IND vs AUS : 4வது போட்டிக்கு பட் கமின்ஸ் திரும்புகிறாரா? கேப்டன் யார் – கோச் மெக்டொனால்ட் வெளியிட்ட அறிவிப்பு இதோ

Pat-Cummins
- Advertisement -

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த படுதோல்விகளை சந்தித்த ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே கோப்பையை வென்று 2004க்குப்பின் இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டது. அதை விட பிட்ச் பற்றி தேவையின்றி விமர்சித்து விமர்சனங்களுக்கு உள்ளான அந்த அணி பேட்ஸ்மேன்கள் சுழலாமல் நேராக வரும் பந்துகளை கூட சரியாக எதிர்கொள்ள தேவையான டெக்னிக் தெரியாமல் ஸ்வீப் ஷாட் அடித்து கிளீன் போல்ட்டானார்கள். போதாக்குறைக்கு டேவிட் வார்னர் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் காயத்தால் வெளியேறின நிலையில் கேப்டன் பட் கமின்ஸ் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள தனது குடும்பத்தை பார்ப்பதற்காக நாடு திரும்பினார்.

அதனால் 4 – 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா ஒயிட் வாஷ் படுதோல்வியை சந்திப்பது உறுதியென்று கருத்துக்கள் எழுந்தன. அந்த நிலையில் இந்தூரில் துவங்கிய 3வது போட்டியில் முதல் நாளில் முதல் மணி நேரத்திலேயே தாறுமாறாக சுழலத் துவங்கிய பிட்ச்சில் ஆஸ்திரேலிய அணியை தலைமை தாங்கிய துணை கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தன்னுடைய பவுலர்களை சரியாக பயன்படுத்தி சிறப்பான ஃபீல்டிங் செட்டப் செய்து இந்தியாவை 109 ரன்களுக்கு சுருட்டும் அளவுக்கு சிறப்பாக கேப்டன்ஷிப் செய்தார்.

- Advertisement -

கேப்டன் யார்:
அந்த வகையில் முதலிரண்டு போட்டிகளில் கத்துக்குட்டியை போல் செயல்பட்ட ஆஸ்திரேலியா ஸ்டீவ் தலைமையில் கொதித்தெழுந்து இந்தியாவை 9 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து பதிலடி கொடுத்தது. அதனால் தங்களது நம்பர் ஒன் இடத்தை காப்பாற்றிக் கொண்ட ஆஸ்திரேலியா 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு முதல் அணியாக அதிகாரப்பூர்வமாக தகுதி பெற்று அசத்தியுள்ளது. மேலும் கடந்த 10 வருடங்களில் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் 2 டெஸ்ட் போட்டியில் தோற்கடித்த முதல் கேப்டன் என்ற பெருமையை பெற்ற ஸ்டீவ் ஸ்மித் தொடர்ந்து கேப்டனாக செயல்படலாம் என்று நிறைய இந்திய ரசிகர்களே பாராட்டினர்.

இருப்பினும் “இது பட் கமின்ஸ் அணி நான் தற்காலிக துணை கேப்டன் தான்” என்று ஸ்டீவ் ஸ்மித் 3வது போட்டியின் முடிவில் தெரிவித்திருந்தார். அதனால் 4வது போட்டியில் பட் கமின்ஸ் கேப்டனாக செயல்படுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்ட நிலையில் ஸ்டீவ் ஸ்மித் தொடர்ந்து ஆஸ்திரேலியாவை வழிநடத்துவார் என்று தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் அறிவித்துள்ளார். தமது குடும்பம் இன்னும் முழுமையாக குணமடையாத நிலையில் பட் கமின்ஸ் தொடர்ந்து வீட்டிலிருந்து கொண்டே ஆஸ்திரேலிய அணிக்கு தேவையான ஆலோசனைகளை கொடுப்பார் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“பட் கமின்ஸ் தமது வீட்டில் நிலவும் பிரச்சனைகளை சமாளிப்பதுடன் சில நேரங்களில் ஆஸ்திரேலிய அணியிலும் அங்கிருந்தே தம்முடைய கவனத்தை செலுத்தி வருகிறார். இந்த மோசமான நேரத்தில் அவருக்கும் அவருடைய குடும்பத்திற்கும் எங்களுடைய ஆதரவையும் வாழ்த்துகளையும் தெரிவிக்கிறோம். அவருடன் தினம்தோறும் நாங்கள் தொடர்பில் இருந்து வருகிறோம். ஆனால் அடுத்த போட்டி இன்னும் ஓரிரு நாட்களில் துவங்கும் நிலையில் அவர் தற்சமத்தில் எங்களுடன் இல்லை. எனவே அவருடன் நாங்கள் அணியின் திட்டங்களை பற்றி தினம்தோறும் விவாதிக்கிறோம்” என்று கூறினார்.

அதனால் 4வது போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் ஆஸ்திரேலியாவின் கேப்டனாக செயல்படுவார் என்பது அதிகாரப்பூர்வமாக தெரிய வருகிறது. மேலும் உலகிலேயே இதர நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் உள்ள சூழ்நிலைகளை நன்கு புரிந்துள்ளதால் இந்திய மண்ணில் கேப்டன்ஷிப் செய்வதை விரும்புவதாக 3வது போட்டியின் முடிவில் ஸ்டீவ் ஸ்மித் கூறியிருந்தார். அத்துடன் அவருடைய கேப்டன்ஷிப் நமக்கு மிகவும் பிடித்துள்ளதாக முன்னாள் வீரர் மேத்தியூ ஹைடன் பாராட்டியிருந்தார்.

இதையும் படிங்க:IND vs AUS : நல்லவேள 3வது டெஸ்டில் விளையாடிருந்த அவரோட மொத்த கேரியரும் முடிஞ்சுருக்கும் – ஸ்ரீகாந்த் மகிழ்ச்சி பேட்டி

அதில் ஒரு படி மேலே சென்ற மற்றொரு முன்னாள் வீரர் இயன் ஹீலி பட் கமின்ஸ் வேகப்பந்து வீச்சாளராக விளையாடுவதையும் ஸ்டீவ் ஸ்மித் முழு நேர கேப்டனாக செயல்படுவதையும் பார்க்க விரும்புவதாக வெளிப்படையாக பேசியிருந்தார். அப்படி முன்னாள் வீரர்களின் ஆதரவை பெற்று வரும் ஸ்டீவ் ஸ்மித் மார்ச் 9இல் துவங்கும் இத்தொடரின் கடைசி போட்டியிலும் வென்று தொடரை சமன் செய்யும் முனைப்புடன் கேப்டன்ஷிப் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement