
ஆஸ்திரேலியா அணியை சேர்ந்த 35 வயதான அனுபவ வீரரான ஸ்டீவ் ஸ்மித் கடந்த 2010-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆஸ்திரேலியா அணிக்காக அறிமுகமாகி இதுவரை 109 டெஸ்ட் போட்டிகள், 158 ஒருநாள் போட்டிகள் மற்றும் 67 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அது தவிர்த்து கடந்து 2012-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை 103 ஐபிஎல் போட்டிகளிலும் விளையாடி உள்ளார்.
என்னதான் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனிகளில் ஒருவராக பார்க்கப்பட்டாலும் டி20 கிரிக்கெட்டிற்கு அவர் பொருந்த மாட்டார் என ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னரே அவரை டி20 அணியில் இருந்து கழட்டிவிட்டது. மேலும் நடைபெற்று முடிந்த 2024 டி20 உலக கோப்பை தொடருக்கான அணியிலும் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.
ஆனால் இன்றளவும் தான் டி20 கிரிக்கெட்டில் விளையாட முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில் அவர் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் அமெரிக்காவில் நடைபெற்று முடிந்த மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் போது வாஷிங்டன் அணிக்காக விளையாடியவர் 336 ரன்கள் அடித்து அசத்தியுள்ளார்.
மேலும் தனது ஸ்ட்ரைக் ரேட்டையும் தற்போது உயர்த்தியுள்ள அவர் மீண்டும் டி20 கிரிக்கெட்டிற்கு திரும்புவது குறித்து தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : டி20 உலக கோப்பையில் நான் சேர்க்கப்படாத போது வருத்தம் அடைந்தேன். ஆனால் இது போன்ற விடயங்கள் வாழ்க்கையில் நடக்கும்.
டி20 அணியை பொறுத்தவரை அணியில் இடம் பெறும் அனைவருமே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று தேர்வுக்குழுவினர் விரும்புகின்றனர். தற்போது நான் மீண்டும் ஐபிஎல் தொடரில் விளையாட ஆசைப்படுகிறேன். எதிர்வரும் 2025-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் மெகா ஏலத்தில் நிச்சயம் எனது பெயரை பதிவு செய்வேன். ஒருவேளை எந்த அணி என்னை வாங்கினாலும் நிச்சயம் அந்த அணிக்காக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை பெற்று தர வேண்டும் என்பதில் மட்டுமே கவனமாக இருக்கிறேன்.
இதையும் படிங்க : 30 நிமிடத்தில் 5 கி.மீ.. ஜீரோ எதிர்பார்ப்பு.. ஸ்ரேயாஸ், ராகுல் வந்தாலும் இதை செஞ்சா போதும்.. சர்பராஸ் கான் பேட்டி
நான் எந்த வரிசையில் பேட்டிங் செய்ய வேண்டும் என்பதை அணியின் கேப்டனும், பயிற்சியாளரும் தான் முடிவு செய்ய வேண்டும். நிர்வாகம் என்னை எந்த இடத்தில் களமிறங்க சொன்னாலும் அந்த இடத்தில் இறங்கி நான் பேட்டிங் செய்ய தயாராக இருக்கிறேன் என ஸ்டீவ் ஸ்மித் கூறியது குறிப்பிடத்தக்கது.