ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏப்ரல் 25ஆம் தேதி நடைபெற்ற 43வது போட்டியில் ஹைதராபாத் அணியிடம் 5 விக்கெட் தோல்வியை சந்தித்தது. அத்துடன் 9 போட்டிகளில் 7வது தோல்வியை சந்தித்த சென்னை புள்ளிப்பட்டியலில் 10வது இடத்தை வலுவாகப் பிடித்துள்ளது. அதனால் இந்த வருடம் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப் பெறும் வாய்ப்பையும் சென்னை 99% இழந்துள்ளது.
அந்த அணியின் இந்த தோல்விக்கு மோசமான பேட்டிங் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அதை சரி செய்வதற்கு சென்னை அணி இளம் வீரர்களை மாற்றிப் பார்த்து விட்டது. இருப்பினும் அது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாததால் 2020, 2022, 2024க்குப்பின் சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப் பெறாமல் வெளியேறுவதற்கு தயாராகியுள்ளது.
பிளெமிங் வேதனை:
இந்நிலையில் சென்னை அணி கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற ஏலத்திலேயே சரியான வீரர்களை வாங்காமல் தோற்று விட்டதாக பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தோல்வியை ஒப்பு கொண்டுள்ளார். மேலும் “ஐபிஎல் ஏலம்” எனும் மிருகம் தாங்கள் விரும்பும் வீரர்களை வாங்க அனுமதிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். அதே சமயம் வாங்கிய வீரர்களை வைத்து மாற்றங்களை செய்து பார்த்தும் வெற்றி கிடைக்கவில்லை என்று அவர் ஏமாற்றம் தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இதுவரை நாங்கள் வெளிப்படுத்திய செயல்பாடுகளை வைத்து ஏலத்தில் சரியாக செயல்பட்டோம் என்று சொல்வது கடினமாகும். நாங்கள் எங்களுடைய விளையாடும் ஸ்டைல் பற்றி விரிவாகப் பார்த்து வருகிறோம். இந்த விளையாட்டு எப்படி உருமாறுகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். அது எளிதல்ல”
கம்பேக் தருவோம்:
“அப்படிப்பட்ட கடினமான ஐபிஎல் தொடரில் எங்களுடைய ரெக்கார்டை நினைத்து பெருமைப்படுகிறோம். நீண்ட காலமாக தொடர்ச்சியாக அசத்தி வந்த எங்களுக்கு இங்கிருந்து வேறு வழியில் செல்ல அதிக நேரம் எடுக்காது. மற்ற அணிகள் ஏலத்தில் சிறந்து விளங்கியதால் தற்போது அசத்துகின்றன. ஆனால் எங்களால் அதை சரியாக செய்ய முடியவில்லை. ருதுராஜ் போன்ற முக்கிய வீரர் காயமடைந்த போது டாப் ஆர்டரில் இருப்பவர்கள் பொறுப்புடன் விளையாட வேண்டும்”
இதையும் படிங்க: 10 ஃபைனலுக்கு சென்ற சிஎஸ்கே.. இம்முறை 10வது இடத்தை பிடிச்சா தான் அதை மாத்துவங்க.. சேவாக் பேட்டி
“ஏலம் என்பது கச்சிதமான அறிவியல் கிடையாது. அது திரவ மிருகம். 25 மணி நேரம் வீரர்களை வாங்குவதைப் போன்றது. அது மன ரீதியாகவும் சில சமயங்களில் உடல் ரீதியாகவும் சோர்வடைய வைக்கிறது. உண்மையைச் சொல்ல வேண்டுமெனில் இப்போதும் எங்களிடம் நல்ல அணி இருக்கிறது. அதனால் நாங்கள் வெற்றிப் பாதைக்கு திரும்பும் தூரம் தொலைவில் இல்லை. சில காயம், சுமாரான ஃபார்ம், திட்டங்களைச் செயல்படுத்தாதது, நிறைய மாற்றங்கள் செய்தது போன்றவற்றால் சரிந்துள்ளோம். எனவே ஆம் எங்கள் அணியில் நிறைய பொறுப்பு மற்றும் ஆன்மா தேடுதல் இருக்கிறது. அது 100% என்னிடமிருந்து துவங்குகிறது” என்று கூறினார்.



