IPL 2023 : அந்த இந்திய வீரரை சரியா யூஸ் பண்ணாத உங்களுக்கு வெற்றி எப்டி கிடைக்கும் – ஹைதராபாத்தை விளாசிய இர்பான் பதான்

Irfan-pathan
- Advertisement -

மிகுந்த போட்டியுடன் நடைபெற்று வரும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் 2016க்குப்பின் 2வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் இதுவரை களமிறங்கிய 11 போட்டிகளில் 4 வெற்றிகளையும் 7 தோல்விகளையும் பதிவு செய்து புள்ளி பட்டியலில் 9வது இடத்தில் திண்டாடுகிறது. தற்போதைய நிலைமையில் எஞ்சிய 3 போட்டிகளில் வென்றால் கூட அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கு 90% வாய்ப்பில்லை என்றே சொல்லலாம். முன்னதாக தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வந்தும் 2021 சீசனில் முதல் முறையாக தடுமாறினார் என்பதற்காக டேவிட் வார்னரை கழற்றி விட்ட அந்த அணி நிர்வாகம் கடந்த சீசனில் கேன் வில்லியம்சனை கேப்டனாக நியமித்தும் எந்த பலனையும் பார்க்கவில்லை.

அதனால் அவரையும் கழற்றி விட்ட ஹைதராபாத் நிர்வாகம் கடந்த ஜனவரியில் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற டி20 தொடரில் தங்களது ஈஸ்டர்ன் கேப் அணிக்காக கோப்பையை வென்று கொடுத்த ஐடன் மார்க்ரமை புதிய கேப்டனாக அறிவித்தது. ஆனால் அவரது தலைமையில் 13 கோடிக்கு வாங்கப்பட்ட இங்கிலாந்தின் ஹரி ப்ரூக், மயங் அகர்வால், ராகுல் திரிபாதி போன்றவர்கள் பேட்டிங் துறையில் சுமாராக செயல்பட்டு தோல்விக்கு காரணமாக அமைந்தனர். அதே போல பந்து வீச்சு துறையில் வாஷிங்டன் சுந்தர் பாதியிலேயே காயத்தால் வெளியேறிய நிலையில் நடராஜன், புவனேஸ்வர் குமார் ஓரளவு அசத்தினர்.

- Advertisement -

இர்பான் பதான் காட்டம்:
இருப்பினும் எக்ஸ்பிரஸ் பவுலரான உம்ரான் மாலிக் வழக்கம் போல சற்று ரன்களை வாரி வழங்கினார். ஜம்மு காஷ்மீரை சேர்ந்த அவர் 2021இல் அறிமுகமாகி கடந்த சீசனில் தொடர்ந்து 145 – 150 கி.மீ வேகத்தில் பந்து வீசி எதிரணி பேட்ஸ்மேன் ஸ்டம்ப்புகளை தெறிக்க விட்டு 22 விக்கெட்களை எடுத்து சிறப்பாகவே செயல்பட்டார். அதனால் பல முன்னாள் வீரர்களின் பாராட்டுக்களுடன் இந்தியாவுக்காகவும் அறிமுகமான அவர் வேகத்தை மட்டுமே நம்பி ரன்களை வாரி வழங்கியதால் 2 போட்டிகளுடன் கழற்றி விடப்பட்டார்.

ஆனால் உள்ளூர் கிரிக்கெட்டுக்கு சென்று நல்ல லைன், லென்த் போன்றவற்றைக் கற்று தேர்ந்த அவர் சமீபத்திய இலங்கை, நியூசிலாந்து டி20 தொடர்களில் விவேகமாக பந்து வீசி குறைந்த ரன்களை கொடுத்து நிறைய விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். குறிப்பாக ஒருநாள் மற்றும் டி20 வரலாற்றில் அதிவேக பந்தை வீசிய இந்திய வீரராக சாதனை படைத்த அவர் தொடர்ச்சியான வாய்ப்புகளும் பயிற்சியும் கிடைத்தால் பெரிய அளவில் சாதிக்க முடியும் என்று நிரூபித்தார்.

- Advertisement -

அதனால் சொல்லிக் கொடுத்தால் கூட கற்றுக் கொடுக்க முடியாத எக்ஸ்பிரஸ் வேகத்தை இயற்கையாகவே கொண்டுள்ள அவருக்கு சரியான பயிற்சியும் ஆதரவும் கொடுத்தால் வெற்றிகளை வரிசையாக பெற்றுக் கொடுப்பார் என்று அஜய் ஜடேஜா போன்ற முன்னாள் வீரர்கள் கேட்டுக்கொண்டனர். அந்த நிலையில் இந்த சீசனில் 7 போட்டிகளில் மட்டுமே அவருக்கு வாய்ப்பு கொடுத்த ஹைதராபாத் நிர்வாகம் 5 விக்கெட்களை எடுத்து 10.35 என்ற எக்கனாமியில் ரன்களை கொடுத்ததால் மொத்தமாக கழற்றி விட்டது.

இத்தனைக்கும் வேகத்துக்கு பெயர் போன தென்னாபிரிக்க முன்னாள் ஜாம்பவான் வீரர் டேல் ஸ்டைன் ஹைதராபாத் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக இருக்கிறார். அந்த நிலைமையில் ஹைதராபாத் நிர்வாகம் நினைத்திருந்தால் அவரை வைத்து உம்ரான் மாலிக்கிற்கு தேவையான பயிற்சிகளை கொடுத்து சரியான பாதையில் நடக்க வைத்திருக்கலாம்.

இதையும் படிங்க:வீடியோ : தல தோனி பெயருடன் மேஜிக் விக்கெட் கீப்பிங் ஃபினிஷிங் செய்த இளம் ஆர்சிபி வீரர் – ரசிகர்கள் பாராட்டு

ஆனால் அதை செய்யாத ஹைதராபாத் நிர்வாகம் இந்த ஐபிஎல் தொடரின் அதிவேக பவுலரை சரியாக பயன்படுத்த தவறியதாலேயே வெற்றிகளையும் பதிவு செய்ய தவறியுள்ளதாக முன்னாள் இந்திய வீரர் இர்ஃபான் பதான் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி தனது ட்விட்டரில் அவர் கூறியுள்ளது பின்வருமாறு. “இந்த தொடரின் அதிவேகமான பவுலர் பெஞ்சில் அமர்ந்திருப்பதை பார்ப்பது எனக்கு குழப்பத்தை கொடுக்கிறது. உம்ரான் மாலிக்கை அவருடைய அணி நிர்வாகம் சரியாக கையாளவில்லை” என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement