TNPL 2023 : டெத் ஓவரில் மெகா மேஜிக் நிகழ்த்திய சேலம் – கையில் வைத்திருந்த திருப்பூரின் வெற்றியை தட்டி பறித்தது எப்படி

TNPL 21
- Advertisement -

தமிழகத்தில் நடைபெற்று வரும் டிஎன்பிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஜூலை 1ஆம் தேதி மதியம் 3.15 மணிக்கு நடைபெற்ற 22வது லீக் போட்டியில் திருப்பூர் தமிழன்ஸ் மற்றும் சேலம் ஸ்பார்ட்னன்ஸ் ஆகிய அணிகள் மோதின. திருநெல்வேலியில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற திருப்பூர் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய சேலத்திற்கு துஷார் ரஹீஜா வீசிய முதல் ஓவரிலேயே கௌசிக் காந்தி கோல்டன் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அடுத்த ஓவரிலேயே மறுபுறம் தடுமாறிய மற்றொரு தொடக்க வீரர் அரவிந்த் 1 (5) ரன்னில் புவனேஸ்வரன் வேகத்தில் ஃபெவிலியன் திரும்பினார்.

அதனால் 1/2 என்ற மோசமான துவக்கத்தை பெற்று ஆரம்பத்திலேயே திண்டாடிய அந்த அணிக்கு அடுத்ததாக கவின் மற்றும் சன்னி சந்து ஆகியோர் நிதானமான பேட்டிங்கை வெளிப்படுத்தி சரிவை சரி செய்ய போராடினர். அதில் கவின் 3 பவுண்டரியுடன் 19 (18) ரன்களில் அவுட்டாக அடுத்ததாக வந்த மோகித் ஹரிஹரன் தடுமாறி அடுத்த சில ஓவர்களில் 3 (10) ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை கொடுத்தார். அந்த நிலைமையில் களமிறங்கிய அபிஷேக் 10 (15) ரன்களுக்கு மேல் தாக்கு பிடிக்க முடியாமல் அவுட்டாகி சென்றார்.

- Advertisement -

திரில் போட்டி:
இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து நங்கூரமாகவும் அதிரடியாகவும் செயல்பட்ட சன்னி சந்து அரை சதமடித்து 6 பவுண்டரி 2 சிக்சருடன் 61 (44) ரன்கள் குவித்து போராடி முக்கிய நேரத்தில் சாய் கிஷோர் சுழலில் சிக்கினார். இறுதியில் அபிஷேக் டன்வர் 17 (6) அட்னன் கான் 15 (9) ஜெகநாத் ஸ்ரீனிவாஸ் 11 (7) என லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கணிசமான ரன்களை அதிரடியாக எடுத்த போதிலும் 20 ஓவர்களில் சேலம் 155 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்தளவுக்கு பந்து வீச்சில் அசத்திய திருப்பூர் சார்பில் அதிகபட்சமாக புவனேஸ்வரன் 3 விக்கெட்டுகளும் சாய் கிஷோர் மற்றும் திரிலோக் நாக் ஆகியோர் தலா 2 விக்கெட்களும் சாய்த்தனர்.

அதை தொடர்ந்து 156 என்ற இலக்கை துரத்திய திருப்பூருக்கு தொடக்க வீரர் துஷார் ரஹீஜாவை 1 பவுண்டரி 2 சிக்சருடன் 16 (21) ரன்களில் அவுட்டாக்கிய சச்சின் ரதி அடுத்ததாக வந்து முரட்டுத்தனமாக 3 பவுண்டரி 2 சிக்சருடன் 26 (10) ரன்களை அடித்த சாய் கிசோரையும் பெவிலியன் அனுப்பி வைத்தார். அடுத்த சில ஓவர்களில் மறுபுறம் தடுமாறிய மற்றொரு தொடக்க வீரர் ராதாகிருஷ்ணனும் அவரிடமே 16 (21) ரன்களில் அவுட்டாக்கி சென்றார்.

- Advertisement -

அதை பயன்படுத்தி மிடில் ஓவர்களில் சேலம் ரன்களை கட்டுக்கோப்புடன் பந்து வீசியதால் அதிரடி காட்ட முடியாமல் தவித்த விஜய் சங்கர் 12 (12) ரன்களிலும் சத்துர்வேத் 11 (8) ரன்களிலும் சீரான இடைவெளியில் அவுட்டாகி சென்றனர். அப்போது கடைசி 5 ஓவரில் வெறும் 40 ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டிய சூழ்நிலையில் 5 விக்கெட்டுகள் கைவசம் இருந்ததால் திருப்பூர் எளிதாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அடுத்த ஓவரிலேயே ராஜேந்திரன் விவேக் 6 (5) ரன்களில் அவுட்டாகி செல்ல 17வது ஓவரில் மேஜிக் நிகழ்த்திய செல்வகுமரன் 2வது பந்தில் மறுபுறம் நங்கூரத்தை போட முயன்ற பாலச்சந்தர் அனிருத்தை 22 (23) ரன்களில் அவுட்டாக்கி கடைசி 2 பந்துகளில் புவனேஸ்வரனை 6 (3) ரன்களிலும் அடுத்து வந்த அஜித் ராமை கோல்டன் டக் அவுட் செய்து போட்டியில் மெகா திருப்புமுனையை ஏற்படுத்தினார் என்றே சொல்லலாம்.

ஏனெனில் கடைசி 4 ஓவரில் 30 ரன்கள் எடுக்க வேண்டிய சூழ்நிலையில் கை வசம் 1 விக்கெட் மட்டுமே இருந்த போது துல்லியமாக செயல்பட்ட சேலத்திற்கு எதிராக பதில் சொல்ல முடியாத டெயில் எண்டர்கள் அள்ளிராஜ் கருப்புசாமி 12* (10) ரன்களும் கோகுல் மூர்த்தி 11* (11) ரன்கள் மட்டுமே எடுத்தனர். அதனால் 20 ஓவர்களில் திருப்பூரை 147/9 ரன்களுக்கு கட்டுப்படுத்தி வெறும் 8 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற சேலம் சார்பில் அதிகபட்சமாக சச்சின் ரதி 3 மற்றும் செல்வகுமரன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

அதனால் 6 போட்டிகளில் 2வது வெற்றியை பதிவு செய்த சேலம் புள்ளி பட்டியலில் 7வது இடத்தைப் பிடித்து பிளே ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்கிறது. மறுபுறம் 6 போட்டிகளில் 4வது தோல்வியை பதிவு செய்த திருப்பூர் பின்னடைவை சந்தித்துள்ளது.

Advertisement