- Advertisement -
டி20

ஒரே ஓவரில் 32 ரன்ஸ்.. 41 பந்தில் 100.. பிக்பேஷில் 2வது சரவெடி சாதனை சமன் செய்த ஸ்மித்.. மாஸ் வெற்றி

ஆஸ்திரேலியாவில் 2025/26 பிக்பேஷ் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகின்றது. அத்தொடரில் ஜனவரி 16ஆம் தேதி சிட்னியில் நடைபெற்ற 37வது போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸ் மற்றும் சிட்னி தண்டர்ஸ் அணிகள் மோதின. அப்போட்டியில் வென்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தக்க வைத்துக்கொள்ள முடியும் என்ற வாழ்வா – சாவா சூழ்நிலையில் களமிறங்கிய சிட்னி சிக்ஸர்ஸ் டாஸ் வென்று பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய சிட்னி தண்டர்ஸ் 20 ஓவரில் 189/6 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் டேவிட் வார்னர் சதமடித்து 110* (65) ரன்களை குவித்த போதிலும் மற்ற பேட்ஸ்மேன்கள் யாருமே 30 ரன்கள் கூட தாண்டவில்லை. சிட்னி தண்டர்ஸ் அணிக்கு அதிகபட்சமாக சாம் கரண் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

- Advertisement -

ஸ்மித் மிரட்டல்:

அடுத்து விளையாடிய சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்கு பாபர் அசாம் வழக்கம் போல நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் எதிர்ப்புறம் நம்பிக்கை நட்சத்திரம் ஸ்டீவ் ஸ்மித் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். வெறும் 23 பந்தில் அரை சதத்தை அடித்த அவர் ரியன் ஹாட்லி வீசிய 12வது ஓவரில் 6, 6, 6, 6 என அடுத்தடுத்த சிக்ஸர்களை பறக்க விட்டார்.

அதோடு நிற்காத அவர் நோ-பாலாக வீசப்பட்ட 5வது பந்தில் பவுண்டரி அடித்தார். அதற்காக வீசப்பட்ட அடுத்த பந்து ஒய்டாக மாறிய நிலையில் 5வது பந்தில் ரன்கள் அடிக்காத ஸ்மித் கடைசி பந்தில் 2 ரன்கள் அடித்தார். இதன் வாயிலாக பிக்பேஷ் வரலாற்றில் அதிக (32) ரன்கள் அடிக்கப்பட்ட ஓவராக அந்த ஓவர் என்ற பெயரை பெற்றது.

- Advertisement -

சிட்னி மாஸ் வெற்றி:

அதே வேகத்தில் பட்டாசாக விளையாடிய ஸ்மித் 41 பந்துகளில் சதத்தை அடித்தார். அதன் வாயிலாக பிக்பேஷ் வரலாற்றில் 2வது வேகமான சதத்தை அடித்த வீரர் என்ற கிளன் மேக்ஸ்வெல் சாதனையை சமன் செய்த ஸ்மித் 5 பவுண்டரி 9 சிக்ஸருடன் 100 (42) ரன்கள் குவித்து அவுட்டானார். இதற்கு முன் மேக்ஸ்வெலும் 41 பந்தில் 100 ரன்கள் அடித்துள்ளார்.

இதையும் படிங்க: அவங்க 2 பேர் ஆடலனாலும் இந்தியா தான் இந்த டி20 உலககோப்பை ஜெயிக்கும் – தினேஷ் கார்த்திக் கருத்து

அவருடன் இணைந்து விளையாடிய பாபர் அசாம் கடைசி வரை நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 47 (29) ரன்கள் குவித்து அவுட்டானார். லோயர் ஆர்டரில் லச்லன் ஷா 13* (7), ஜேக் எட்வர்ட்ஸ் 17* (8) ரன்கள் எடுத்ததால் 17.2 ஓவரிலேயே 191/5 ரன்களை குவித்த சிட்னி சிக்ஸர்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அந்த வகையில் வாழ்வா – சாவா போட்டியில் தன்னுடைய அணியை மாஸ் வெற்றி பெற உதவிய ஸ்மித் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

- Advertisement -