2 – 0 என சரிந்தும் கொதிதெழுந்த தென்னாப்ரிக்கா – ஆஸிக்கு வரலாறு காணாத தோல்வியை பரிசளித்து.. உலக சாதனை வெற்றி

South Africa.jpeg
- Advertisement -

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆஸ்திரேலியா அங்கு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. குறிப்பாக இந்தியாவில் நடைபெறும் 2023 ஐசிசி உலகக்கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெற்ற அத்தொடரில் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற ஆஸ்திரேலியா 2 – 0 என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றதால் எளிதாக கோப்பையை வெல்லும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் 3வது போட்டியில் வென்ற தென்னாப்பிரிக்கா தக்க பதிலடி கொடுத்து கோப்பையை வெல்லும் வாய்ப்பை தக்க வைத்தது.

அதை விட 4வது போட்டியில் ஹென்றிச் க்ளாஸென் 164 ரன்களும் டேவிட் மில்லர் 84* ரன்களும் விளாசிய உதவியுடன் ஆஸ்திரேலியாவை அடித்து நொறுக்கி துவம்சம் செய்த தென்னாப்பிரிக்கா 416 ரன்கள் குவித்து மெகா வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது. அதனால் 2 – 2 என்ற கணக்கில் சமனடைந்த தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் முக்கியமான கடைசி போட்டி செப்டம்பர் 17ஆம் தேதி வாண்ட்ரஸ் கிரிக்கெட் மைதானத்தில் நகரில் நடைபெற்றது.

- Advertisement -

மாஸ் கம்பேக் வெற்றி:
அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் வந்து பேசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா 50 ஓவர்களில் மீண்டும் அதிரடியாக விளையாடி 315/9 ரன்கள் குவித்து அசத்தியது. குறிப்பாக கேப்டன் பவுமா 0, டீ காக் 27, வேன் டெர் டுஷன் 30, ஹென்றிச் க்ளாஸென் 6 என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டானதால் 103/4 என தடுமாறிய தென்னாப்பிரிக்காவுக்கு மிடில் ஆர்டரில் அதிரடியாக விளையாடிய கேப்டன் ஐடன் மார்க்ரம் அதிகபட்சமாக 93 (87) ரன்கள் எடுத்தார்.

அதை பயன்படுத்தி கடைசிக்கட்ட ஓவர்களில் டேவிட் மில்லர் 63 (65), மார்கோ யான்சன் 47 (22), பெலுக்வியோ 38* (19) ரன்கள் விளாசி நல்ல ஃபினிஷிங் கொடுத்த நிலையில் ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக ஆடம் ஜாம்பா 3 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து 316 ரன்களை துரத்திய ஆஸ்திரேலியா மீண்டும் பெரிய ரன்களை துரத்த வேண்டிய அழுத்தத்தில் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 34.1 ஓவரில் 193 ரன்களுக்கு சுருண்டது.

- Advertisement -

டேவிட் வார்னர் 10, ஜோஸ் இங்லிஷ் 0, அலெக்ஸ் கேரி 2, க்ரீன் 18 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றத்தை கொடுத்து அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் மிட்சேல் மார்ஷ் 71 ரன்களும் லபுஸ்ஷேன் 43 ரன்களும் எடுத்தனர். அதனால் 122 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக மார்கோ யான்சன் 5 விக்கெட்களையும் கேசவ் மகாராஜ் 4 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

அதனால் 3 – 2 (5) கணக்கில் இத்தொடரை வென்ற தென்னாப்பிரிக்கா ஒருநாள் கிரிக்கெட்டில் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2 – 0 கணக்கில் ஆரம்பத்திலேயே பின்தங்கியும் அதன் பின் கொதித்தெழுந்து கோப்பையை வெல்வது இது 3வது முறையாகும். இதற்கு முன் 2003இல் பாகிஸ்தானுக்கு எதிராகவும் 2016இல் இங்கிலாந்துக்கு எதிராகவும் இதே போல் வென்றுள்ள அந்த அணி இதையும் சேர்த்து வரலாற்றில் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2 – 0 என்ற கணக்கில் பின்தங்கியும் கடைசியில் 3 – 2 (5) என்ற கணக்கில் அதிக முறை கோப்பையை வென்ற அணி என்ற உலக சாதனை படைத்துள்ளது.

இதையும் படிங்க: என்னா மனுஷன்யா.. இலங்கை மைதான பராமரிப்பாளர்களுக்கு ஜெய் ஷா அறிவித்த மெகா பரிசு தொகை.. ரசிகர்கள் பாராட்டு

இதற்கு முன் 2005இல் ஜிம்பாப்வேவுக்கு எதிராக வங்கதேசமும் 2019இல் இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியாவும் இதே போன்ற வெற்றியை தலா 1 முறை மட்டுமே பதிவு செய்துள்ளன. மறுபுறம் வரலாற்றிலேயே முதல் முறையாக 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2 – 0 என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றும் கடைசியில் 3 – 2 என்ற கணக்கில் வரலாறு காணாத தோல்வியை ஆஸ்திரேலியா சந்தித்துள்ளது.

Advertisement