ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மே 3ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் பெங்களூருவிடம் வெறும் 2 ரன்கள் வித்யாசத்தில் தோல்வியை சந்தித்தது. அந்தப் போட்டியில் 214 ரன்களை துரத்திய சென்னை 20 ஓவரில் 211/5 ரன்கள் மட்டுமே எடுத்து போராடி தோற்றது. அந்த அணிக்கு ஆயுஸ் மாத்ரே 94, ஜடேஜா 77* ரன்கள் எடுத்துப் போராடினார்.
இருப்பினும் கடைசி நேரத்தில் ஃபினிஷிங் செய்யத் தவறியதால் சென்னை தங்களது 9வது தோல்வியை சந்தித்தது. முன்னதாக அந்தப் போட்டியில் சிஎஸ்கே பவுலர் கலீல் அகமது முதல் 2 ஓவர்களில் 32 ரன்களை கொடுத்து தடுமாற்றமாக பௌலிங் செய்து கொண்டிருந்தார். அப்படிப்பட்ட அவரிடம் முக்கியமான 19வது ஓவரை வீசும் பொறுப்பை தோனி வழங்கினார்.
தோனியின் முடிவு:
ஆனால் அந்த ஓவரில் அடித்து நொறுக்கிய ரொமாரியா ஃசெபார்டு 33 ரன்கள் விளாசியது சிஎஸ்கே தோல்விக்கு முக்கிய காரணமானது. அது போன்ற சூழ்நிலையில் 3 ஓவரில் 25 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்த அன்சுல் கம்போஜ்க்கு 19வது ஓவரை தோனி வழங்கியிருந்தால் 33 ரன்கள் கொடுத்திருக்க மாட்டார் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் இந்த வருட ஐபிஎல் தொடரில் கலீல் அகமது அதிகபட்சமாக 110 டாட் பந்துகளை வீசி சாதனை பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்.
அப்படிப்பட்ட அனுபவமிக்க அவரிடம் 19வது ஓவரை தோனி கொடுத்ததில் தவறில்லை என்று பிளமிங் கூறியுள்ளார். அதற்குப் பதிலாக இந்த வருடம் அறிமுகமான கம்போஜ் போன்ற இளம் பவுலர் அடி வாங்கி காணாமல் போனால் பரவாயில்லையா? என்ற வகையில் பிளமிங் வினவியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “கலீல் எங்களுக்காக இந்த வருடம் மிகச் சிறப்பாக விளையாடியுள்ளார்”
பிளெமிங் ஆதரவு:
“எனவே அந்த முடிவை தோனி மாற்றுவதற்கு எந்த காரணமும் இல்லை. கம்போஜ் மிகவும் மெதுவாக வளர்ந்து வருகிறார். அவராலும் டெத் ஓவரில் பௌலிங் செய்ய முடியும். வருங்காலங்களில் அவர் அதை செய்வார். ஆனால் இந்தப் போட்டியில் கலீல் அகமது 19வது ஓவரை வீசாமல் செல்வதற்கு எந்த காரணமும் இல்லை. எங்களுக்கும் பேட்டிங்கில் கடைசிக்கட்ட ஓவர்களில் ஒன்று பெரியதாக அமைந்திருந்தால் வென்றிருப்போம்”
இதையும் படிங்க: சி.எஸ்.கே அணிக்காக தனித்துவமான சாதனையை நிகழ்த்திய ஆயுஷ் மாத்ரே – இவர்தான் பியூச்சர் ஸ்டார்
“ஆனால் பெங்களூரு அணி நன்றாக பௌலிங் செய்தனர். நாங்கள் பெரிய இலக்கைத் துரத்துகிறோம் என்பதைத் தெரிந்தே ஆரம்பம் முதலே ரன்ரேட்டை சரியாக வைத்திருந்தோம். ஆனால் கடைசி 2 ஓவர்களில் 1 – 2 அதிரடியான ஷாட் வித்தியாசத்தில் வெற்றி மாறியது. அதற்காக 10 ஓவர்களுக்கு முன்பாகவே நாங்கள் ஒரு பெரிய ஓவரை உருவாக்க முயற்சித்தோம். இருப்பினும் அது சரியாக கிடைக்கவில்லை” என்று கூறினார்.



