ஐக்கிய அரபு நாடுகளில் ஐசிசி 2024 மகளிர் டி20 உலகக் கோப்பை அக்டோபர் மூன்றாம் தேதி கோலாகலமாக துவங்கியது. அதில் சார்ஜாவில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம் வகிக்கும் பாகிஸ்தான் மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் மோதின. அப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 20 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ரன்கள் மட்டுமே எடுத்தது. முனிபா அலி 11, குல் பெரோசா 2, சிட்ரா அமின் 12, சோஹைல் 18 என முக்கிய வீராங்கனைகள் பெரிய ரன்கள் எடுக்கத் தவறிய அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் பாத்திமா சானா 30 (20), நிதா தார் 23 (22) ரன்கள் எடுத்தனர்.
சொதப்பிய இலங்கை:
இலங்கைக்கு அதிகபட்சமாக கேப்டன் சமாரி அத்தப்பட்டு, சுகந்திகா குமாரி, பிராபோதனி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதைத்தொடர்ந்து 117 ரன்களை துரத்திய இலங்கைக்கு நம்பிக்கை நட்சத்திரம் மற்றும் கேப்டன் சமாரி அத்தப்பட்டு 6 (9) ரன்களில் ஆரம்பத்திலேயே அவுட்டாகி மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தார். போதாக்குறைக்கு அடுத்து வந்த சமரவிக்கிரமா 7, ஹாசினி பெரேரா 8, கவிசா பிலாரி 3 ரன்களில் அவுட்டானார்கள்.
அதனால் ஏற்பட்ட அழுத்தத்தில் மறுபுறம் மெதுவாக விளையாடிய மற்றொரு துவக்க வீராங்கனை விஸ்மி குணரத்னே 20 (34) ரன்களில் பெவிலியன் திரும்பினார். அதன் காரணமாக 52-5 என தடுமாறிய இலங்கைக்கு மிடில் ஆர்டரில் அனுஷ்கா சஞ்சீவினி 5, டீ சில்வா 22 (25) ரன்களில் அவுட்டாகி மேலும் பின்னடைவை ஏற்படுத்தினர். இறுதியில் 20 ஓவரில் இலங்கையை 85-9 ரன்களுக்கு சுருட்டிய பாகிஸ்தான் 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் வெற்றி:
அந்த அணிக்கு அதிகபட்சமாக சடியா இக்பால் 3, ஒமைமா சோஹைல் 2, நாசரா சந்து 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். ஆடவர் கிரிக்கெட்டில் 2024 டி20 உலகக் கோப்பை, சொந்த மண்ணில் வங்கதேசத்துக்கு எதிராக டெஸ்ட் தொடரில் முதல் முறையாக தோல்வி என சமீப காலங்களில் பாகிஸ்தான் அடுத்தடுத்த படுதோல்விகளை சந்தித்து வந்தது.
இதையும் படிங்க: அவருக்கும் இந்திய அணிக்கும் தலை வணங்குறேன்.. என்ன ஒரு அற்புதமான டெஸ்ட் வெற்றி.. ப்ராட் ஹாடின்
அந்த சூழ்நிலையில் மகளிரணி பெற்ற இந்த வெற்றி பாகிஸ்தான் ரசிகர்களுக்கு மிகப்பெரிய நிம்மதியாக அமைந்தது. மறுபுறம் 2024 மகளிர் ஆசிய கோப்பையில் இந்தியாவை ஃபைனலில் தோற்கடித்து இலங்கை சாம்பியன் பட்டம் வென்றது. அதனால் ஆசிய சாம்பியனாக திகழும் இலங்கை இத்தொடரின் முதல் போட்டியிலேயே பாகிஸ்தானிடம் குறைந்த இலக்கை சேசிங் செய்ய முடியாமல் பரிதாபமாக தோற்றுள்ளது.



