
இந்தியா மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி ஆகஸ்ட் 4ஆம் தேதி கொழும்பு நகரில் துவங்கியது. இத்தொடரின் முதல் போட்டி யாருக்கும் வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிந்தது. அந்த சூழ்நிலையில் இந்திய நேரப்படி மதியம் 2.30 மணிக்கு துவங்கிய 2வது போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணிக்கு முதல் பந்திலேயே பதும் நிசாங்கா இந்தியாவின் சிராஜ் கோல்டன் டக் அவுட்டாக்கினார். இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் 14 வருடங்கள் கழித்து இலங்கைக்கு எதிரான ஒரு போட்டியின் முதல் பந்திலேயே விக்கெட்டை எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையை முகமது சிராஜ் படைத்தார்.
சுந்தர் அசத்தல்:
கடைசியாக கடந்த 2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு போட்டியில் இலங்கையின் உபுல் தரங்காவை இந்தியாவின் பிரவீன் குமார் முதல் பந்திலேயே டக் அவுட்டாக்கினார். அத்துடன் வெங்கடேஷ் பிரசாத், ஜாகீர் கான், பிரவீன் குமார் ஆகியோருக்கு பின் இலங்கைக்கு எதிரான ஒரு ஒருநாள் போட்டியின் முதல் பந்திலேயே விக்கெட் எடுத்த 4வது இந்திய வீரர் என்ற பெருமையும் முகமத் சிராஜ் பெற்றார்.
அதைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த அபிஷ்கா பெர்னாண்டோ மற்றும் குசால் மெண்டிஸ் ஆகியோர் நிதானமாக விளையாடினர். அந்த வகையில் இரண்டாவது விக்கெட்டுக்கு 74 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்த ஜோடியில் பெர்னாண்டோவை 40 ரன்களில் காலி செய்த வாஷிங்டன் சுந்தர் அடுத்த ஓவரிலேயே குசால் மெண்டிஸை 30 ரன்களில் அவுட்டாக்கினார். அதை தொடர்ந்து நிதானமாக விளையாட முயற்சித்த சமரவிக்ரமா 14 ரன்களில் நடையை கட்டினார்.
அடுத்து வந்த லியனகே 12 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் மிடில் ஆர்டரில் நங்கூரத்தை போட முயற்சித்த கேப்டன் அசலங்கா 25 ரன்களில் மீண்டும் வாஷிங்டன் சுந்தர் சுழலில் அவுட்டானார். அதனால் 136/6 என இலங்கை தடுமாறிய போது கடந்து போட்டியின் நாயகன் துணித் வெல்லலாகே அதிரடியாக விளையாடினார். குறிப்பாக கமிண்டு மெண்டிஸ் உடன் ஜோடி சேர்ந்து 7வது விக்கெட்டுக்கு 72 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அவர் 39 (35) ரன்கள் குவித்து அவுட்டானார்.
இதையும் படிங்க: அந்த இந்திய வீரரின் ஸ்டைலை பின்பற்றி.. இந்தியாவை டெஸ்ட் தொடரில் சாய்ப்போம்.. வங்கதேச வீரர் நம்பிக்கை
இதற்கிடையே கேப்டன் ரோகஹித் சர்மா நீண்ட நாட்கள் கழித்து 2 ஓவர்கள் பந்து வீசி 11 ரன்கள் மட்டும் கொடுத்து இந்திய ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழத்தினார். இறுதியில் கமிண்டு மெண்டிஸ் 40, அகிலா தனஞ்ஜெயா 15 ரன்கள் எடுத்ததால் 50 ஓவரில் 240/9 இலங்கை ரன்கள் எடுத்தது. இந்தியா சார்பில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 10 ஓவரில் 1 மெய்டன் உட்பட 3 விக்கெட், குல்தீப் யாதவ் 2, சிராஜ் அக்சர் படேல் தலா 1 விக்கெட் எடுத்தனர்.