தென்னாப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியானது தற்போது அந்த அணிக்கு எதிராக நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. நவம்பர் 27-ஆம் தேதி டர்பன் நகரில் துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
மோசமான சாதனையை நிகழ்த்திய இலங்கை :
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி தங்களது முதல் இன்னிங்சில் 191 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக இலங்கை அணி நிச்சயம் முதல் இன்னிங்சில் பெரிய ரன் குவிப்பில் ஈடுபடும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் வரலாறு காணாத வகையில் மோசமான ஒரு சரிவை சந்தித்தது.
அதிலும் குறிப்பாக கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகக் குறைந்த பந்துகளில் விளையாடி ஆல் அவுட்டான அணியாக இலங்கை மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் இலங்கை அணி வெறும் 13.5 ஓவர்கள் அதாவது 83 பந்துகள் மட்டுமே சந்தித்த நிலையில் 42 ரன்களுக்கு சுருண்டது.
இதன் மூலம் கடந்த 100 ஆண்டில் இல்லாத அளவிற்கு 83 பந்துகளை மட்டுமே சந்தித்து குறைந்த பந்துகளில் ஆல் அவுட்டான அணி என்கிற மோசமான சாதனையை இலங்கை அணி சந்தித்துள்ளது. தென்னாப்பிரிக்க அணி சார்பாக மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய மார்க்கோ யான்சன் 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தார்.
அதனை தொடர்ந்து தங்களது இரண்டாவது இன்னிங்ஸ்ஸை விளையாடிய தென்னாப்பிரிக்க அணி மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 5 விக்கெட்டுகளை இழந்து 366 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. அதனைத்தொடர்ந்து 516 ரன்கள் அடித்தால் வெற்றி இலக்குடன் இலங்கை அணி தங்களது இரண்டாவது இன்னிங்க்ஸை விளையாடி வருகிறது.
இதையும் படிங்க : அந்த 3 பேர் இல்லாம ஜெய்ச்ச இந்தியாவுக்கு மகத்தான வெற்றி.. இப்போவும் 3 – 1ன்னு ஆஸி ஜெய்க்கும்.. பாண்டிங் சவால்
ஏற்கனவே இலங்கை அணி ஜாம்பவான் வீரர்கள் இல்லாமல் தவித்து வரும் வேளையில் தற்போது மீண்டும் ஒரு மோசமான இன்னிங்க்ஸை விளையாடியுள்ளது அந்த அணியின் ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை நிச்சயம் ஏற்படுத்தியிருக்கும்.