இந்திய டி20 கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக சூரியகுமார் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். குறிப்பாக 2024 டி20 உலகக் கோப்பை வெற்றியுடன் ரோகித் சர்மா 20 ஓவர் போட்டிகளில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதைத்தொடர்ந்து டி20 உலகக் கோப்பையில் துணைக் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா புதிய கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.
ஆனால் சுமாரான ஃபிட்னஸ் காரணமாக பாண்டியா இந்தியா விளையாடும் அனைத்து தொடர்களிலும் விளையாடுவதில்லை. எனவே புதிய பயிற்சியாளர் கௌதம் கம்பீர் 2026 டி20 உலகக் கோப்பைக்கு தொடர்ந்து விளையாடக்கூடிய நிலையான கேப்டனை வளர்க்க நினைக்கிறார். அதனால் பாண்டியாவை கழற்றி விட்டுள்ள அவர் சூரியகுமாரை புதிய கேப்டனாக தேர்ந்தெடுத்துள்ளார்.
முடிந்த வாய்ப்பு:
இதைத்தொடர்ந்து ஜூலை 27ஆம் தேதி துவங்கும் இலங்கை டி20 தொடரில் சூரியகுமார் தலைமையில் இந்தியா களமிறங்குகிறது. ஆனால் அதே சுற்றுப்பயணத்தில் அடுத்ததாக நடைபெறும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் சூரியகுமார் யாதவ் கழற்றி விடப்பட்டுள்ளார். சொல்லப்போனால் அறிமுகமானது முதலே டி20 கிரிக்கெட்டில் அடித்து நொறுக்கும் சூரியகுமார் இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றி நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக செயல்பட்டு வருகிறார்.
ஆனால் கொஞ்சம் மெதுவாக விளையாட வேண்டிய ஒருநாள் போட்டிகளில் ரொம்பவே தடுமாறும் அவர் ஒருமுறை கூட சதமடித்ததில்லை. குறிப்பாக 2023 உலகக்கோப்பை ஃபைனலில் மோசமாக விளையாடிய அவர் இந்தியாவின் தோல்விக்கு காரணமாக அமைந்தார். இந்நிலையில் சூரியகுமாரை டி20 வீரராக மட்டுமே பார்ப்பதாக தெரிவிக்கும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் ஒருநாள் கிரிக்கெட்டில் அவருக்கான வாய்ப்பு முடிந்ததாக மறைமுகமாக அறிவித்துள்ளார்.
குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட்டில் நன்றாக விளையாடி வரும் ஸ்ரேயாஸ் ஐயர், ராகுல், ரிஷப் பண்ட் மிடில் ஆர்டரில் பலம் சேர்ப்பதால் சூரியகுமாருக்கான தேவையில்லை என்றும் அஜித் அகர்கர் கூறியுள்ளார். இது பற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியது பின்வருமாறு. “ஒருநாள் அணியில் சூரியகுமாரை தேர்ந்தெடுப்பது பற்றி தற்போதைய நிலைமையில் நாங்கள் விவாதிக்கவில்லை”
இதையும் படிங்க: டி20 கேப்டன்ஷிப் கொடுத்த தேர்வுக்குழு.. அப்படியே சூர்யாகுமாருக்கு இந்த ஆப்பையும் வெச்சுட்டாங்க.. ஆகாஷ் சோப்ரா பேட்டி
“ஏனெனில் 2023 உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடிய ஸ்ரேயாஸ், கேஎல் ராகுல் ஆகியோர் மீண்டும் வந்துள்ளனர். ரிஷப் பண்ட்டும் வந்துள்ளார். அவர்களால் நமது மிடில் ஆர்டரில் தேவையான தரம் இருக்கிறது. எனவே தற்சமயத்தில் சூரியகுமார் டி20 பிளேயராக பார்க்கிறோம். அதே சமயம் டி20 கிரிக்கெட்டில் சிறந்த பேட்ஸ்மேனாகவும் அதைப் பற்றி நல்ல மூளையையும் கொண்டுள்ளதால் சூரியகுமார் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்” என்று கூறினார்.



