ஆஷஸ் 2025/26 டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 5வது போட்டி ஜனவரி 4ஆம் தேதி சிட்னியில் துவங்கியது. 5 போட்டிகள் கொண்ட அந்தத் தொடரில் 4 போட்டிகளில் முடிவில் 3 – 1* என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே கோப்பையை வென்று விட்டது. அந்த நிலைமையில் கடைசிப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்து 384 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக நம்பிக்கை நட்சத்திரம் ஜோ ரூட் சதமடித்து 160, ஹாரி ப்ரூக் 84, ஜேமி ஸ்மித் 46 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக மைக்கேல் நேசர் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அடுத்து விளையாடும் ஆஸ்திரேலியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 3வது நாள் முடிவில் 518/7 ரன்களை குவித்து இங்கிலாந்துக்கு பதிலடி கொடுத்துள்ளது.
ஆஸ்திரேலியா பதிலடி:
அந்த அணிக்கு ஜேக் வெதர்லேண்ட் 21, மார்னஸ் லபுஸ்ஷேன் 48, மைக்கேல் நீசர் 24 ரன்கள் எடுத்தனர். அவர்களுடன் சேர்ந்து இங்கிலாந்தை அதிரடியாக எதிர்கொண்ட டிராவிஸ் ஹெட் சதமடித்து 163 (166) ரன்கள் குவித்து அசத்தினார். தனது கடைசிப் போட்டியில் விளையாடிய உஸ்மான் கவாஜா 17, அலெக்ஸ் கேரி 16, கேமரூன் க்ரீன் 37 ரன்கள் குவித்து பெவிலியன் திரும்பினார்கள்.
ஆனால் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மிகவும் நங்கூரமாக விளையாடி இங்கிலாந்துக்கு சவாலைக் கொடுத்து சதமடித்தார். 3வது நாள் முடிவில் 129* ரன்கள் குவித்துள்ள அவருக்கு களத்தில் பியூ வெப்ஸ்டர் 42* ரன்களுடன் கை கொடுத்து வருகிறார். தற்சமயத்தில் இங்கிலாந்தை விட 134 ரன்கள் முன்னிலையில் இருக்கும் ஆஸ்திரேலியா இப்போட்டியில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை அதிகரித்துள்ளது.
ஸ்மித் உலக சாதனை:
முன்னதாக இந்தப் போட்டியில் அடித்த ரன்களையும் சேர்த்து இங்கிலாந்துக்கு எதிராக ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் ஸ்டீவ் ஸ்மித் 5085* ரன்களை குவித்துள்ளார். இதன் வாயிலாக சர்வதேச கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற ஜாம்பவான் டான் ப்ராட்மேன் சாதனையை உடைத்துள்ள அவர் புதிய உலக சாதனையை படைத்துள்ளார். அந்தப் பட்டியல்:
1. ஸ்டீவ் ஸ்மித் (ஆஸ்திரேலியா): 5085*
2. டான் ப்ராட்மேன் (ஆஸ்திரேலியா): 5028
3. ஆலன் பார்டர் (ஆஸ்திரேலியா): 4850
4. விவ் ரிச்சர்ட்ஸ் (வெஸ்ட் இண்டீஸ்): 4488
5. ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா): 4141
இதையும் படிங்க: 3 மாசம் தான் இருப்பிங்கன்னு டாக்டர் சொன்னாரு.. புற்றுநோயை வென்று வந்தது பற்றி யுவ்ராஜ் உருக்கமான பேட்டி
இது மட்டுமின்றி ஆஷஸ் தொடரில் 2வது அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையையும் ஸ்மித் அடைத்துள்ளார். அந்தப் பட்டியல்:
1. டான் ப்ராட்மேன் (ஆஸ்திரேலியா): 5028
2. ஸ்டீவ் ஸ்மித் (ஆஸ்திரேலியா): 3682*
3. ஜேக் ஹோப்ஸ் (இங்கிலாந்து): 3636
4. ஆலன் பார்டர் (ஆஸ்திரேலியா): 3222
5. ஸ்டீவ் வாக் (ஆஸ்திரேலியா): 3173



