகத்துக்கு எதிரான முதல் போட்டியில் 176 ரன்களை சேசிங் செய்கையில் 8 (8) ரன்கள் மட்டுமே எடுத்தார். இருப்பினும் நேபாள் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 168 ரன்களை சேசிங் செய்கையில் 8 பவுண்டரி 1 சிக்சருடன் முதல் முறையாக இந்தியா ஏ அணிக்காக அரை சதமடித்த அவர் 58* (52) ரன்கள் விளாசி வெற்றியில் பங்காற்றினார்.
சிக்சருடன் சதம்:
அந்த நிலையில் ஜூலை 19ஆம் தேதி கொழும்புவில் நடைபெற்ற 3வது லீக் போட்டியில் இந்தியாவின் தரமான பந்து வீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாத பாகிஸ்தான் ஏ 48 ஓவரில் 205 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக காசிம் அக்ரம் 48 (63) ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து 206 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு சாய் சுதர்சனடன் இணைந்து 58 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த அபிஷேக் ஷர்மா 20 (28) ரன்களில் ஆட்டமிழந்தார்.
அந்த நிலையில் வந்த நிக்கின் ஜோஸ் 2வது விக்கெட்டுக்கு 99 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 7 பவுண்டரியுடன் 53 (64) ரன்கள் குவித்து வெற்றியை உறுதி செய்த ஆட்டமிழந்தார். இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து ஆரம்பம் முதலே நிதானமாக விளையாடி வந்த சாய் சுதர்சன் நேரம் செல்ல செல்ல நங்கூரமாக நின்று பாகிஸ்தான் பவுலர்களை மிகச் சிறப்பாக எதிர்கொண்டு சதத்தை நெருங்கினார். ஆனால் கடைசி நேரத்தில் யாஷ் துள் 21* (19) ரன்களை அதிரடியாக எடுத்ததால் சாய் சுதர்சன் சதமடிக்கும் வாய்ப்பு கேள்விக்குறியானது.
அந்த நிலையில் சன்வாஸ் தகாணி வீசிய 37வது ஓவரில் 88* (106) ரன்களில் இருந்த சாய் சுதர்சன் முதல் பந்தில் பவுண்டரி அடித்து 2வது பந்தில் ரன்கள் எடுக்கவில்லை என்றாலும் 3வது பந்தில் அபாரமான சிக்சர் அடித்து 98 ரன்களை எட்டினார். அத்துடன் நிற்காமல் அதே வேகத்தில் அடுத்த பந்திலும் அட்டகாசமான சிக்ஸர் பறக்க விட்ட அவர் சதமடித்து 104* (110) ரன்கள் விளாசி மிகச் சிறப்பான ஃபினிஷிங் கொடுத்து இந்தியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார்.
அப்படி இந்தியா ஏ அணிக்காக தன்னுடைய முதல் சதத்தையே மிகவும் ஸ்டைலாக அடுத்தடுத்த சிக்சர்களுடன் பதிவு செய்த அவர் அதற்கு முன்பாகவே 50 ரன்களையும் சிக்ஸரை விளாசியே தொட்டார். அந்த வகையில் வெற்றியில் முக்கிய பங்காற்றியதால் ஆட்டநாயகன் விருதையும் வென்ற அவர் ஐபிஎல், டிஎன்பிஎல் ஆகிய தொடர்களை தொடர்ந்து இலங்கை போன்ற வெளிநாட்டு மண்ணில் முதல் முறையாக அசத்தியுள்ளார்.
இதையும் படிங்க:இந்தவொரு இந்திய பவுலரை எதிர்கொள்வது எந்தவொரு பேட்ஸ்மேனுக்குமே அவ்ளோ ஈஸி கிடையாது – அணில் கும்ப்ளே பாராட்டு
மேலும் 1983 உலகக் கோப்பையை வென்ற ஸ்ரீகாந்த் தவிர்த்து சடகோபன் ரமேஷ், முரளி விஜய், தினேஷ் கார்த்திக் என கடந்த காலங்களில் தமிழகத்திலிருந்து விளையாடிய பேட்ஸ்மேன்கள் நீண்ட காலம் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு நிகராக செயல்படவில்லை. ஆனால் தற்போது அழுத்தமான ஐபிஎல் தொடரில் துவங்கி இந்தியா ஏ அணியில் அசத்தி வரும் சுதர்சன் வருங்காலத்தில் இந்தியாவுக்காக சர்வதேச அரங்கில் தமிழகத்திலிருந்து பிறந்து வெற்றிகளை பெற்றுக் கொடுக்கும் அளவுக்கு திறமை கொண்டுள்ளவராக உதயமாகி வருவது தமிழக ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.



