55/5 என சரிந்த ஆப்கானிஸ்தான்.. இலங்கைக்கு டஃப் கொடுத்த நபி – ஓமர்சாய் ஜோடி.. சோதனையிலும் உலக சாதனை

AFG vs SL.jpeg
- Advertisement -

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் களமிறங்கியுள்ளது. அத்தொடரின் முதல் போட்டி பிப்ரவரி ஒன்பதாம் தேதி பல்லகேல் நகரில் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அதிரடியாக விளையாடி 50 ஓவரில் 381/3 ரன்கள் சேர்த்தது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக துவக்க வீரர் பதும் நிஷாங்கா இரட்டை சதமடித்து 210* ரன்கள் குவித்தார். இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதமடித்த முதல் இலங்கை வீரர் என்ற மாபெரும் சாதனையை அவர் படைத்த நிலையில் ஆப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஃபரீத் அகமது இரண்டு விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

சோதனையிலும் சாதனை:
அதைத் தொடர்ந்து 382 என்ற பெரிய இலக்கை துரத்திய ஆப்கானிஸ்தானுக்கு ரகமனுல்லா குர்பாஸ் 1, இப்ராஹிம் ஜாட்ரான் 4, ரஹ்மத் ஷா 7, கேப்டன் ஷாகிதி 7, குல்பதின் நைப் 16 என முக்கிய பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டாகி பெரிய ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 55/5 என்ற சுமாரான துவக்கத்தை பெற்ற ஆப்கானிஸ்தான் 200 ரன்கள் தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அப்போது ஜோடி சேர்ந்த அசமதுல்லா ஓமர்சாய் மற்றும் அனுபவ வீரர் முகமது நபி ஆகியோர் ஜோடி சேர்ந்து இலங்கை பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்டனர். அந்த வகையில் 9வது ஓவரில் இணைந்த இவர்கள் மிடில் ஓவர்கள் முழுவதும் இலங்கைக்கு சிம்ம சொப்பனமாக மாறி நேரம் செல்ல செல்ல அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆப்கானிஸ்தானை முழுமையாக மீட்டெடுத்தனர்.

- Advertisement -

அதே வேகத்தில் 46 ஓவர்கள் வரை நிலைத்து நின்று அசத்திய இந்த ஜோடி 6வது விக்கெட்டுக்கு 242 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் போட்டு ஆப்கானிஸ்தானை தூக்கியது முகமது நபி சதமடித்து 15 பவுண்டரி 3 சிக்ஸருடன் 136 (130) ரன்கள் விளாசி அவுட்டானார். அதே போல மறுபுறம் போராடிய ஓமர்சாய் முடிந்தளவுக்கு போராடி 13 பவுண்டரி 6 சிக்ஸருடன் சதமடித்து 149* (115) ரன்கள் குவித்தார்.

இருப்பினும் 50 ஓவர்களில் 339/6 ரன்களுக்கு ஆப்கானிஸ்தானை கட்டுப்படுத்திய இலங்கை 42 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதிகபட்சமாக பிரமோத் மதுசன் 4 விக்கெட்டுகள் எடுத்தார். ஆனால் இதன் வாயிலாக இலங்கைக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் ஒருநாள் போட்டிகளில் சேசிங் செய்யும் போது அதிக ரன்கள் (332/6) அடித்த அணி என்ற சாதனையை ஆப்கானிஸ்தான் படைத்தது.

இதையும் படிங்க: தனது 100 ஆவது டி20 போட்டியில் விளையாடிய டேவிட் வார்னர் படைத்த வினோதமான சாதனை – விவரம் இதோ

இதற்கு முன் கடந்த 2017இல் ஜிம்பாப்வே 322/4 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும். அதை விட 242 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த முகமது நபி – ஓமர்சாய் ஜோடி ஒருநாள் கிரிக்கெட்டின் வரலாற்றில் தோல்வியை சந்தித்த போட்டியில் எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடி என்ற உலக சாதனையும் படைத்தனர். இதற்கு முன் கடந்த 26 வருடங்களுக்கு முன்பாக 1998இல் இந்தியாவுக்கு எதிரான ஒரு போட்டியில் இஜாஸ் அகமது – சயீஸ் அன்வர் ஆகியோர் 235 ரன்கள் பார்ட்னர்ஷிப் குவித்தும் பாகிஸ்தான் தோல்வியை சந்தித்ததே முந்தைய சாதனையாகும்.

Advertisement