வீணடிக்கப்பட்ட திறமைக்கு எடுத்துக்காட்டாய் ஓய்வு பெற்ற இந்திய வீரர் – ஓய்விற்கான காரணம் இதுதான்

Sreesanth
- Advertisement -

உள்ளூர் உட்பட அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக கேரளாவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் அறிவித்துள்ளார். கேரளாவை சேர்ந்த இவர் தவறான வழியில் சென்றால் ஒரு மகத்தான திறமை எப்படி வீணடிக்கப்படும் என்பதற்கான ஒரு எடுத்துக்காட்டாக மாறியுள்ளார் என்றே கூற வேண்டும். சொல்லப்போனால் இன்று ஒரு ஜாம்பவனாக அவர் ஓய்வு பெற்றிருக்க வேண்டும். ஆனால் துரதிஷ்டவசமாக ஒரு வில்லனாக விடை பெற்றுள்ளார் என்பதே நிதர்சனமாகும்.

Sreesanth 1

- Advertisement -

உள்ளூர் கிரிக்கெட்டில் கேரள அணிக்காக பட்டையை கிளப்பும் பந்துவீச்சை வெளிப்படுத்திய இவர் கடந்த 2005ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இலங்கைக்கு எதிராக நடந்த ஒருநாள் தொடரில் முதல் முறையாக இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்றார். காலடி பதித்த ஆரம்பகாலங்களில் தனது ஆக்ரோஷம் நிறைந்த அதிரடியான வேகப்பந்து வீச்சால் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலை கொடுக்கும் ஒரு பந்து வீச்சாளராக உருவெடுத்தார்.

ஆக்ரோஷமான ஸ்ரீசாந்த்:
நாளடைவில் தனது அபார திறமையால் ஜாஹீர் கான், அஜித் அகர்கர் போன்ற நட்சத்திரங்களுடன் இந்திய ஒருநாள் அணியில் முக்கிய வீரராக மாறினார். அதன் காரணமாக கடந்த 2006ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக முதல் முறையாக இந்திய டெஸ்ட் அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்றார். வரலாற்றிலேயே முதல் முறையாக 20 ஓவர் கிரிக்கெட் உருவான அந்த தருணத்தில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அசத்திய அவருக்கு இந்திய டி20 அணியிலும் விளையாடும் வாய்ப்பும் கிடைத்தது.

அதாவது இந்தியாவுக்காக காலடி வைத்த ஒரு வருடத்திற்குள்ளேயே 3 விதமான கிரிக்கெட்டிலும் விளையாடும் வாய்ப்பைப் பெற்றார் என்றால் எந்த அளவுக்கு சிறப்பாக செயல்பட்டிருப்பார் என யோசித்து பாருங்கள். அந்தத் தருணத்தில் தென்ஆப்பிரிக்காவில் நடந்த வரலாற்றின் முதல் டி20 உலக கோப்பையில் எம்எஸ் தோனி தலைமையிலான இந்தியா பங்கேற்றது. அந்த அணியில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வளித்து இளம் வீரர்களை தேர்வு செய்த காரணத்தால் அந்த உலகக் கோப்பையில் அபாரமாக செயல்பட்ட ஸ்ரீசாந்த் இந்தியாவின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

ஜாம்பவானாக வேண்டியவர்:
குறிப்பாக நாக்-அவுட் சுற்றில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் அந்த அணியின் ஜாம்பவான்கள் மேத்யூ ஹைடன் மற்றும் ஆடம் கில்கிறிஸ்ட் ஆகியோரை க்ளீன் போல்ட்டாக்கிய பின் அந்த விக்கெட்டை ஆக்ரோசமாக தரையில் அடித்து அவர் கொண்டாடிய தருணத்தை இப்போது நினைத்து பார்த்தாலும் புல்லரிக்கும். அப்படி அரையிறுதிப் போட்டியில் முக்கிய பங்காற்றிய அவர் பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த மாபெரும் இறுதி போட்டியில் மிஸ்பா-உல்-ஹக் அடித்த கொடுத்த அந்த கேட்ச்சை தவற விடாமல் பிடித்ததன் காரணமாகவே இந்தியா டி20 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது. அந்த தருணத்தில் “இன் தி ஏர், ஸ்ரீசாந்த் டேக்ஸ் இட், இந்தியா வின்ஸ்” என தொலைக்காட்சியில் ரவி சாஸ்திரி வர்ணனையில் செய்ததெல்லாம் இன்னும் எத்தனை காலங்கள் கடந்தாலும் அப்படியே நிற்கும்.

அதன்பின் கடந்த 2007ஆம் ஆண்டு மீண்டும் அதே தென்னாப்பிரிக்காவில் ஜொஹனஸ்பர்க் நகரில் துவங்கிய அந்த அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் அதிரடியாக பந்துவீசி 8 விக்கெட்டுகளை எடுத்து ஆட்டநாயகன் விருதை வென்றார். அதன் காரணமாக 123 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ராகுல் டிராவிட் தலைமையிலான இந்தியா வரலாற்றிலேயே முதல் முறையாக தென்னாப்பிரிக்க மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரை வென்று சரித்திரம் படைத்தது. இப்படி டெஸ்ட், டி20 என எந்த வகை போட்டியாக இருந்தாலும் அதில் கிடைத்த வாய்ப்பில் பட்டையை கிளப்பிய அவர் ஐபிஎல் தொடர் துவங்கியபோது சக வீரர் ஹர்பஜன் சிங்கிடம் அறை வாங்கி அழுத சர்ச்சை பற்றி பேசினால் இந்த பதிவு போதாது.

- Advertisement -

வில்லனான ஸ்ரீசாந்த்:
அப்படி சர்ச்சைகளில் சிக்கினாலும் கூட 2010ஆம் ஆண்டு வாக்கில் நல்ல பந்து வீச்சாளராக உருவெடுத்த அவர் 2011ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் முதலில் இடம் பிடிக்கவில்லை. உலகக்கோப்பைக்காக அறிவிக்கப்பட்ட அந்த அணியில் பிரவீன்குமார் காயமடைந்ததன் காரணமாக ஸ்ரீசாந்த் சேர்க்கப்பட்டார். அப்படிப்பட்ட அதிர்ஷ்டமாக கிடைத்த அந்த வாய்ப்பில் களமிறங்கிய அவர் 28 ஆண்டுகள் கழித்து இந்தியா ஒரு உலக கோப்பையை முத்தமிட்டு சாதனை படைத்த தருணத்திலும் இடம் பிடித்திருந்தார்.

Sreesanth

ராகுல் டிராவிட், பிரைன் லாரா போன்ற எத்தனையோ ஜாம்பவான்கள் ஒரு உலக கோப்பையை வாங்க முடியாமல் நிறைவேறாத ஆசையுடன் விடை பெற்றார்கள். ஆனால் இளம் வயதிலேயே டி20 மற்றும் 50 ஓவர் உலகக் கோப்பைகளை வென்ற ஸ்ரீசாந்த் 3 வகையான கிரிக்கெட்டிலும் அசத்திய காரணத்தால் ஒரு ஜாம்பவானாக உருவெடுப்பார் என பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் அந்த நேரத்தில்தான் அவர் தனது கிரிக்கெட் வாழ்க்கையையே வீணடித்து கொள்ளும் செயலில் ஈடுபட்டார்.

- Advertisement -

2013ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய அவர் பணத்திற்காக ஆசைப்பட்டு சூதாட்டத்தில் சிக்கிய 3 வீரர்களில் ஒருவராக கைதாகி சிறை செல்லும் நிலை ஏற்பட்டது. இதனால் புகழின் உச்சியில் இருந்த அவருக்கு பிசிசிஐ வாழ்நாள் தடை விதித்தது. அப்படியே கெட்ட பெயருடன் காலங்கள் உருண்டோட வெளிநாடுகளில் அதைவிடப் பெரிய தவறைச் செய்த வீரர்களுக்கு மன்னித்து மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதை காரணம் காட்டி அவரின் வாழ்நாள் தடையை குறைத்துக் கொள்ள வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்தார்கள். இருப்பினும் அதை பிசிசிஐ காது கொடுத்து கேட்காததால் நீதிமன்றத்தை நாடிய ஸ்ரீசாந்த் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றார்.

மீண்டு வந்த ஸ்ரீசாந்த்:
கடந்த 2019ஆம் ஆண்டு கிடைத்த அந்த வெற்றியில் அவரின் வாழ்நாள் தடை 9 வருடங்களாக குறைக்கப்பட்டது. ஆனால் அதற்குள் அவருக்கு 37 வயது ஆகிவிட்ட காரணத்தால் இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடும் வாய்ப்பு முற்றிலுமாக பறிபோனது. இருப்பினும் கூட மனம் தளராத அவர் கேரளா அணிக்காக உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி 2022 டி20 உலகக்கோப்பை, 2023 உலக கோப்பை போன்ற தொடர்களில் இந்திய அணிக்காக விளையாடுவேன் எனக் கூறியிருந்தார்.

மேலும் இதுவரை 27 டெஸ்ட் போட்டிகளில் 87 விக்கெட்டுகளை எடுத்துள்ள அவர் எப்படியாவது இந்தியாவுக்காக மீண்டும் விளையாடி 100 விக்கெட்டுகளை எடுக்க வேண்டும் என்ற தனது ஆசையை சமீபத்தில் தெரிவித்திருந்தார். அதற்காக ரஞ்சி கோப்பை போன்ற உள்ளூர் போட்டிகளில் கூட விளையாடிய அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கடும் காயமடைந்து மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யுமளவுக்கு இக்கட்டான நிலைமைக்கு தள்ளப்பட்டார். அதன் காரணமாகவே தற்போது அடுத்த தலைமுறை வீரர்களுக்கு வழி விடும் வண்ணம் ரஞ்சி கோப்பை உள்ளிட்ட இந்தியாவில் நடைபெறும் அனைத்து விதமான உள்ளூர் கிரிக்கெட்டில் இருந்து விடை பெறுவதாக அறிவித்துள்ளார். மேலும் இதுநாள் வரை தமக்கு ஊக்கம் அளித்த பயிற்சியாளர்கள் வாய்ப்பளித்த கேரளா மற்றும் இந்திய அணி நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்துள்ள அவர் பிசிசிஐ மற்றும் ஐசிசி ஆகியவற்றின் கீழ் விளையாடியதற்கு மிகவும் பெருமைப்படுவதாக தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : ஷேன் வார்னின் இந்த சாதனையை கனவில் கூட யாராலும் நினைத்து பார்க்க முடியாது – மனம்திறந்த அஷ்வின்

இருப்பினும் இந்தியாவை தவிர வெளிநாடுகளில் நடைபெறும் டி20 தொடர்களில் பங்கேற்கும் எண்ணம் அவரிடம் உள்ளதாக தெரியவருகிறது. மொத்தத்தில் ஒரு ஜாம்பவானாக உருவாக வேண்டிய ஸ்ரீசாந்த் இன்று தவறான வழியில் சென்றால் என்ன ஆகும் என்பதற்கு முன் உதாரணமாக ஒரு வில்லனாக ஓய்வு பெற்றுள்ளார் என்றே கூறலாம்.

Advertisement