ஐசிசி உலக கோப்பை 2023 : ரணதுங்காவின் 1996 மேஜிக் மீண்டும் அரங்கேறுமா.. இலங்கை அணியின் முழுமையான அலசல்

Sri lanka
- Advertisement -

உலக கிரிக்கெட்டின் புதிய சாம்பியனை தீர்மானிப்பதற்காக ஐசிசி நடத்தும் 2023 உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை வரலாற்றில் முதல் முறையாக முழுவதுமாக இந்திய மண்ணில் நடைபெற உள்ளது. அதில் சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படும் இந்தியாவுக்கு நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற அணிகள் பெரிய சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே சமயம் அந்த அணிகளுக்கு இலங்கை சவாலை கொடுத்து கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு அந்நாட்டு ரசிகர்களிடம் காணப்படுகிறது. கடந்த 1996இல் அர்ஜுனா ரணதுங்கா தலைமையில் அரவிந்தா டீ சில்வா, ஜெயசூர்யா போன்ற ஆல் ரவுண்டர்களின் அற்புதமான ஆட்டத்தால் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் மண்ணில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து முதல் முறையாக உலக கோப்பையை வென்ற இலங்கை 2007, 2011 தொடர்களில் ஃபைனல் வரை சென்று தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

இலங்கை அணி:
இருப்பினும் சங்ககாரா, ஜெயவர்த்தனே, மலிங்கா, முரளிதரன் போன்ற வீரர்களுடன் ஃபைனல் வரை மட்டுமே சென்ற அந்த அணி அவர்கள் ஓய்வு பெற்றதும் தரமான அடுத்த தலைமுறை வீரர்கள் இல்லாமல் 2015, 2019 தொடர்களில் நாக் அவுட் சுற்றை கூட தொடவில்லை. சொல்லப்போனால் இந்த உலக கோப்பைக்கு நேரடியாக தகுதி பெறாத அந்த அணி ஜிம்பாப்வே மண்ணில் நடைபெற்ற குவாலிஃபயர் தொடரில் வென்று போராடி தேர்வு பெற்றது.

ஆனால் கடந்த வருடம் இளம் வீரர்களின் சிறப்பான ஆட்டத்தால் ஆசிய கோப்பையை வென்ற அந்த அணி இம்முறை சொந்த மண்ணில் ஃபைனலில் இந்தியாவிடம் தோற்ற போது 1996 விட தற்போதைய இலங்கை அணி மிகவும் வலுவானதாகவும் திறமை வாய்ந்ததாகவும் இருப்பதாக அர்ஜுனா ரணதுங்கா பாராட்டியிருந்தார். அதைப்பற்றி அலசும் போது கேப்டன் சனாகா தரமான ஆல் ரவுண்டராக இலங்கை அணியை இத்தொடரில் தலைமை தாங்க தயாராக இருக்கிறார்.

- Advertisement -

அதே போல டாப் ஆர்டரில் நிசாங்கா, திமுத் கருணரத்னே, குசால் மெண்டிஸ் ஆகியோர் நல்ல சூழ்நிலைகள் கிடைக்கும் பட்சத்தில் அதிரடியாக ரன்களை குவிக்கும் திறமையை கொண்டுள்ளனர். அதை தொடர்ந்து மிடில் ஆர்டரில் சமரவிக்ரமா, குசால் பெரேரா, அசலங்கா, தனஞ்செயா டீ சில்வா ஆகியோர் தாங்கிப் பிடித்து நிதானத்துடன் விளையாடி ரன்களை குவிக்கும் அளவுக்கு தரத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை.

எடுத்துக்காட்டாக இந்த 3 மிடில் பேட்ஸ்மேன்கள் தான் 2023 ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக கடைசி பந்தில் வெற்றி பெறுவதற்கு முக்கிய பங்காற்றினர். மேலும் துஷன் ஹேமந்தா, டீ சில்வா ஆகியோர் தேவைப்படும் போது பந்து வீசும் திறமைகயும் கொண்டுள்ளனர். அதை விட 2023 ஆசிய கோப்பையில் இந்திய பேட்ஸ்மேன்களை திணறடித்த துணித் வெல்லாலகே கிட்டத்தட்ட அஜந்தா மெண்டிஸ் போல சுழலுக்கு சாதகமான மைதானங்களில் மேஜிக் நிகழ்த்தும் திறமையை கொண்டிருக்கும் நிலையில் ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் விளையாடி அசத்திய மஹீஸ் தீக்சனா சுழல் பந்து வீச்சை துறையை வலுப்படுத்துகிறார்.

- Advertisement -

ஆனால் இலங்கை அணியின் ஆணிவேராகவும் முதன்மை ஸ்பின்னராகவும் கருதப்படும் ஹஸரங்கா காயத்தால் இத்தொடரிலிருந்து வெளியேறியுள்ளார். அந்த சூழ்நிலையில் அவருடைய இடத்தை அந்த 2 ஸ்பின்னர்களால் நிரப்ப முடியுமா என்பது சந்தேகமாகும். அத்துடன் குட்டி மலிங்கா என்றழைக்கப்படும் பதிரனா, மதுசங்கா, லகிரு குமாரா, கௌசன் ரஜிதா ஆகியோரால் இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு துறை ஓரளவு நன்றாகவே இருக்கிறது.

இதையும் படிங்க: வீடியோ : கத்துக்கிட்ட மொத்த வித்தையை எறக்கியும்.. வினோதமாக அவுட்டான முஸ்பிக்கர் ரஹீம்.. இன்னும் பயிற்சி வேணுமோ

இருப்பினும் காட்டுத்தனமாக அடிக்கக்கூடிய எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு அவர்களால் தொடர் முழுவதும் சவால் கொடுக்க முடியுமா என்பது சந்தேகமாகும். மொத்தத்தில் துடிதுடிப்பாக சீறிப்பாயக்கூடிய இளம் வீரர்களை கொண்டுள்ள இலங்கை அணி முழுமூச்சுடன் முழு திறமையை வெளிப்படுத்தி லீக் சுற்றை கடந்து நாக் அவுட் சுற்றை தொட்டால் 2023 கோப்பை தொடுவதற்கும் கணிசமான வாய்ப்புகள் இருக்கிறது என்பதே க்ரிக்தமிழ் அலசலாகும்.

Advertisement