2022இல் மிஸ்ஸான டைமிங்.. கேப்டனா இல்லனாலும் சிஎஸ்கே’வுக்காக தோனி அதை செய்வாரு.. பிளெமிங் பேட்டி

- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடர் மார்ச் 22ஆம் தேதி கோலாகலமாக துவங்க உள்ளது. இந்த வருடத்தின் முதல் போட்டியில் பெங்களூருவை நடப்பு சாம்பியன் சென்னை எதிர்கொள்கிறது. ஆனால் அந்த போட்டிக்கு ஒருநாள் முன்பாக சிஎஸ்கே அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஜாம்பவான் எம்எஸ் தோனி விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது.

கடந்த 2008 முதல் கேப்டனாக செயல்பட்டு வந்த அவர் 5 கோப்பைகளை வென்று சிஎஸ்கே வெற்றிகரமான அணியாக ஜொலிப்பதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார். மேலும் 2010, 2014 சாம்பியன்ஸ் லீக் டி20 தொடர்களையும் வென்ற அவர் வெற்றிகரமான ஐபிஎல் கேப்டன் என்ற சாதனையும் படைத்துள்ளார். இருப்பினும் 41 வயதை கடந்து விட்ட தோனி கடந்த வருடமே முழங்கால் வலியுடன் விளையாடி 5வது கோப்பையை வென்றார்.

- Advertisement -

தோனியின் முடிவு:
எனவே காலத்திற்கும் விளையாட முடியாது என்பதால் வருங்காலத்தை கருத்தில் கொண்டு கேப்டன்ஷிப் பதவியை இளம் வீரர் ருதுராஜ் கையில் ஒப்படைத்து தோனி விலகுவதாக சிஎஸ்கே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தோனி தான் இந்த முடிவை எடுத்ததாக சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக வருங்காலத்தை கருத்தில் கொண்டு 2022இல் கேப்டன்ஷிப் பொறுப்பை அவர் ஜடேஜாவிடம் ஒப்படைத்த போது அதை எதிர்கொள்ள தாங்களே தயாராக இல்லை என்று பிளெமிங் கூறியுள்ளார். ஆனால் இப்போது சரியான நேரத்தில் அந்த முடிவை எடுத்துள்ள தோனி கேப்டனாக இல்லாமல் போனாலும் ஐபிஎல் 2024 தொடர் முழுவதும் ருதுராஜ்க்கு உறுதுணையாக பேட்ஸ்மேனாக விளையாடுவார் என்று பிளெமிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இது வருங்காலத்தை அதிகமாக கருத்தில் கொண்டு தோனி எடுத்த முடிவாகும். இந்த டைமிங் நன்றாக இருக்கிறது. 2022இல் தோனி விலக நினைத்த போது நாங்கள் அதற்கு தயாராக இல்லை. நாங்கள் இளம் வீரர்களை உருவாக்க விரும்பினோம். எனவே இம்முறை நாங்கள் அதற்கு தயாராக இருக்கிறோம். அதே சமயம் தோனி இந்த சீசன் முழுவதுமாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கிறேன்”

இதையும் படிங்க: சூப்பர்நோவா கேலக்சி மாதிரி எப்போவும் ஜொலிப்பாரு.. தோனி – ருதுராஜ் பற்றி இர்பான் பதான் உருக்கமான பதிவு

“இந்த வருடம் அவருடைய உடல் கடந்த சீசனை விட சிறப்பாக இருக்கிறது. எனவே அவர் இந்த வருடம் நன்றாக விளையாடுவார் என்று நான் எதிர்பார்க்கிறேன். குறிப்பாக தொடர் துவங்குவதற்கு முன்பாக பயிற்சிகளில் அவர் நன்றாக செயல்பட்டார். கடந்த வருடத்தை விட அவருடைய உடல் நன்றாகவும் வலுவானதாகவும் இருக்கிறது. அவருடைய முழங்காலும் நன்றாக குணமடைந்துள்ளது. எனவே இந்த வருடம் அவர் தன்னுடைய உயர்தர பங்களிப்பை சிஎஸ்கே அணிக்காக கொடுக்க உள்ளார்” என்று கூறினார்.

Advertisement