மண்ணை கவ்விய ஆஸ்திரேலியா – 30 வருடங்களுக்கு பின் வரலாறு படைத்து மக்களை மகிழ வைத்த இலங்கை

SL vs AUS ODI
- Advertisement -

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அங்கு 3 டி20, 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்று வருகிறது. இந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2 – 1 என்ற கணக்கில் இலங்கையை சொந்த மண்ணில் மண்ணை கவ்வ வைத்த ஆஸ்திரேலியா கோப்பையை வென்று தன்னை உலக டி20 சாம்பியன் என்று நிரூபித்தது. அதைத் தொடர்ந்து ஜூன் 16இல் துவங்கிய ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது.

அந்த அடுத்தடுத்த தோல்விகளால் துவளாத இலங்கை ஜூன் 16, 19 ஆகிய தேதிகளில் நடைபெற்ற அதற்கடுத்த 2 ஒருநாள் போட்டிகளில் அபாரமாக செயல்பட்டு அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று ஆஸ்திரேலியாவுக்கு தக்க பதிலடி கொடுத்து 2 – 1* என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. அந்த நிலைமையில் இந்த தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் முக்கியமான 4-வது போட்டி ஜூன் 22-ஆம் தேதியான நேற்று கொழும்புவில் மதியம் 2.30 மணிக்கு துவங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இலங்கை 49 ஓவர்களில் போராடி 258 ரன்கள் மட்டுமே எடுத்தது.

- Advertisement -

இலக்கு 259:
அந்த அணிக்கு டிக்வெல்லா 1 (3), நிஷாங்கா 13 (25), குஷால் மெண்டிஸ் 14 (21) என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டானதால் 34/3 என ஆரம்பத்திலேயே திணறியது. அப்போது ஜோடி சேர்ந்த டீ சில்வா – அசலங்கா ஆகியோர் நிதானமாக பேட்டிங் செய்து 4-வது விக்கெட்டுக்கு 101 ரன்கள் முக்கியமான பார்ட்னர்ஷிப் அமைத்து தங்களது அணியை மீட்டெடுத்தனர். அதில் 7 பவுண்டரியுடன் 60 (61) ரன்கள் எடுத்திருந்தபோது டீ சில்வா ஆட்டமிழக்க அடுத்து வந்த கேப்டன் ஷனாகா 4 (8) வெல்லலேக் 19 (35) கருணரத்னே 7 (9) என முக்கிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினர்.

இருப்பினும் மறுபுறம் நங்கூரமாக நின்ற அஷலங்கா 10 பவுண்டரி 1 சிக்சருடன் சதமடித்து 110 (106) ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசியில் ஹஸரங்கா 21* (20) ரன்கள் எடுத்து பினிஷிங் கொடுக்க ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக பட் கமின்ஸ், மிட்சேல் மார்ஷ், குனேமான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதை தொடர்ந்து 259 என்ற இலக்கை துரத்திய ஆஸ்திரேலியாக்கு கேப்டன் ஆரோன் பின்ச் டக் அவுட்டாகி ஆரம்பத்திலேயே அதிர்ச்சி கொடுத்தார். அடுத்து வந்த மிட்சேல் மார்ஷ் 26 (27) மார்னஸ் லபுஸ்ஷேன் 14 (21) அலெஸ் கேரி 19 (20) என முக்கிய பேட்ஸ்மேன்கள் நல்ல தொடக்கத்தை பெற்றாலும் பெரிய ரன்களை எடுக்க முடியாமல் சீரான இடைவெளிகளில் அவுட்டானார்கள்.

- Advertisement -

போராடிய வார்னர்:
இருப்பினும் மறுபுறம் மற்றொரு தொடக்க வீரர் டேவிட் வார்னர் நங்கூரமாக நின்று நிதானமாக ரன்களை சேர்க்க எதிர்ப்புறம் வந்த டிராவிஸ் ஹெட் 27 (33) கிளென் மேக்ஸ்வெல் 1 (3) என முக்கிய பேட்ஸ்மேன்கள் மீண்டும் அவருக்கு கை கொடுக்காமல் சொற்ப ரன்களில் அவுட்டானார்கள். அதனால் 190/6 என தடுமாறிய ஆஸ்திரேலியாவை காப்பாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட டேவிட் வார்னர் 12 பவுண்டரியுடன் 99 ரன்கள் எடுத்திருந்த போது ஸ்டம்பிங் முறையில் அவுட்டாகி சதமடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டு ஏமாற்றத்துடன் சென்றார்.

அதனால் மேலும் பின்னடைந்த ஆஸ்திரேலியாவுக்கு அடுத்து வந்த கிறிஸ் க்ரீன் 13 (25) பட் கமின்ஸ் 35 (43) என முக்கிய ரன்களை எடுத்து வெற்றிக்காகப் போராடி ஆட்டமிழந்தனர். அதன் காரணமாக போட்டியில் திடீர் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் கேப்டன் சனாகா வீசிய கடைசி ஓவரில் வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்ட போது அதை எதிர்கொண்ட மேத்யூ குனேமான் முதல் பந்தில் ரன் எடுக்காமல் 4, 2, 4, 4 என அடுத்த 4 பந்துகளில் 14 ரன்களை தெறிக்கவிட்ட அவர் கடைசி பந்தில் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்ட போது துரதிர்ஷ்டவசமாக கேட்ச் கொடுத்து 15 (13) ரன்களில் ஆட்டமிழந்தார். அதனால் கடைசி பந்தில் இலங்கை வெறும் 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

- Advertisement -

30 வருடங்கள்:
இலங்கை சார்பில் அதிகபட்சமாக கருணரத்னே, டி சில்வா, வண்டெர்செய் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் எடுத்தனர். இதனால் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 3 – 1* என்ற கணக்கில் கைப்பற்றியுள்ள இலங்கை ஒருநாள் கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் 30 வருடங்களுக்கு பின் ஆஸ்திரேலியாவை மண்ணை கவ்வ வைத்து தொடரை வென்று சரித்திரம் படைத்துள்ளது. இந்த வெற்றிக்கு சதமடித்து முக்கிய பங்காற்றி அசலங்கா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

1. கடைசியாக கடந்த 1992இல் அர்ஜுனா ரணதுங்கா தலைமையிலான இலங்கை ஆலன் பார்டர் தலைமையிலான ஆஸ்திரேலியாவை 2 – 1 (3) என்ற கணக்கில் சொந்த மண்ணில் தோற்கடித்திருந்தது.

- Advertisement -

2. அதன்பின் கடந்த 30 வருடங்களில் ஜெயவர்த்தனே, சங்கக்காரா போன்ற ஜாம்பவான்கள் தலைமையில் ரிக்கி பாண்டிங், மைக்கேல் கிளார்க், ஜார்ஜ் பெய்லி ஆகியோரது தலைமையிலான ஆஸ்திரேலியாவை சொந்த மண்ணில் கூட சாய்க்க முடியாத இலங்கை தற்போது கத்துக்குட்டியாக இளம் வீரர்களை வைத்துக்கொண்டு சரித்திரம் படைத்துள்ளது உண்மையாகவே பாராட்டத்தக்கதாகும்.

இதையும் படிங்க : IND vs ENG : கேப்டன் ரோஹித் மற்றும் விராட் கோலிக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ள பி.சி.சி.ஐ – காரணம் என்ன?

3. அதைவிட தற்போது பொருளாதார நெருக்கடியில் தினந்தோறும் போராட்டத்தையும் கவலைக்கும் உள்ளாகியுள்ள இலங்கை மக்களின் முகத்திலும் உடலிலும் இந்த சரித்திர வெற்றி பிரகாசமான புன்னகையை கொண்டுவந்ததை நேற்று கொழும்பு மைதானத்தில் பார்க்க முடிந்தது அனைவரையும் மகிழ்ச்சியடைய வைத்தது.

Advertisement