இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட உள்ளது. ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை வென்ற கையோடு ஜிம்பாப்வே மண்ணிலும் வெற்றி கண்ட இந்தியா அடுத்ததாக இலங்கையில் விளையாடுகிறது. அந்தத் தொடர்களுக்கான இந்திய அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
அதில் பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள கௌதம் கம்பீர் புதிய டி20 கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை கழற்றிவிட்டு சூரியகுமார் யாதவை தேர்ந்தெடுத்துள்ளார். இருப்பினும் ருதுராஜ், அபிஷேக் ஆகியோர் தேர்வு செய்யப்படாதது ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்தியாவுக்கு எதிராக முதலில் நடைபெறும் டி20 தொடருக்கான தங்களுடைய அணியை இலங்கை வாரியம் அறிவித்துள்ளது.
இலங்கை அணி:
2024 டி20 உலகக் கோப்பையில் சந்தித்த படுதோல்விக்கு பொறுப்பேற்ற வணிந்து ஹஸரங்கா தம்முடைய கேப்டன்ஷிப் பதவியை ராஜினாமா செய்திருந்தார். எனவே அவருக்கு பதில் தற்போது சரித் அசலங்காவை புதிய டி20 கேப்டனாக இலங்கை வாரியம் தேர்ந்தெடுத்துள்ளது. அத்துடன் ஜாம்பவான் சனாத் ஜெயசூர்யா இலங்கை அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அந்த வகையில் இந்தியா போலவே இலங்கையும் புதிய கேப்டன் மற்றும் பயிற்சியாளரை அறிவித்து அதிரடி காட்டியுள்ளது. அவர்களது தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை அணியில் மூத்த அனுபவ வீரர் ஏஞ்சலோ மேத்தியூஸ் நீக்கப்பட்டுள்ளார். அதே சமயம் 2024 டி20 உலக கோப்பையில் கழற்றி விடப்பட்டிருந்த தசுன் சனாக்கா, தினேஷ் சண்டிமால் ஆகிய நட்சத்திர வீரர்கள் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் சிஎஸ்ஸ்கே அணியில் சிறப்பாக விளையாடி 2024 எல்பிஎல் தொடரிலும் அசத்திய மஹீஷ் தீக்சனா, மதீஸா பதிரனா ஆகியோர் இலங்கை அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மொத்தத்தில் இந்தியாவை தங்களுடைய சொந்த மண்ணில் சாய்த்து வெற்றி காண்பதற்காக இலங்கை வாரியம் முடிந்த அளவுக்கு தரமான வீரர்களை கொண்ட 15 பேரை தேர்ந்தெடுத்துள்ளது.
இதையும் படிங்க: அவ்வளவு தான் முடிஞ்ச்சு.. புதிய டி20 கேப்டன் சூர்யகுமாருக்கு அந்த சான்ஸ் தரமாட்டோம்.. அகர்கர் சூசகம்
அந்த அணி பின்வருமாறு: சரித் அசலங்கா (கேப்டன்), பதும் நிசாங்கா, கௌசல் ஜனித் பெரேரா, அவிஷ்கா பெர்னாண்டோ, தினேஷ் சண்டிமால், கமிண்டு மெண்டிஸ், தசுன் சனாகா, வணிந்து ஹசரங்கா, துணித் வெல்லலகே, மஹீஸ் தீக்சனா, சமிந்து விக்கிரமசிங்கே, மதிஷா பதிரனா, நுவான் துஷாரா, துஷ்மந்தா சமீரா, பினுரா பெர்னாண்டோ