ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மே ஐந்தாம் தேதி ஹைதராபாத் நகரில் 55வது போற்றி நடைபெற்றது. அந்தப் போட்டியில் ஹைதெராபாத் வென்றால் மட்டுமே பிளே ஆஃப் செல்ல முடியும் என்ற சூழ்நிலையில் களமிறங்கியது. அந்த சூழ்நிலையில் டாஸ் வென்ற ஹைதெராபாத் முதலில் டெல்லிக்கு எதிராக பவுலிங் செய்வதாக அறிவித்தது.
அதைத்தொடர்ந்து களமிறங்கிய டெல்லிக்கு கருண் நாயர் 0, டு பிளேஸிஸ் 3, அபிஷேக் போரல் 8 ரன்களில் பட் கமின்ஸ் வேகத்தில் அவுட்டாகி ஆரம்பத்திலேயே ஏமாற்றத்தைக் கொடுத்தனர். போதாகுறைக்கு அடுத்ததாக வந்த கேஎல் ராகுல் 10, கேப்டன் அக்சர் பட்டேல் 6 ரன்களில் அவுட்டானார்கள். அதனால் 29/5 என ஆரம்பத்திலேயே தடுமாறிய டெல்லி 100 ரன்கள் தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஸ்டப்ஸ் சாதனை:
இருப்பினும் அப்போது ட்ரிஷ்டன் ஸ்டப்ஸ் – விப்ராஜ் ஆகியோர் ஜோடி சேர்ந்து நங்கூரமாக விளையாட முயற்சித்தனர். அதில் நிகாம் 18 (17) ரன்னில் ரன் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். ஆனால் அடுத்ததாக இம்பேக்ட் வீரராக வந்த அசுடோஸ் சர்மா அதிரடியாக 2 பவுண்டரி 3 சிக்சரை அடித்து 41 (26) ரன்கள் குவித்து ஓரளவு கை கொடுத்தார்.
அவருடன் சேர்ந்து விளையாடிய ஸ்டப்ஸ் 41* (36) ரன்கள் அடித்து அசத்தினார். அதனால் தப்பிய டெல்லி 20 ஓவரில் 133/6 ரன்கள் எடுத்த போது ஜோராக மழை வந்தது. ஹைதராபாத்துக்கு அதிகபட்சமாக கேப்டன் பட் கமின்ஸ் 3 விக்கெட்டுகளை எடுத்தார். இதையும் சேர்த்து கடந்த 2024 முதல் டெத் ஓவர்களில் ஸ்டப்ஸ் 382* ரன்களை எடுத்துள்ளார்.
மழையால் நாக் அவுட்:
அதன் வாயிலாக ஐபிஎல் தொடரில் 2024க்குப்பின் 16 – 20 வரையிலான டெத் ஓவர்களில் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் சாதனை பட்டியலில் தோனி, டிம் டேவிட் ஆகியோரை முந்தியுள்ள அவர் முதலிடம் பிடித்துள்ளார். அந்தப் பட்டியல் (ரன்கள் – ஸ்ட்ரைக் ரேட்):
1. ட்ரிஷ்டன் ஸ்டப்ஸ்: 382 (240.25)
2. டிம் டேவிட்: 340 (188.88)
3. எம்எஸ் தோனி: 309 (188.41)
4. ஹென்றிச் க்ளாஸென்: 293 (212.31)
4. சசாங் சிங்: 281 (193.79)
இதையும் படிங்க: ஃபிட்னெஸ் இல்லையா? ரோஹித்தை இம்பேக்ட் பிளேயராக மட்டும் அவமானப்படுத்துவது ஏன்? ஜெயவர்தனே விளக்கம்
தொடர்ந்து பெய்த மழை இரவு 11.10 மணி வரை போட்டியை 5 ஓவர்களாகக் கூட நடத்த விடாமல் அடம் பிடித்தது. அதனால் அப்போட்டி ரத்து செய்யப்பட்டதாக அறிவித்த நடுவர்கள் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளியை வழங்கினர். அதையும் சேர்த்து கடந்த வருடம் ஃபைனல் சென்ற ஹைதராபாத் இம்முறை 11 போட்டிகளில் 3 வெற்றி 7 தோல்வி 7 புள்ளிகளை மட்டுமே பெற்று லீக் சுற்றுடன் வீட்டுக்கு கிளம்பியது. மறுபுறம் மழையால் தோல்வியிலிருந்து தப்பிய டெல்லி 13 புள்ளிகளுடன் பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது.



