ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் ஆறாம் தேதி ஹைதராபாத் நகரில் 19வது போட்டி நடைபெற்றது. அதில் ஹைதராபாத் அணிக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஹைதராபாத்துக்கு ஆரம்பத்திலேயே அதிரடி மன்னன் டிராவிஸ் ஹெட்டை 8 (5) ரன்னில் காலி செய்த சிராஜ் மறுபுறம் தடுமாறிய அபிஷேக் சர்மாவையும் 18 (16) ரன்னில் அனுப்பி வைத்தார்.
அதனால் 38-2 என ஆரம்பத்திலேயே தடுமாறிய ஹைதராபாத் அணிக்கு நிதானமாக விளையாட முயற்சித்த இஷான் கிசான் 17 ரன்களில் அவுட்டானார். அதே போல மறுபுறம் தடுமாறிய நிதிஷ் ரெட்டியை 31 ரன்னில் காலி செய்த தமிழக வீரர் சாய் கிஷோர் அடுத்ததாக வந்த காட்டடி நாயகன் ஹென்றிச் க்ளாஸெனை 27 (19) ரன்னில் கிளீன் போல்ட்டாக்கி திருப்பு முனையை உண்டாக்கினார்.
சிராஜ் அபாரம்:
அதன் காரணமாக 105-5 என சரிந்த ஹைதராபாத் அணிக்கு அன்கிட் வர்மா 18, கமிண்டு மெண்டிஸ் 1 ரன்னில் விக்கெட்டை இழந்து மேலும் ஏமாற்றத்தைக் கொடுத்தனர். இறுதியில் கேப்டன் பட் கமின்ஸ் அதிரடியாக 22* (9) ரன்கள் எடுத்ததால் ஓரளவு தப்பியாக ஹைதராபாத் 20 ஓவரில் 152-8 ரன்களை எடுத்தது. குஜராத்துக்கு அதிகபட்சமாக முகமது சிராஜ் 4, சாய் கிசோர் 2, பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
குறிப்பாக முகமது சிராஜ் தனது சொந்த ஊரான ஹைதராபாத் மைதானத்தில் 4 ஓவரில் 17 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகள் எடுத்து டி20 கிரிக்கெட்டில் தனது சிறந்த பந்து வீச்சை பதிவு செய்தார். மேலும் கடந்த ஆஸ்திரேலியா தொடரில் தம்மை அடித்து நொறுக்கிய ஹெட்டுக்கு இப்போட்டியில் அவர் சரியான பதிலடி கொடுத்துள்ளார் மறுபுறம் ஹைதராபாத் அடித்து நொறுக்கக்கூடிய அணி என்ற பிம்பத்தை ரசிகர்களிடம் ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை விட மோசம்:
சென்னை சூப்பர் கிங்ஸ் பவர் பிளே ஓவர்களில் 50 ரன்கள் கூட தாண்டவில்லை என்று ரசிகர்கள் கிண்டலடிக்கின்றனர். ஆனால் 2025 ஐபிஎல் தொடரில் பவர்பிளே ஓவர்களில் அதிக விக்கெட்டுகளை இழந்த அணிகளின் பட்டியலில் ஹைதராபாத் தான் முதலிடத்தில் இருக்கிறது. இதுவரை ஹைதராபாத் 5 போட்டிகளில் பவர்பிளே ஓவர்களில் மட்டும் 12* விக்கெட்டுகளை இழந்து அதிரடியாக விளையாட முடியாமல் தடுமாறுகிறது.
இதையும் படிங்க: ஸ்ட்ரைக் ரேட்டை ஓவர்ரேட்ன்னு சொல்லி கீழே போய்ட்டேன்.. கம்பேக் கொடுக்க அவர் ஹெல்ப் பண்ணாரு.. ராகுல் பேட்டி
அதே பட்டியலில் மும்பை மற்றும் சென்னை அணிகள் தலா 8 விக்கெட்டுகளை இழந்து இரண்டாவது இடத்தில் உள்ளன. அப்படி இருந்தும் அதிக கோப்பைகளை வென்ற சென்னை அணியை எதிரணி ரசிகர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள். மொத்தத்தில் இம்முறை சென்னை அணிக்கு கொஞ்சமும் சலைக்காமல் ஹைதராபாத் விளையாடி வருகிறது என்பதே நிதர்சனமாகும்.



