விளையாடிய மழை.. இலவசமாக 1 புள்ளி கிடைத்தும்.. 2014 டி20 சாம்பியன் இலங்கைக்கு ஏற்பட்ட பரிதாப நிலை

Srilanka Rain
- Advertisement -

விறுவிறுப்பான திருப்பங்களுடன் நடைபெற்று வரும் ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான போட்டி உச்சகட்டத்தை தொட்டுள்ளது. அதில் ஜூன் 12ஆம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 5 மணிக்கு அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் 23வது லீக் போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் குரூப் டி பிரிவில் இடம் வகிக்கும் இலங்கை மற்றும் நேபாள் கிரிக்கெட் அணிகள் மோதின.

இருப்பினும் ஆரம்பம் முதலே மழை பெய்ததால் அந்தப் போட்டி துவங்குவதற்கு தாமதம் ஏற்பட்டது. அப்படியே தொடர்ந்து வெளுத்து வாங்கிய மழை மைதானத்தை முழுவதும் தண்ணீரால் நிரப்பியது. அதனால் குறைந்தபட்சம் 5 ஓவர்கள் கொண்ட போட்டியை நடத்துவதற்காக நடுவர்கள் காத்திருந்தனர். ஆனால் அப்போதும் மழை பெய்யாததால் வேறு வழியின்றி அப்போட்டி ரத்து செய்யப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.

- Advertisement -

2014 சாம்பியனின் பரிதாபம்:
அதன் காரணமாக 2 அணிகளுக்கும் தலா 1 புள்ளி பகிர்ந்து கொடுக்கப்பட்டது. இதையும் சேர்த்து இதுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை 2 தோல்வி 1 ட்ராவை பதிவு செய்துள்ளது. குறிப்பாக தென்னாபிரிக்கா மற்றும் வங்கதேசம் அணிகளிடம் அந்த அணி பரிதாபமாக தோற்றது. அதனால் 3 போட்டிகளின் முடிவில் இலங்கை அணி மழையால் கிடைத்த 1 புள்ளியை மட்டுமே பெற்றுள்ளது.

அதன் காரணமாக குரூப் டி பிரிவில் தற்போது இலங்கை அணி 5வது இடத்தில் இருக்கிறது. அந்த பிரிவில் ஏற்கனவே தென்னாப்பிரிக்கா 6 புள்ளிகளுடன் முதல் அணியாக சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது. எனவே மீதமுள்ள 1 இடத்தை பிடிப்பதற்கு வங்கதேசம் நெதர்லாந்து, நேபாள் மற்றும் இலங்கை அணிகளுடன் போட்டி காணப்படுகிறது. அதில் 2 போட்டிகளில் விளையாடி 2 புள்ளிகளுடன் 2, 3வது இடத்தை பிடித்துள்ள வங்கதேசம் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு அந்த வாய்ப்பை பிடிக்க பிரகாசமாக உள்ளது.

- Advertisement -

மறுபுறம் 1 புள்ளியுடன் 4வது இடத்தில் உள்ள நேபாளை (-0.539) விட இலங்கையின் ரன் ரேட் (-0.777) குறைவாக உள்ளது. தற்போதைய நிலையில் இலங்கை சூப்பர் 8க்கு செல்ல தங்களுடைய கடைசி போட்டியில் நெதர்லாந்தை வீழ்த்த வேண்டும். ஆனாலும் மற்ற 4 அணிகளை விட ரன்ரேட் குறைவாக இருப்பதால் நெதர்லாந்தை வீழ்த்தினாலும் இலங்கை சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற 99% வாய்ப்பில்லை.

இதையும் படிங்க: 53 பந்துக்கு 53 ரன்கள் அடிச்சாலும் ரோஹித் சர்மாவின் சாதனையை சமன் செய்த முகமது ரிஸ்வான் – விவரம் இதோ

அதனால் 2014 டி20 உலகக் கோப்பையை வென்ற முன்னாள் சாம்பியனான இலங்கை இந்தத் தொடரிலிருந்து முதல் அணியாக வெளியேறுவது உறுதியாகியுள்ளது. ஒரு காலத்தில் எதிரணிகளை மிரட்டிய இலங்கை 2024 டி20 உலகக் கோப்பையில் மழையால் இலவமாக கிடைத்த ஒரே ஒரு புள்ளியை மட்டுமே பெற்று கடைசி இடத்தில் திண்டாடுகிறது. அதனால் இலங்கை ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

Advertisement