பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியானது தற்போது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. பலம் வாய்ந்த அணியாக பார்க்கப்படும் பாகிஸ்தான் அணி இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் முதல் போட்டியிலேயே அமெரிக்க அணிக்கு எதிராக தோல்வியை சந்தித்து மோசமான துவக்கத்தை கண்டனர்.
அதற்கு அடுத்து இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் 120 ரன்கள் என்கிற எளிய இலக்கினை துரத்த முடியாமல் தோல்வியை சந்தித்த பாகிஸ்தான அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற வேண்டுமெனில் அடுத்தடுத்து வரும் போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது.
அந்தவகையில் நேற்று நடைபெற்ற கனடா அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி மிகச்சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய கனடா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்களை மட்டுமே குவித்தது.
பின்னர் 107 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு பாகிஸ்தான் அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கினை எளிதாக எட்டிப்பிடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் 17.3 ஓவர்கள் வரை பொறுமையாக துரத்தி 3 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்கள் குறித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது விளையாடிய பாகிஸ்தான் அணியின் துவக்க வீரரான முகமது ரிஸ்வான் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் சாதனை ஒன்றினை சமன் செய்துள்ளது குறித்த விவரம் வெளியாகி உள்ளது. அந்த வகையில் டி20 கிரிக்கெட்டில் துவக்க வீரராக களமிறங்கி அதிக அரைசதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையில் ரோஹித் சர்மா முதலிடத்தில் இருந்தார்.
இதையும் படிங்க : அமெரிக்கா அணிக்கெதிரான போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச பட்டியல் இதோ
இதுவரை 118 சர்வதேச டி20 போட்டிகளில் துவக்க வீரராக களமிறங்கியுள்ள அவர் 30 அரைசதங்களை பதிவுசெய்து முதலிடத்தில் இருந்தார். இந்நிலையில் நேற்றைய போட்டியில் தனது 71 ஆவது இன்னிங்சில் விளையாடிய ரிஸ்வான் 53 பந்துகளை சந்தித்து 53 ரன்கள் குவித்து துவக்க வீரராக தனது 30-ஆவது அரைசதத்தை அடித்து இந்த சாதனையை சமன் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.



