ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மே 23ஆம் தேதி லக்னோவில் 65வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஹைதராபாத் 20 ஓவரில் அபாரமாக விளையாடி 231/6 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 34, இசான் கிசான் 94*, க்ளாஸென் 24, அன்கிட் வர்மா 26 ரன்கள் எடுத்தார்கள்.
பெங்களூருவுக்கு அதிகபட்சமாக ரொமாரியா செபார்டு 2 விக்கெட்டுகள் எடுத்தார். அடுத்து விளையாடிய பெங்களூரு அணிக்கு விராட் கோலி – பில் சால்ட் ஆகியோர் ஆரம்பத்திலேயே அடித்து நொறுக்கினார்கள். 7 ஓவரில் 80 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து அற்புதமான துவக்கத்தை கொடுத்த அந்த ஜோடியில் விராட் கோலி 43 (25) ரன்னில் அவுட்டானார்.
பெங்களூரு சொதப்பல்:
அடுத்து வந்த மயங் அகர்வால் தடுமாற்றமாக விளையாடி 11 (10) ரன்னில் விக்கெட்டை இழந்தார். மறுபுறம் தொடர்ந்து வெளுத்து வாங்கிய பில் சால்ட் அரை சதத்தை அடித்து 62 (32) ரன்களில் அவுட்டானார். அதற்கடுத்ததாக வந்த கேப்டன் ஜிதேஷ் சர்மா 24 (15) ரன்கள் விளாசியதால் 15.4 ஓவரில் 173/3 என்ற வலுவான நிலையில் இருந்த பெங்களூரு எளிதாக வெல்லும் என்று நம்பப்பட்டது.
ஆனால் அப்போது மறுபுறம் தடுமாறிய ரஜத் படிதார் 18 (16) ரன்னில் அவுட்டாக அடுத்து வந்த ஃசெபார்ட் கோல்டன் டக் அவுட்டானார். அடுத்த ஓவரில் ஜிதேஷ் சர்மாவும் அவுட்டான நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட க்ருனால் பாண்டியா 8 ரன்னில் ஹிட் விக்கெட் முறையில் பெவிலியன் திரும்பினார். அதே போல டிம் டேவிட் 1 (5) ரன்னில் அவுட்டாகி ஃபினிஷிங் செய்ய தவறினார்.
தவறிய தங்க வாத்து:
இறுதியில் 19.5 ஓவரில் 189 ரன்களுக்கு பெங்களூருவை ஆல் அவுட் செய்த ஹைதராபாத் 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையும் சேர்த்து 5வது ஆறுதல் வெற்றியை பெற்ற ஹைதெராபாத் இத்தொடரை வெற்றிகரமாக நிறைவு செய்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் பட் கமின்ஸ் 3, எஷன் மலிங்கா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
மறுபுறம் நல்ல துவக்கத்தை பெற்றும் பேட்டிங்கில் சொதப்பிய பெங்களூரு தங்களுடைய 4வது தோல்வியை சந்தித்தது. அத்துடன் இந்த வருடம் சொந்த மண்ணுக்கு வெளியே முதல் முறையாக பெங்களூரு தோற்றுள்ளது. இதனால் புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களைப் பிடித்து குவாலிஃபயர் 1 போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்பை பெங்களூரு அணி கிட்டத்தட்ட தவற விட்டுள்ளது.
இதையும் படிங்க: இனிமேல் இந்தியாவுக்கு தோனி, கோலி, ரோஹித் மாதிரி ஃபுல் டைம் கேப்டன்கள் கிடைக்க மாட்டாங்க.. கம்பீர் பேட்டி
குவாலிபயர் 1 என்பது வென்றால் நேரடியாக ஃபைனல், தோற்றால் மீண்டும் குவாலிபயர் 2 போட்டியில் விளையாடும் வாய்ப்பைக் கொடுக்கும் தங்க வாத்தை போன்ற போட்டியாகும். இனியும் அதை பெங்களூரு பிடிக்க வேண்டுமெனில் குஜராத், பஞ்சாப் அதனுடைய கடைசி போட்டிகளில் தோற்க வேண்டும். மற்றும் பெங்களூரு தங்களது கடைசிப் போட்டியில் லக்னோவை சாய்க்க வேண்டும்.



