ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மே 23ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு லக்னோவில் 65வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் ஏற்கனவே லீக் சுற்றுடன் வெளியேறிய ஹைதராபாத்துக்கு எதிராக டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு ஆரம்பத்திலேயே அடித்து நொறுக்கிய அபிஷேக் ஷர்மா 3 பவுண்டரி 3 சிக்ஸருடன் 34 (17) ரன்கள் விளாசி அவுட்டானார்.
அந்த சிக்ஸர்களில் ஒன்று மைதானத்தின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த டாட்டா ஸ்பான்சர்ஷிப் காரின் கண்ணாடிகளை உடைத்து நொறுக்கியது. அந்தளவுக்கு அதிரடியாக விளையாடிய அவருடன் சேர்ந்து மறுபுறம் அதிரடி காட்டிய டிராவிஸ் ஹெட் 53 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து 17 (10) ரன்கள் அடித்து அவுட்டானார். அடுத்து வந்த இஷான் கிசான் தம்முடைய பங்கிற்கு வெளுத்து வாங்கினார்.
ஹைதெராபாத் அசத்தல்:
அவருடன் சேர்ந்து விளையாடிய ஹென்றிச் க்ளாஸென் அதிரடியாக 24 (13) ரன்னில் அவுட்டானார். அதற்கடுத்ததாக வந்த அன்கிட் வர்மா சரவெடியாக 26 (9) ரன்கள் அடித்து பெரிய திருப்பு முனையை உண்டாக்கி சென்றார். மறுபுறம் தொடர்ந்து நங்கூரம் கலந்த அதிரடியை காட்டிய இசான் கிசான் அரை சதத்தை அடித்தார்.
நேரம் செல்ல செல்ல வெளுத்து வாங்கிய அவர் சதத்தை தொடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் 94* (48) ரன்கள் மட்டுமே எடுத்தார். இறுதியில் அபினவ் மனோகர் 12 (11), கேப்டன் கம்மின்ஸ் 13* (6) ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவரில் ஹைதராபாத் 231/6 ரன்களை குவித்தது. பெங்களூரு அணிக்கு அதிகபட்சமாக செபார்ட் 2 விக்கெட்டுகளை எடுத்தார்.
42 முறை 200:
இதையும் சேர்த்து இந்த வருடம் ஐபிஎல் தொடரில் மொத்தம் 42 முறை 200க்கும் மேற்பட்ட ரன்கள் அடிக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக வரலாற்றில் அதிக முறை 200+ ரன்கள் அடிக்கப்பட்ட தொடராக 2025 ஐபிஎல் சீசன் சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் கடந்த 2024 ஐபிஎல் தொடரில் 41 முறை 200+ ரன்கள் அடிக்கப்பட்டதே சாதனை.
இதையும் படிங்க: 358 ரன்ஸ்.. 16 பந்தில் 50.. ஏபிடி’யின் உலக சாதனையை சமன் செய்த போர்ட்.. அயர்லாந்தை நொறுக்கிய வெ.இ
அந்த வகையில் நடப்பு ஐபிஎல் தொடர் ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறது என்றே சொல்லலாம். இதைத் தொடர்ந்து 232 ரன்களை எடுத்து வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் முனைப்புடன் பெங்களூரு பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியை எப்படியாவது தோற்கடித்து ஆறுதல் வெற்றியை பெறும் முனைப்புடன் ஹைதராபாத் அணி பவுலிங் செய்கிறது.



