SRH vs PBKS : தனி ஒருவனாக சிம்ம சொப்பனமாக போராடிய கேப்டன் ஷிகர் தவான் – ஹைதராபாத் முதல் வெற்றியை பெற்றது எப்படி

SRH vs PBKS
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 9ஆம் தேதியன்று இரவு 7.30 மணிக்கு ஹைதராபாத் நகரில் நடைபெற்ற 14வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. அதில் தனது முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்ததால் நிச்சயம் வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய ஹைதராபாத் டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப்புக்கு புவனேஸ்வர் குமார் வீசிய முதல் பந்திலேயே பிரப்சிம்ரன் சிங் கோல்டன் டக் அவுட்டாகி ஏமாற்றிய நிலையில் அடுத்த ஓவரில் மேத்தியூ ஷார்ட் 1 (3) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

அதற்கடுத்த சில ஓவர்களில் அடுத்து வந்த ஜிதேஷ் சர்மா நிதானமாக விளையாட முயன்று 4 (9) ரன்களில் அவுட்டானதால் 22/3 என தடுமாறிய பஞ்சாப்பை கேப்டன் ஷிகர் தவான் நிதானமாக விளையாடி காப்பாற்ற போராடினார். அவருக்கு கை கொடுக்க முயன்ற ஷாம் கரன் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 22 (15) ரன்களில் அவுட்டாக அடுத்த ஓவரிலேயே அடுத்து வந்த நம்பிக்கை நட்சத்திரம் சிக்கந்தர் ராசாவும் 5 (6) ரன்களில் நடையை காட்டினார். ஆனாலும் மறுபுறம் பொறுப்புடன் செயல்பட்ட சிகர் தவான் அரை சதமடித்து போராடிய போதிலும் எதிர்ப்புறம் தமிழக வீரர் சாருக்கான் 4 (3) ராகுல் சஹர் 0 என லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஹைதராபாத்தின் தரமான பந்து வீச்சில் சொற்ப ரன்களில் நடையை கட்டினர்.

- Advertisement -

தனி ஒருவன் தவான்:
அதனால் 15 ஓவரில் 88/9 என திணறிய பஞ்சாப் 100 ரன்கள் தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்ட போதும் 11வது வீரராக களமிறங்கிய டெயில் எண்டர் மோஹித் ராதேவுடன் கை கோர்த்த ஷிகர் தவான் கடைசி விக்கெட்டை விடாமல் சிங்கிள் மாற்றி மாற்றி ரன்கள் குவிக்க போராடினார். குறிப்பாக அவரை வெறும் 2 (1* ரன்) பந்துகள் மட்டுமே எதிர்கொள்ள விட்ட தவான் எஞ்சிய பந்துகளை தாமே பொறுப்புடன் எதிர்கொண்டு போராடி சதத்தை நெருங்கி நடராஜன் வீசிய கடைசி ஓவரின் கடைசி பந்தில் சிக்சர் அடித்தும் 12 பவுண்டரி 5 சிக்ஸருடன் 99* (66) ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

அப்படி சதத்தை நெருங்க முடியாமல் போனாலும் தனி ஒருவனாக போராடி 20 ஓவரில் பஞ்சாப் 143/9 ரன்கள் எடுக்க உதவிய அவரை ரசிகர்கள் மனதார பாராட்டிய நிலையில் அசத்தலாக பந்து வீசிய ஹைதராபாத் சார்பில் அதிகபட்சமாக மயங் மார்க்கண்டே 4 விக்கெட்டுகளும் உம்ரான் மாலிக் மற்றும் மார்கோ யான்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர். அதை தொடர்ந்து 144 ரன்களை துரத்திய ஹைதராபாத்துக்கு இத்தொடரில் தடுமாறி வரும் இளம் இங்கிலாந்து வீரர் ஹரி ப்ரூக் ஆரம்பத்திலேயே 13 (14) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய நிலையில் மற்றொரு தொடக்க வீரர் மயங் அகர்வாலும் தடுமாறி 21 (20) ரன்களில் நடையை கட்டினார்.

- Advertisement -

இருப்பினும் அடுத்ததாக ஜோடி சேர்ந்த ராகுல் திரிபாதி மற்றும் கேப்டன் ஐடன் மார்க்கம் ஆகியோர் நிதான பேட்டிங்கை வெளிப்படுத்தி சரிவை சரி செய்து வெற்றி பாதைக்கு அழைத்து வந்தனர். அதில் சற்று அதிரடியாக விளையாடிய ராகுல் திரிபாதி அரைசதம் அடித்து வெற்றியை உறுதி செய்தார். இவர்களை பிரிக்க பஞ்சாப் போட்டு அனைத்து திட்டங்களையும் தவிடு பொடியாக்கிய இந்த ஜோடி கடைசி வரை அவுட்டாகாமல் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 17.1 ஓவரிலேயே 145/2 எடுக்க வைத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தது.

அதில் திரிபாதி 10 பவுண்டரி 3 சிக்சருடன் 74* (48) ரன்கள் எடுக்க கேப்டன் மார்க்ரம் 6 பவுண்டரியுடன் 37* (21) ரன்கள் எடுத்தார். அதனால் 2 தோல்விகளுக்கு பின் முதல் வெற்றியை பதிவு செய்து ஹைதராபாத் நிம்மதியடைந்துள்ளது. மறுபுறம் பேட்டிங்கில் தவான் தவிர்த்து யாருமே போராடாத காரணத்தால் 150 ரன்களை கூட எடுக்காத பஞ்சாப் பந்து வீச்சில் போராடியும் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் வாய்ப்பை நழுவ விட்டது.

இதையும் படிங்க: IPL 2023 : 21 வயசுலயே இப்படி ஒரு ஆட்டமா? போட்டிக்கு போட்டி கலக்கும் தமிழக வீரர் – ரசிகர்கள் பாராட்டு

இருப்பினும் எஞ்சிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் சேர்ந்து 38 ரன்கள் எடுத்த நிலையில் தனி ஒருவனாக 99* ரன்கள் குவித்து மோசமான தோல்வியிலிருந்து காப்பாற்றிய தவான் ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று வருகிறார்.

Advertisement