அது அமைஞ்சா இது அமையல.. இது அமைஞ்சா அது அமையல.. ஹாட்ரிக் தோல்விக்கு பின் மெண்டிஸ் வருத்தம்

Kusal Mendis
- Advertisement -

இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 16ஆம் தேதி லக்னோ நகரில் நடைபெற்ற 14வது லீக் போட்டியில் இலங்கையை 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா தோற்கடித்தது. அப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி 43.3 ஓவரில் 209 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

சொல்லப்போனால் அந்த அணிக்கு அதிகபட்சமாக துவக்க வீரர்கள் நிசாங்கா 61, குஷால் பெரேரா 78 ரன்கள் எடுத்து 125 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்தனர். ஆனால் அவர்களைத் தவிர்த்து குசால் மெண்டிஸ், சமரவிக்ரமா, அசலங்கா போன்ற முக்கிய வீரர்களை குறைந்த ரன்களில் அவுட்டாக்கி ஆரம்பத்திலேயே வெற்றியை உறுதி செய்த ஆஸ்திரேலிய சார்பில் அதிகபட்சமாக ஆடம் ஜாம்பா 4 விக்கெட்டுகள் சாய்த்தார்.

- Advertisement -

சரியா அமையல:
அதை தொடர்ந்து 210 ரன்களை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு டேவிட் வார்னர் 11, ஸ்மித் 0 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். ஆனாலும் மிட்சேல் மார்ஷ் 52, மார்னஸ் லபுஸ்ஷேன் 40, ஜோஸ் இங்லிஷ் 58, கிளன் மேக்ஸ்வெல் 31*, ஸ்டோனிஸ் 20* ரன்கள் எடுத்து 35.2 ஓவரிலேயே எளிதாக வெற்றி பெற வைத்தனர். அதனால் அடுத்தடுத்த 2 தோல்விகளுக்கு பின் முதல் வெற்றியை பதிவு செய்த ஆஸ்திரேலியா புள்ளி பட்டியலில் கடைசி இடத்திலிருந்து 8வது இடத்திற்கு முன்னேறி அசத்தியது.

மறுபுறம் பேட்டிங்கில் சொதப்பிய இலங்கைக்கு அதிகபட்சமாக மதுசங்கா 3 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. குறிப்பாக சனாகா காயத்தால் வெளியேறிய நிலையில் புதிய கேப்டனாக குசால் மெண்டிஸ் தலைமை தாங்கிய போதிலும் 3 போட்டிகளில் 3வது தோல்வியை பதிவு செய்த இலங்கை புள்ளி பட்டியலில் கடைசி இடத்திற்கு சரிந்துள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் நல்ல துவக்கத்தை பெற்றும் பேட்டிங்கில் சொதப்பியதாக கேப்டன் குசால் மெண்டிஸ் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

மேலும் கடந்த 2 போட்டிகளில் பேட்டிங்கில் அசத்திய தங்களுக்கு பவுலிங் சிறப்பாக அமையவில்லை என்று தெரிவிக்கும் அவர் இன்று பவுலிங் நன்றாக இருந்தும் பேட்டிங் சரியாக அமையவில்லை என கூறியுள்ளார். அப்படி ஹாட்ரிக் தோல்வியை பதிவு செய்த பின் அவர் ஏமாற்றத்துடன் போட்டியின் முடிவில் பேசியது பின்வருமாறு. “நிசாங்கா, பெரேரா ஆகியோர் சிறப்பாக பேட்டிங் செய்தனர். ஆனால் அவர்களுக்கு பின் நாங்கள் குறைந்த ஸ்கோர் எடுத்தோம். 290 – 300 என்பது நல்ல இலக்காக இருந்திருக்கும்”

இதையும் படிங்க: சூப்பரா ஸ்டார்ட் பண்ண இலங்கை அணியை சுருட்டி வீச இதுவே காரணம் – வெற்றிக்கு பின்னர் பேட் கம்மின்ஸ் மகிழ்ச்சி

“நாங்கள் ஸ்ட்ரைக்கை சரியாக மாற்றவில்லை. கடந்த 2 போட்டிகளில் நாங்கள் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டோம். ஆனால் இன்று எங்களுடைய பேட்ஸ்மேன்கள் தடுமாறினார்கள். ஏனெனில் பந்து வீச்சில் மதுசங்கா ஆரம்பத்திலேயே 2 விக்கெட்டுகளை கொடுத்து சிறப்பாக பந்து வீசினார். இப்போதும் எங்களுடைய பேட்டிங் துறை மீது நம்பிக்கை இருக்கிறது. இருப்பினும் நாங்கள் ஃபீல்டிங்கில் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும்” என்று கூறினார்.

Advertisement