இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ஆகஸ்ட் 21ஆம் தேதி மான்செஸ்டர் நகரில் துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. ஆனால் அதைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை சுமாராக விளையாடி 236 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக கேப்டன் தனஞ்செயா டீ சில்வா 74, மிலன் ரத்நாயகே 72 ரன்கள் எடுத்தனர்.
இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக கிறிஸ் ஓக்ஸ், சோயப் பசீர் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர். அதைத்தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து கொஞ்சம் தடுமாற்றமாகவே விளையாடி 358 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜேமி சதமடித்து 111, ஹரி ப்ரூக் 56 ரன்கள் எடுத்த நிலையில் சார்பில் அதிகபட்சமாக அஷிதா பெர்னாண்டோ 4 விக்கெட்டுகளை எடுத்தார்.
தோல்விக்கான காரணம்:
அதன் பின் 122 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய இலங்கை 2வது இன்னிங்ஸில் முடிந்தளவுக்கு போராடியும் 322 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கமிண்டு மெண்டிஸ் சதமடித்து 113, தினேஷ் சந்திமல் 79 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக கிரிஸ் ஓக்ஸ், மேத்தியூ போட்ஸ் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர். இறுதியில் 205 ரன்களை துரத்திய இங்கிலாந்துக்கு ஜோ ரூட் 62*, ஜேமி ஸ்மித் 39, ஹரி ப்ரூக் 32, டான் லாரன்ஸ் 34 ரன்கள் அடித்து எளிதாக வெற்றி பெற வைத்தனர்.
அதனால் பென் ஸ்டோக்ஸ் இல்லாமலேயே வென்ற இங்கிலாந்து 1 – 0* (3) என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. மறுபுறம் இங்கிலாந்துக்கு முடிந்தளவுக்கு சவாலை கொடுத்தும் இலங்கை தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் 2வது இன்னிங்ஸ் போல முதல் இன்னிங்ஸிலும் விளையாடியிருந்தால் இங்கிலாந்தை வீழ்த்தியிருப்போம் என்று இலங்கை கேப்டன் தனஞ்செயா வருத்தம் தெரிவித்துள்ளார்.
முதல் இன்னிங்ஸ்:
இருப்பினும் தவறுகளை திருத்திக் கொண்டு தவறிய வெற்றியை 2வது போட்டியில் பெறுவோம் என்று நம்பிக்கை தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “முதல் இன்னிங்சை விட 2வது இன்னிங்ஸில் எங்களின் பேட்டிங், பவுலிங் நன்றாக இருந்தது. ஒட்டுமொத்தமாக நாங்கள் நன்றாக செயல்படவில்லை. நாங்கள் சரியான இடத்தில் பந்துகளை போடவில்லை. ஃபீல்டிங்கிலும் எங்களின் வாய்ப்புகளை எடுக்கவில்லை”
இதையும் படிங்க: எங்க டீமுக்கு வந்தா நீங்கதான் எங்க டீமோட கேப்டன்.. சூர்யகுமார் யாதாவிற்கு ஆபருடன் அழைப்பு விடுத்த – ஐ.பி.எல் அணி
“இருப்பினும் இங்கிலாந்து போன்ற கட்டுப்பாடான பவுலிங் வரிசைக்கு எதிராக இந்த சூழ்நிலைகளில் ரன்கள் அடிப்பதற்கான வழியை எங்களுடைய பேட்டிங் வரிசை கண்டறியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. கமிண்டு மெண்டிஸ் நன்றாக பேட்டிங் செய்தார். அவருக்கு மற்ற அனைவரும் ஆதரவு கொடுத்திருக்க வேண்டும். அடுத்த போட்டியில் எங்களின் திட்டங்களை தொடர்ந்து பின்பற்றி அதை சிறப்பாக செயல்படுத்துவோம்” என்று கூறினார்.



