ஐபிஎல் 2026 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 16ஆம் தேதி அபுதாபியில் நடைபெற்று முடிந்தது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிரசாந்த் வீர், கார்த்திக் சர்மா ஆகிய 2 இளம் வீரர்களை தலா 14.20 கோடிக்கு வாங்கியது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. ஏனெனில் இதற்கு முன் அவர்கள் ஐபிஎல் அல்லது சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவத்தைக் கொண்டிருக்கவில்லை.
அதே போல நம்பிக்கை நட்சத்திரம் ரவீந்திர ஜடேஜாவை ட்ரேடிங் முறையில் ராஜஸ்தானுக்கு கொடுத்த சிஎஸ்கே அணி சஞ்சு சாம்சனை 18 கோடிக்கு வாங்கியதும் ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தது. ஏனெனில் 2023 ஃபைனலில் அட்டகாசமான ஃபினிஷிங் செய்த ஜடேஜா சிஎஸ்கே 5வது கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார். அத்துடன் சிஎஸ்கே அணிக்காக அதிக ஆட்டநாயகன் விருதுகளை வென்ற வீரராகவும் ஜடேஜா சாதனை படைத்துள்ளார்.
ஜடேஜாவுக்கு பதில் சாம்சன்:
அப்படிப்பட்ட மேட்ச் வின்னரான ஜடேஜாவை சிஎஸ்கே அணி ராஜஸ்தானுக்கு கொடுத்தது நிறைய சென்னை ரசிகர்களையே ஏமாற்றமடைய வைத்தது. இந்நிலையில் எம்எஸ் தோனி விரைவில் ஓய்வு பெற உள்ளதாக சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்மிங் தெரிவித்துள்ளார். எனவே அவருடைய இடத்தில் தரமான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் வேண்டும் என்பதற்காகவே சாம்சனை வாங்கியதாக அவர் கூறியுள்ளார்.
அத்துடன் தங்களுடைய ஓப்பனிங் ஜோடி அடித்து நொறுக்குவதாக இல்லை என்று கருதியதாகவும் பிளம்மிங் கூறியுள்ளார். மறுபுறம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக சதத்தை அடித்த முதல் விக்கெட் கீப்பர் என்ற சாதனையை சாம்சன் படைத்தார். அத்துடன் இந்தியாவுக்காக ஓப்பனிங்கில் அவர் 3 சதங்களை அடித்து அட்டகாசமாக விளையாடினார்.
விளக்கிய பிளம்மிங்:
எனவே தோனிக்கு மாற்றாகவும் தேவைப்பட்டால் ஓப்பனிங்கில் விளையாட வைப்பதற்காகவும் சாம்சனை டிரேடிங் முறையில் வாங்கியதாக பிளம்மிங் கூறியுள்ளார். இது பற்றி பிளம்மிங் பேசியது பின்வருமாறு. “எங்களுக்கு அங்கே வாய்ப்பிருந்தது. நாங்கள் எங்களுடைய ஓப்பனிங் பேட்டிங்கில் கொஞ்சம் இலகுவாக இருப்பதாக கருதினோம்”
இதையும் படிங்க: 818 ரேட்டிங்.. பும்ராவின் ஆல் டைம் சாதனையை உடைத்த வருண்.. இந்தியாவுக்காக 2 வரலாற்று சாதனை
“அத்துடன் ஏதோ ஒரு கட்டத்தில் எம்எஸ் தோனி நகர்ந்து செல்ல வேண்டும் என்ற உண்மையையும் நாங்கள் பார்த்தோம். சஞ்சு சாம்சன் சர்வதேச அரங்கில் விளையாடிய தரத்தைக் கொண்டவர் என்பதால் அந்த வேலையில் பொருந்துவார். எனவே இது இடத்தை நிரப்புவதை பற்றிய திட்டமாகும். மேலும் அது சென்னை அணியை அடுத்த 2 வருடங்கள் மட்டுமின்றி 6 வருடங்களுக்கு புத்துணர்ச்சியுடன் கட்டமைப்பதற்கான திட்டமாகும்” என்று கூறினார்.



