ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் ஐந்தாம் தேதி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் 17வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் சென்னையை சேப்பாக்கம் மைதானத்தில் 15 வருடங்கள் கழித்து டெல்லி தோற்கடித்தது. அந்த வெற்றிக்கு துவக்க வீரராக களமிறங்கி 77 ரன்கள் அடித்த கேஎல் ராகுல் முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார்.
முன்னதாக 2018, 2019 காலகட்டங்களில் அதிரடியாக விளையாடிய ராகுல் 500, 600 ரன்கள் குவித்து அசத்தினார். அதனால் விராட் கோலி, ரோஹித் சர்மா, தோனி ஆகியோரையே முந்திய ராகுல் ஐபிஎல் வரலாற்றில் 17 கோடி சம்பளத்தைப் பெற்ற முதல் வீரர் என்ற சாதனைப் படைத்தார். அதே போல 3 வகையான இந்திய அணியிலும் அடுத்த கேப்டன் என்று வர்ணிக்கப்பட்ட ராகுல் கேரியர் உச்சத்தைத் தொட்டது.
ஓவர்ரேட்டட் கருத்து:
ஆனால் நாளடைவில் அந்த இடத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக பெரிய ரன்கள் குவிக்க விரும்பிய ராகுல் அதிரடியாக விளையாடவில்லை. 2021 டி20 உலகக் கோப்பையில் தடவலாக விளையாடிய அவர் இந்தியாவின் தோல்விக்குக் காரணமாக அமைந்தார். அதே அணுகு முறையில் ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டனாக மெதுவாக விளையாடிய அவர் தோல்விகளுக்கு காரணமாக அமைந்து உரிமையாளரிடம் பொதுவெளியில் திட்டு வாங்கினார்.
அது பற்றி கேட்டதற்கு “டி20 கிரிக்கெட்டில் ஸ்ட்ரைக் ரேட் என்பது ஓவர்ரேட்டட்” என்று ராகுல் சொன்னது ரசிகர்களால் கடுமையாக கிண்டலடிக்கப்பட்டது. மேலும் இந்திய டி20 மற்றும் லக்னோ அணிகளில் கழற்றி விடப்பட்ட ராகுல் பெரிய பின்னடைவை சந்தித்தார். அதனால் மீண்டும் தற்போது அதிரடியாக விளையாடும் அணுகுமுறையை கையில் எடுத்துள்ள அவர் இந்திய அணியிலும் இழந்த இடங்களை மீட்க போராடி வருகிறார்.
உழைத்து முன்னேற்றம்:
இந்நிலையில் ஸ்ட்ரைக் ரேட் ஓவர்ரேட்டட் என்று சொல்லி கீழே விழுந்த தமது ஆட்டத்தை இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் உதவியுடன் மீட்டெடுத்ததாக ராகுல் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “எனது கேரியரில் ஏதோ ஒரு சமயத்தில் பௌண்டரி மற்றும் சிக்சர்கள் அடிப்பதில் இருக்கும் ஆர்வத்தை நான் இழந்தேன்”
இதையும் படிங்க: ஒன்னுல்ல.. இரண்டில்ல.. 4 தமிழக வீரர்களுக்கு இடம்.. திறமைக்கு மரியாதை கொடுத்த குஜராத் டைட்டன்ஸ் – விவரம் இதோ
“மாறாக மெதுவாக விளையாடி போட்டியை மிகவும் ஆழமாக எடுத்துச் செல்ல வேண்டும் என்பது எனது தலையில் நின்று கொண்டது. எனவே வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் அதை மாற்றுவதற்காக கடந்த சில வருடங்களாக கடினமாக உழைத்தேன். அதற்காக அபிஷேக் ஷர்மாவுக்கு பாராட்டு கொடுக்க வேண்டும். எனது ஆட்டத்தில் முன்னேற வேண்டும் என்பதற்காக அவருடன் நான் மணிக்கணக்கான நேரத்தில் செலவிட்டேன்” எனக் கூறினார்.



