
நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடும் இந்திய அணியானது முதல் போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றிருந்தது. அதனை தொடர்ந்து ஜனவரி 14-ஆம் தேதி நேற்று ராஜ்கோட் நகரில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தோல்வியை சந்தித்தது.
இதன் காரணமாக தற்போது இந்த தொடரானது ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இந்நிலையில் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு சுழப்பந்து வீச்சாளர்கள் சரியான தாக்கத்தை ஏற்படுத்த முடியாத தான் காரணம் என்று பலரும் பேசி வருகின்றனர்.
ஏனெனில் நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர்கள் மிடில் ஓவர்களில் தாக்கத்தை ஏற்படுத்திய போது இந்திய பந்துவீச்சாளர்களால் அதனை செய்ய முடியவில்லை. இந்நிலையில் நட்சத்திர ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவிற்கு பதிலாக ஒருநாள் போட்டிகளில் அக்சர் பட்டேல் விளையாடலாம் என முன்னாள் இந்திய வீரரான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசி அவர் கூறுகையில் : எனக்கு ஜடேஜா மிகவும் பிடித்த வீரர்களில் ஒருவர். ஆனால் தற்போது அவர் என்ன செய்ய வேண்டும்? என்று புரியாதது போல் இருக்கிறார். அதே சமயத்தில் தற்போதைய இந்திய ஒருநாள் அக்சர் பட்டேல் இந்த தொடரில் விளையாடிருக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து.
ஏனெனில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அக்சர் பட்டேல் மிகச் சிறப்பாக செயல்பட்டிருந்தார். அதேபோன்று டி20 உலக கோப்பை தொடரிலும் அவர் நமக்கு நம்பிக்கையான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். அவரைப் போன்ற ஒரு வீரரை நிச்சயம் தேர்வு செய்திருக்க வேண்டும் என்று ஸ்ரீகாந்த் கூறினார்.
இதையும் படிங்க : 22 வயதிலேயே பலரால் முடியாததை.. ஆஸியில் சாதிச்ச நிதிஷ்க்கு.. டைம் கொடுக்காம திட்டாதீங்க.. விஹாரி ஆதரவு
மேலும் இந்திய அணிக்கு இனி ஒரு ஆல்ரவுண்டர் தேவை என்றால் மித வேகப்பந்து வீசக்கூடிய ஆல்ரவுண்டராக இருக்க வேண்டும். ஏனெனில் மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தால் அது அணியின் காம்பினேஷனுக்கு கரெக்டாக இருக்கும் என ஸ்ரீகாந்த் கூறினார்.